உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

பாரதியார்‌ கதைகள்‌

சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவி யிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லக்ஷிமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு வைத்துக் கொள். குழந்தாய், ஸோமு, அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் ஸந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்” என்றாள்.

அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. “அத்தை யருமை செத்தால் தெரியும்“ என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில், ஸோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய ஹிம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரே யடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மஹிமை பொருந்திய தெய்வ மாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தை-