உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

நாம் சொல்லி வருவதெல்லாம், இந்தி, இந்தியாவின் ஒரு பகுதியினரின் தாய்மொழி, அதனை இந்தியாவின் ஆட்சிமொழி என்று ஆக்குவது அடாது, ஆகாது, பெரும்தீது; அது இந்தி பேசாத மக்களை அநீதிக்கு ஆட்படுத்தும், இரண்டாந்தரக் குடிமக்களாக்கும். ஆகவே, அதனை ஒப்பமாட்டோம், எதிர்க்கிறோம் என்பதாகும்.

இந்த அடிப்படை மாறாது என்பது மட்டுமல்ல, நாம் மட்டுமே கூறிக்கொண்டு வருகிற இந்த அடிப்படையை இன்று வேறு பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

நான், மாநிலங்கள் அவையில் பேசியானதும், பிற்பகல், இந்தியின் தீவிரக் கட்சியான ஜனசங்கத்தைச் சார்ந்த வாஜ்பாய் பேசினார். அவர் என்னையும் நான் சொன்ன கருத்துக்களையும் பலமாகத் தாக்குவார் என்ற நப்பாசை பலருக்கு இருந்தது.

அவரோ, அண்ணாதுரை சொல்லுகிற பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்ற திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வாஜ்பாய், மாறுபட்டது எதிலே என்றால், 14-மொழிகளும் ஆட்சி மொழிகளாகக் காலம் பிடிக்கும்; அதுவரை ஆங்கிலம் தொடர்ந்து இருக்கட்டும் என்பதிலே தான். அவருடைய கருத்து இப்போதே 14 மொழிகளும் ஆட்சி மொழிகளாகி விடட்டும், ஆங்கிலம் அகற்றப்படட்டும் என்பது.

இதிலே நமக்கு என்ன ஆட்சேபம்! நாளைக்கே நமது தமிழ் மொழி, இந்தியாவின் ஆட்சி மொழியாகி அரியணை ஏறினால், ஆங்கிலம் நமக்கு ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது!

இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற சர்க்கார் கொள்கை விடப்பட்டு, இந்திக்காகச் சர்க்கார் பணம் செலவிட்டுப் பரப்பும் முயற்சியை நிறுத்திக்கொண்டு, பதினான்கு மொழிகளும் இந்தியா-