258
பாரதியார் கதைகள்
செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். ”பாவத்தின் கூலியே மரணம்” என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள்.
எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப் பட்டவரல்லர். பெரும்பாலும், இப்பாவத்தை அவர் மானஸிகமாகச் செய்து வந்தவரே யல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுஸரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:— “அன்ய ஸ்திரீகளுடன் ஸம்பந்தப் படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்காட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவி யொழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட் பட்டவனே யாவான்” என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் ஸாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனை யடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபஹரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.