உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

பாரதியார்‌ கதைகள்‌

மாவது, பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.

இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும், இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச் சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அஃதே மோக்ஷ வீட்டின் கதவு. அன்பே மோக்ஷம். அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மஹா முக்திக்குக் கருவியாகக் கூறினார். 'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோக்ஷத்துக்கு வழியென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும் வழிபடுதலும்—அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்—இல்லாதோன் கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்.