182
போக்கும் நிறுத்தப்பட வேண்டும் என்பது. இந்த இரண்டும் சர்க்காரால் கைவிடப்பட வேண்டும்; ஐயா! இதனைச் செய்ய உம்மால் முடிந்து, செய்துவிட்டு வந்தால், பிறகு இந்தி பரப்புவதற்கு உதவி கேளும், செய்கிறேன் என்று நான் கூறியிருக்கிறேன்.
என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர், சாஸ்திரி சர்க்காரிடம் பேசி, இந்தி ஆட்சிமொழி ஆக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடச் செய்யவேண்டும் முதலில்! செய்கிறாரா பார்ப்போமே!! அந்த முறையில், I will take up the challenge— நான் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் நான் பேசினேன். இதை விடத் தெளிவாகப் பேசியிருக்க முடியாது என்றும் நம்புகிறேன். இதனை வைத்துக்கொண்டு முதலமைச்சராகட்டும், மற்றவர்களாகட்டும், வேடிக்கை பேச என்ன காரணம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. போகட்டும். எத்தனையோ விதமான கலக்கத்தில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு, என் பேச்சு, சில விநாடி வேடிக்கைக்குப் பயன்படுவது பற்றி மனக்குறை கொள்வானேன்? நடந்தது முழுவதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புப் பெறுபவர்கள், உண்மையை அறிந்துகொள்வார்கள்.
இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திடத் தொடங்கிய நாள்தொட்டு, நாம் தெளிவாக, ஒன்று கூறி வருகிறோம்: எங்களுக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை; இந்தியை நாங்கள் அந்த விதத்தில் எதிர்க்கவில்லை; அது இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம்.
நமது கழகத்தின் தீர்மானம் தேசீய மொழிகளெல்லாம் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்பதாகும். அந்தப் பதினான்கு மொழிகளில் இந்தியும் ஒன்று.
இந்தியை அந்தப் பதினான்கு மொழிகளில் ஒன்று என்று கொள்ளமாட்டோம், கொள்ளக்கூடாது என்று நாம் சொன்னதுமில்லை; சொல்லப்போவதுமில்லை; சொல்லுவதில் நியாயமுமில்லை.