உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகையின்‌ கதை

259

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் ஸுலபம், முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித ஹ்ருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் ஸுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித ஹ்ருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அஸாத்தியமன்று. ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் “இளமையிற் கல்” என்று உபதேசம் புரிந்தனர்.

எனிலும், வருந்தினால் வாராததொன்று மில்லை. மனித ஹிருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே ஸோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புஜித்துக்கொண்டு செய்யும் தவத்தை இங்க பேச வில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை—அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை—ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய ஸாதனங்களில் மிக உயர்ந்தது தவம்.

அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்திரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம், பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரண-