உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

விலைகள் ஏறியபடி உள்ளனவே என்றால், இதைக் கூறி, அரசியல் இலாபம் தேடப் பார்க்கிறான் என்கிறார்கள்.

ஊழல் மலிந்திருக்கிறதே, ஊடுருவிக் கிடக்கிறதே என்றால், எத்தனையோ நாடுகளில் இதுபோல என்று சமாதானம் கூறுகின்றனர்.

தம்பி! எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கின்றனர்; திரித்துக்கூற முற்பட்டுவிடுகின்றனர். ஏடுகளிலே மிகப்பல இதற்குத் துணைசெய்கின்றன. இந்நிலையில், இவ்வளவு பேர்களாகிலும், துணிந்து பேசுகின்றனரே என்பது உள்ளபடி பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதே.

நாடே போர்க்கோலம் பூண்டுவிடும் நேரத்தில், நானும் அதில் கலந்திருந்தேன் என்று கூறிக்கொள்வதிலே கிடைத்திடும் பெருமை அதிகமில்லை; இன்று நம்முடன் நாட்டவரில் பலர் இல்லை, நல்லறிவு கொளுத்தி நல்லாட்சி காணப் பாடுபடும் கடமையுடன் பணியாற்ற வேண்டிய இதழ்களில் பல இல்லை என்ற நிலையில், எவர் வரினும் வாராதுபோயினும், இன்னலுடன் இழிவு சேர்ந்து வந்து தாக்கினும், இவன் நமக்காகப் பாடுபடுகிறான் என்பதனைக் கூறிடவும் பலருக்கு நினைப்பு எழாது போயினும், எத்தனை சிறிய அளவினதாக இப்படை இருப்பினும், இதிலே நான் இருந்து பணி புரிவேன்; என் இதயம் இடும் கட்டளையின்படி நடந்திடுவேன்; என் நாட்டைக் கெடுக்கவரும் எதனையும், எவரின் துணைகொண்டு வந்திடுவதாயினும், எதிர்த்து நிற்பேன், சிறைக்கஞ்சேன், சிறுமதியாளர்களின் கொடுமைக்கஞ்சேன், செயலில் வீரம், நெஞ்சில் நேர்மை, உறுதிகொண்டிட்டேன், செல்வேன் செருமுனை நோக்கி என்று சென்று அணிவகுப்பில் சேர்ந்துளரே அவர்க்கே பெருமை அளவிலும் தரத்திலும் மிகுதி! மிகுதி!

அத்தகைய அணிவகுப்பில் தம்பி! நீ உள்ளாய்; அகமகிழ்ச்சி எனக்கு அதனால்; உன் ஆற்றல் நானறிவேன், நானிலம் அறியும் நாளும் வந்தேதீரும். பூத்த மலரிலெல்லாம் வாசம் உண்டு; நுகர்வோர் குறைவு என்றால், மலர்மீது அல்ல குற்றம். இதோ இந்தப் பொங்கற் புதுநாளன்று, எத்தனையோ இல்லமதில், என் அப்பா சிறை சென்றார்! என் அண்ணன் சிறை சென்றான்! என் மகன் சிறை சென்றான்! செந்தமிழைக்