உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

லாதரவு கிடைத்திடுவதைத் தடுத்திடும் நோக்குடன் செய்து வருகின்றனர்.

தம்பி! தம்பி!! தூய தமிழுக்காகப் பேசிப்பார்! ஓ! இவனுக்கு ‘மொழி வெறி’ என்று கூறிக் கிளம்புவர் கோலோச்சும் குணாளர்கள்.

சங்கத் தமிழ் மணக்கும் தமிழகத்தவர்க்கும் சேர்ந்தா இந்தியெனும் ஆட்சிமொழி என்று கேட்கின்றோம்; தேச பக்தி அற்றவர்கள் என்றன்றோ தூற்றப்படுகின்றோம்?

கண்ணீர் வடித்திடுகின்றனரே பல லட்சம் தமிழர் கடல் கடந்து சென்றுள்ள நாடுகளிலே, கொடுமையாளர்களால் என்று பேசும்போது, இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பகைமூட்டுகிறான்; பாதுகாப்புச் சட்டத்தின்படி இவனைப் பிடித்தடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.

தொழில்கள் மிகுதியாக நாட்டின் ஓர் பகுதியில் குவிந்திடல், பொருளாதார ஏற்றத்தாழ்வை உன்டாக்கிடும்; எனவே, புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தென்னகத்தில் புதுப்புதுத் தொழிலைத் துவங்கிடுக! என்று கூறிடுவோரை ‘பாரதப் பண்பு’ அற்ற மாபாவிகள் என்று ஏசுகின்றனர்.

தொழிலில், பெருத்த வருவாய் தரத்தக்கனவற்றை எல்லாம் முதலாளிகளிடம் விட்டுவிடுகின்றீர்களே, இதுவோ சமதர்மம் என்று கேட்டிடின், இவன் தொழில் வளர்ச்சியைக் கெடுக்க முயலுகிறான் என்று கூறுகின்றனர்.

சர்க்கார் துவக்கி நடத்தும் தொழில்களில், தக்க வருவாய் பெறவில்லையே! இது முறையல்லவே! என்று பேசிடின், இவன் சர்க்கார் துறையை வெறுப்பவன், சுதந்திரக் கட்சியினனாகிறான் என்று கலகப் பேச்சை மூட்டிவிடுகின்றனர்.

கண்மண் தெரியாமல் கடன் வாங்கிக்கொண்டு போகிறீர்களே, இது பெருஞ்சுமையாகிவிடுமே, எதிர்காலச் சந்ததி இடர்ப்படுமே! என்று கூறிடின், நாடு வளம் பெற வழிதேடினால் இவன் குறுக்கே நிற்கிறான் என்று குறைகூறுகின்றனர்.