உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகையின்‌ கதை

257

யெல்லாம் படைத்துக் காப்பவளாகிய ஸக்ஷாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். ”புருஷ ஏவேதம் ஸர்வம்”—என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ”ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்”—உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும், பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரஹங்களாக வணங்குதற்குரியர். அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத் தக்கவள். இதனைக் கருதியே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதய்யர் காமம், குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக் கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி, கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும் ஸமயங்களுமிருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாக்ஷியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பரஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச்