உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சட்ட எரிப்பும்/பெரியாரும் சட்டயெரிப்பும்!

விக்கிமூலம் இலிருந்து
பெரியாரும் சட்டயெரிப்பும்!

"இன்று வரையில் குற்றங்கள் என்று கருதப்படாமல் இருந்து வந்த சில செயல்கள், இனி 3 ஆண்டுகளுக்கு தண்டிக்கத்தக்க கடுமையான குற்றங்கள் என்று தெரிவிக்கும் இந்த மசோதாவை நான், தீதானது — தேவையற்றது —கொடுங்கோன்மைக்கு வழி கோலுவது என்று கூறிக் கண்டிக்கிறேன் என்று சொன்னால், நான் இந்தக் காரியங்களிலே பங்கு எடுத்துக்கொள்கிறவன் என்று நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இதனை வார்த்தையால் மட்டும் சொல்லவில்லை. முன்பு ஒரு சமயத்தில் தேசீயக் கொடி எரிக்கப்பட வேண்டும் என்று கிளர்ச்சி நடந்த நேரத்தில் நான் அதிலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்ல — அது தவறானது என்று வெளிப்படையாகக் கண்டித்தேன். ஆகையினால் நான் இன்றையதினம், இந்தச் சபையின் முன்னாலே இருக்கின்ற இந்த மசோதா தீதானது — தேவையற்றது — கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது என்று கூறினால், அதன் மூலமாக தேசியச் சின்னத்தை, தேசீய கெளரவத்தை பங்கப்படுத்த வேண்டுமென்றுநான் வாதாடுகின்றேன் என்று பொருள் அல்ல. தேசிய கௌரவம் என்பது பரம்பரை பரம்பரையாக நாட்டு மக்கள் உள்ளத்திலே ஊடுருவிப் பாய வேண்டிய ஒன்றாகும். சட்டத்தின் மூலம் தேசீய கெளரவத்தை நிலைநிறுத்திவிட முடியாது.

"தேசீய கௌரவத்திற்கு கௌரவத்திற்கு இழுக்கை உண்டாக்கிக் கொண்டிருப்பவர்களை சும்மா விட்டுக்கொண்டிருக்க முடியுமா? பைத்தியக்காரர்கள் என்றால் அவர்களை பிடித்து உள்ளே போடத்தான் வேண்டும் — சட்டம் இருக்கிறது" என்பதாகப் போலீஸ் அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.

"ஒரு நாட்டிலே பைத்தியக்காரர்கள் குறைவாக இருப்பது நாட்டுக்கும் நல்லது ; ஒரு நாட்டிலே பைத்தியக்காரர்கள் குறைவாக இருப்பது என்பது, நாட்டு ஆட்சிக்கும் பெருமை. 'எங்கள் நாட்டிலே பைத்தியக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ; அவர்களை அடக்கச் சட்டங்கள் போட்டு இருக்கிறோம்' என்று சொல்வது போலீஸ் அமைச்சருக்கோ, அவருடைய நிர்வாகத்துக்கோ பெருமையைத் தேடித்தராது — அதிகமான இழுக்கைத்தான் தேடித்தரும் என்பதை மறந்துவிட முடியாது. ஆகவே, தேசீய கெளரவத்தைப் பாதுகாக்கப் புதிய சட்டங்கள் தேவை இல்லை" என்று சொல்லுகிற நேரத்திலே, 'யாரோ ஒரு பைத்தியக்காரர் காந்தியாரின் டத்தைக் கொளுத்துகிறார் என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?' என்று இவர்கள் — சட்டத்தைக் கொண்டுவரும்போது, ஒன்று சொல்லிகொள்வேன் நீங்கள் காந்தியாரின் உயிரைக் காப்பாற்றத் தயாராய் இல்லாவிட்டாலும், காந்தியாரின் படத்தைக் காப்பாற்றவாவது முயற்சி எடுத்துக்கொண்டீர்களே, பெருமைதான்' என்று கூற விரும்புகிறேன்.

"சாதி வெறியினால்தான் காந்தியார் கோட்சேயினால் கொல்லப்பட்டார் என்பதும், சாதி வெறியை அடக்க காந்தியார் முயற்சி எடுத்ததுதான் காந்தியாரின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த உண்மை.

"காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட சாதி வெறியை — மதவெறியை அடக்குவதற்கு நாங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், அதைப் பாராட்டுவேன்; உலகம் உங்களைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்.

"ஒன்றை நான் இந்த மன்றத்தில் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ; காந்தியாரின் சமாதிக்கு மாலை போட்டுவிட்டு கதர் கட்டிக்கொண்டிருக்கிற காங்கிரசுக்காரர்கள் தாம் இன்றைக்கு இருக்கிறார்கள் ; இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் பெரியாரின் மாளிகையில் தங்கி இருந்தவர்கள்தாம். காந்தியார் சாதி வெறியனால் கொல்லப்பட்ட நேரத்திலே, காந்தியார் இருந்த இந்த நாட்டுக்கு 'காந்தி நாடு என்பதாகவும், இந்நாட்டிலுள்ள மதத்திற்கு 'காந்தி மதம்' என்றும் பெயர் வைக்க வேண்டுமென வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார்தான் என்பதை அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் மறந்திருக்கலாம்; ஆனால் நாடு மறந்திருக்காது; நாட்டு மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

"காந்தியார், பெரியாரின் மாளிகையிலே தங்கியிருக்கிறார்; காந்தியின் நினைவாக, தன் தமக்கையின் பெண்ணுக்கு பெரியார், 'காந்தி' என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

காந்தியாரை வைத்துக்கொண்டு காங்கிரசு கட்சியார்தன் செல்வாக்கை அதிகமாகிக்கொண்டதன் காரணமாக — அன்றைக்கு அவர் உயிரைக் காப்பாற்ற முன்வராவிட்டாலும் —அவர் படத்தையாவது காப்பாற்றுவோம் என முன் வந்திருக்கிறவர்கள், ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் —

'காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன்; அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்' என்று பெரியார் சொன்னார் என்றால், அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல ; தேசீயக் கொடிக்கு — தேசீயச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால் அல்ல; இவைகளை எந்தக்காரணத்திற்காகக் கொளுத்தச் சொல்கிறேன் — கிழிக்கச் சொல்கிறேன்' என அவர் எடுத்துச் சொல்கிறாரோ, அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்குவதற்கு சர்க்கார் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். என்பதற்காக — அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காகச் சொல்லப்படுகிற விஷயங்கள்தான். அவைகளின் பேரில் அவருக்கு வெறுப்பு இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்; அதை உணர்ந்துகொண்டு அவர் எந்தக் காரணங்களுக்காக உள்ளம் குமுறிக்கொண்டிருக்கிறாரோ அதை நிறைவேற்ற, இவர்கள் ஏற்பாடு செய்தார்களா? அவைகளைச் செய்யாத வரையில், திரு. சங்கரன் சொன்னதுபோல, மூன்றுக்குப் பக்கத்திலே ‘சைபரை'ப் போட்டு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றாலும் கூட, இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறது — என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்தரம் அடைந்து எட்டாண்டுக்காலம் ஆன பிறகும்கூட, சாதி ஒழிப்புக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியின் அறிவிப்புத்தான் பெரியாரின் செய்கை.

"எங்கள் தேசீயச் சின்னங்களுக்கு அவமானத்தை உண்டாக்குவது என்றால், எங்கள் அரசியல் சட்டத்திற்கு இழிவை உண்டாக்குவது என்றால், அதை எப்படித் தடுக்காமல் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்?' எனப் போலீஸ் அமைச்சர் கூறி, ' அப்படிச் செய்கிறவர்களுக்கு மூன்று வருடத் தண்டனை அளிக்கப்படும்' எனச் சொல்லலாம் ; திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் 'அதை இன்னும் கூடுதல் ஆக்கவேண்டும்' என்று சொல்லலாம். இந்த அளவில் திரு. சங்கரன், 'மூன்று வருடத்தை முப்பது வருடம் எனத் திருத்தவேண்டும்' என்று பேசலாம் உண்மையில் இவர்கள் எல்லாம், அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று யோசிக்கிறார்களே தவிர, நோயினுடைய மூலகாரணத்தை அறிந்துகொள்ளச் சற்று யோசிக்கத் தவறிவிட்டார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.

'பைத்தியக்காரன்' என்ற உதாரணத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்; சிலர் உண்மையிலேயே பைத்தியக்காரர்களாக இருக்கலாம். அவன் கருத்துக்கு ஒவ்வாத கருத்தை இவன் சொன்னாலும், பைத்தியக்காரன் என்று பிறரால் இவன் பட்டம் சூட்டப்படுகிறான். கனம் போலீஸ் அமைச்சர் அவர்கள், 'பைத்தியக்காரனை அடக்க சட்டம் இல்லையா; அப்படித்தான் இது' எனப்பேசியபோது, 'பைத்தியக்காரன் என்று யாரைச் சுட்டுகிறீர்கள்; பெரியாரையா?' என்று திரு. பழனிசாமி கேட்க, ‘அப்படி நான் குறிப்பிடவில்லை' என அவர் மறுத்ததை, அரசியல் பெருந்தன்மை என்ற முறையில் நான் வரவேற்கிறேன், ஆனால் அவர் பேசிய பேச்சு, இந்த எண்ணத்திற்குத்தான் சபையில் உள்ளவர்களை இழுத்துக்கொண்டு செல்லும்.

ஆகையால், அவர் ஒப்புக்கொள்வது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், பைத்தியக்காரர்களை அடக்குவதில் வீட்டாருக்குள்ள பொறுப்பு வேறு — நாட்டாருக்குள்ள பொறுப்பு வேறு — அரசியலாருக்கு உள்ள பொறுப்பு வேறு ! பைத்தியக்காரன் என்றால் அவன் வீட்டார் அவன் பைத்தியத்திற்குக் காரணமான 'மனப் பிராந்தி'யை எப்படிப் போக்குவது என்றே முயற்சி செய்வார்கள், அந்த முறையில், பெரியார் அவர்களுடைய மனக்குமறலை — இப்படியெல்லாம் யெல்லாம் அவர் செய்வேன் என்று சொல்லுவதற்கு மூலகாரணமான மன எழுச்சியை — இவர்கள் போக்குவதற்கு என்ன செய்தார்கள்? இவர்கள், பெரியாரை ஒரு பைத்தியக்காரர் என்று சொன்னாலும் கூட, எண்பது ஆண்டுகள் சென்ற பெரியார், தமிழகத்தில் மிகச் சிறந்த செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களில் யாரும் மறுக்க முடியாது ; 'அந்தச் செல்வாக்கு தங்களுக்கு இன்றைக்குப் பயன்படவில்லையே தவறான வழியில் - நமக்கு அனுகூலமில்லாத வழியில் ஓடப் பார்க்கிறதே' என்று இவர்கள். இன்றைக்குச் சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

'தீண்டினால் திருநீலகண்டம்' என்று இவர்கள், அவரை இத்தனை நாளும் ஒதுக்கிக் கொண்டிருக்கவில்லை, திரு. கல்யாணசுந்தரம் அவர்களும் பெரியாரின் உதவியை ஒரு காலத்தில் பெற்றிருக்கிறார்கள்; காங்கிரசுக்கும் அவருடைய பேராதரவு கிடைத்திருக்கிறது; அவருடைய பேருழைப்பைப் பெற்றுத்தான் இங்கு வந்திருக்கிருர்கள் ; ஆனால், அவருடைய ஆதரவை இதுவரையிலும் பெறாதவன் யாராவது ஒருவன் இங்கு இருக்கின்றான் என்றால், அது நான் தான்.

"நான் அவருக்காக வாதாடுகின்ற நேரத்திலே, நீங்கள் எல்லாம், அவரை எந்தக் கூண்டிலே தள்ளுவது என்று பேசுவதும், தள்ளுகின்ற கூடு இரும்புக்கூடாக இருக்க வேண்டுமென திரு. கல்யாண சுந்தரம் சொல்வதும், 'இரும்பு கூட்டில் தள்ளினால் போதாது; அதற்குப் பெரிய பூட்டாகப் போட்டுப் பூட்ட வேண்டும்' என திரு. சங்கரன் சொல்லுவதும் இன்றைய அரசியல் உலகத்தில் ஏற்பட்டிருக்கிற விசித்திரமான நிலைமை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

'ஒன்றைச் சொல்லிக்கொள்வேன்; குற்றம் என்று சொன்னால், நான் படித்த அகராதியில் — அது சாதாரண அகராதிதான்; சட்ட அகராதி அல்ல — any offence committed against public laws and which is anti to social welfair — என்றுதான் பொருள் இருக்கிறது,

சட்டங்களுக்குப் புறம்பாகச் செய்வது குற்றம் — இப்போதுதான் புதிதாகச் சட்டம் செய்கிறோம் என்ற காரணத்தினால், அந்தப் பொருள் தேவை இல்லை. சமுதாயத்தில் உள்ள நன்மைகளைப் பாதிக்கக்கூடிய செயல், குற்றங்கள் என்று சொன்னால், சட்ட நிபுணர்கள் இங்கே இருக்கிறார்கள்; சட்டம் செய்வதற்கு முன்னால், எந்த வகையில் அந்தச் செயல் சமுதாயத்தைப் பாதிக்கிறது என்று அவர்கள் பார்த்துச் சொல்ல வேண்டும். உங்கள் கௌரவத்தை அது பாதிக்கலாம்; நீங்கள் சார்ந்து வளர்ந்து இருக்கிற இயக்கத்திற்கு இழிவு என்று கருதலாம்; ஆனால், சமுதாயத்தைப் பொறுத்த அளவில் எந்த மாதிரியாகப் பாதிக்கிறது? சமுதாயப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறதா? சமுதாய அரசியல் வாழ்வை பாதிக்கிறதா ? சமுதாயத்தின் மானத்தைப் பாதிக்கிறதா?

"சமுதாயத்திலே மிகவும் ஊன்றி இருக்கும்படியான உணர்ச்சி, மத உணர்ச்சி! 'யுகம் யுகமாக, அநாதி காலம் தொட்டு இருப்பது அவ்வுணர்ச்சி' என்று சொல்வார்கள். இன்றைக்கு தேசீயச் சின்னங்களைக் கொளுத்துவதற்கு முன்னர், அன்றைக்கு, மதச் சின்னங்களை — பிள்ளையார் விக்ரகத்தையும், இராமர் படத்தையும் — பெரியார் அவர்கள் உடைத்துக் கொளுத்தினார்களே, அந்த நேரத்தில் நீங்கள் என்ன சொன்னீர்கள் ? 'பிள்ளையார் உருவத்தை அவர் உடைக்க உடைக்கத்தான் பிள்ளையாருக்கு அதிகப் பெருமை உண்டாகிறது என்று ரொம்ப யுக்தியாகச் சொன்ன உங்கள் வாதம் இந்த நேரத்தில் மங்கிப்போய் விட்டதா? அன்றைக்குப் பிள்ளையாரைப் போட்டு உடைத்து, இராமர் படத்தைக் கொளுத்திக்கொண்டிருந்த போது, சமுதாய மக்களின் உள்ளத்திலே ஆழ்ந்து பதிந்து இருக்கும்படியான உணர்ச்சி பண்பட்டிருக்காதா? அப்போது, 'அதனால் தான் பிள்ளையார் பெருமை உயர்கின்றது' என்று சொல்லிச் சும்மா இருந்த நீங்கள், அந்தத் தத்துவத்தை உண்மையாக உணர்ந்து பேசியிருந்தால், இப்போது இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு அவசியம் என்ன ? இதனால் யாருடைய மனம் புண்படும்? இந்தக் காரியம் ஏற்கனவேயே கண்முன்னால் செய்து காட்டப்பட்டுவிட்டது.

"பாட்னா நகரத்தில் கிளர்ச்சி செய்யப்பட்ட நேரத்தில் காந்தியார் படத்தைக் கொளுத்தியிருக்கிறார்கள் ; நேருவுக்குக் கொடும்பாவி கடடி இழுத்திருக்கிறார்கள் ; அரசியல் சட்டத்தைக் கிழித்தெறிந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நீங்களே அரசியல் சட்டத்தை ஏழு ஆண்டுகளுக்குள் பத்து தடவை கொளுத்தியிருக்கிறீர்கள். அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் காரியத்தைத் தான் ரொம்ப நாகரீகமாகப் பத்து தடவை திருத்தியிருக்கிறீர்கள். ரொம்பப் புனிதமான சட்டம் என்று போற்றப் படுகிற அந்தச் சட்டம் உங்களாலேயே திருத்தப்படுவது என்றால் என்ன? 'கொளுத்தப்பட்டது' என்றுதான் ஆகிறது......

கனம் திரு, சி. சுப்பிரமணியம்; 'இந்த வார்த்தையை நான் அறிஞரிடத்தில், இருந்து எதிர் பார்க்கவில்லை,'

அண்ணா:—"நமது போலீஸ் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள் — 'நாங்கள் எல்லாம் அரசியல் சட்டத்தை வேதம் என்று வைத்துக்கொண்டிருக்கிறோம்' என்பதாக! அதை அவர்கள் வேதமாக வைத்துக் கொண்டு பூசிப்பதை யாரும் தடுக்கமாட்டார்கள் ; ஆனால், மிகப் பெரும்பாலோராக இருக்கின்ற அவர்களால் அந்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகள் திருத்தப்பட்டால் அது புனிதமானதாகவும் மிகச் சிறுபான்மையோராக இருக்கக் கூடியவர்கள் அதில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டுமென்று சொன்னால் அது குற்றமாகவும் ஆகுமா ? மிகப் பெரும்பாலோராக இருக்கக் கூடியவர்கள் ஒரு காரியத்தையே செய்யத் துணிந்த பிறகு, மிகச் சிறுபான்மையினராக இருக்கக் கூடியவர்கள் அந்தக் காரியத்தைச் செய்ய முற்படும் போது, சட்டத்தினால் மட்டும் 'அப்படிச் செய்யக்கூடாது' என்று தடுத்துவிட முடியாது.

"சட்டங்கள் இயற்றலாம்; சட்டங்கள் இயற்றப்படுவதால் மட்டும் எந்தச் செயலையும் அடியோடு நிறுத்திவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

"சட்டமியற்றப் பழக்கப்பட்டவன் அல்ல நான் ; மனதிற்கு சரி என்று பட்ட காரியத்திற்காக அவசியம் என்று ஏற்பட்டால் — சட்டம் குறுக்கிடும் என்று நம்பினால், அந்தச் சட்டத்தைத் துச்சம் என்று மதிக்கிறவர்கள் தமிழ் நாட்டில் இலட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நீங்கள் சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் விடலாம்; ஆனால் 10 ஆயிரம் பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்று ஆண்டு அல்ல — முப்பது ஆண்டு சிறையில் இருக்கத் தயங்க மாட்டார்கள்.

"அமெரிக்க நாட்டிலோ, பிரான்சு நாட்டிலோ, ரஷ்ய நாட்டிலோ ஒரு சமுதாயத்தை இப்படியெல்லாம் அவர்கள் கருதமாட்டார்கள்.

"இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வளவோ மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. யார் தேசீயத் தலைவர் என்று ஏற்றுக்கொள்வதிலோ இன்னும் விவாதம் இருக்கிறது, சிறைக்குச் செல்பவர் 10 ஆயிரம் பேர் என்று அங்குள்ளவர்கள் கருதுவார்களே தவிர, அது நீங்கள் எதிர்பார்க்கிற கவுரவத்தைக் காப்பாற்றுவதாகாது.

"நான் உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் — பெரியார் அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தைத் தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழையகால நடவடிக்கைகளையும், உங்களுக்குள் ஏற்பட்ட தொடர்புகளையும் ஒருகணம் எண்ணிப் பாருங்கள். அவரைச் சுலபத்தில் 'பைத்தியக்காரர்' என்று சொல்லி விடுவீர்களேயானால், நாம் எல்லாம் எந்தெந்தக் காலத்தில் எப்படிப் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவோமோ என்று தோன்றுகிறது. அப்படி அவரை பைத்தியம் என்று சொல்வதற்கு அவர் எடுத்துச் சொல்வதுதான் என்ன ? அவர்கள் சொல்வது அத்தனையும், 'சாதி ஒழியவேண்டும் என்பதுதானே! சாதி இருக்கவேண்டுமென்று இந்திய நாட்டுப் பிரதம மந்திரி பண்டித நேரு கருதவில்லை. 10 நாட்களுக்கு முன்னால் ஒரு வாலிபர் சங்க விழாவில் பேசும் பொழுது நேரு சொன்னார் — 'We are now entering the threshold of third India from out of the second India of Casteism, orthodoxy and superstition' என்று தெளிவுபட எடுத்துப் பேசியிருக்கிறார்.

"மூன்றாவது இந்தியாவைப் பெறுவதற்கு நீங்கள் தயாரிக்கப்படுகிற நேரத்தில் — அவருடைய முறையீடுகளை கவனிக்காத நேரத்தில் — மக்கள் அழுகிற குரலைக் கவனிக்காத நேரத்தில் — சிறுசிறு கிளர்ச்சிகளைக் கவனிக்காமல் இருக்கிற நேரத்தில் பண்டித நேரு, வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லிய அந்த வாக்கியத்தை நான் ஆதாரம் காட்டி உங்களைத் தெளிவாக்கலாம் என்று கருதுகிறேன்.

"பெரியார் ஒரு 'அதிர்ச்சி வைத்தியம்' செய்கிறார். பெரியார் அவர்களை நீங்கள், 'பித்தம் பிடித்தவர்' என்று கருதலாமே தவிர, உலகத்தில் பெரும் பகுதியினர் அவ்வாறு கருதவிலலை.

"உங்களுக்கு இருக்கிற அதிகாரங்களை வைத்துக் கொண்டு — சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு — அதிகார பலத்தை வைத்துக்கொண்டு நீங்கள் சட்டத்தை நிறைவேற்றலாம்; ஆனால், அது உங்களுடைய பலவீனத்தைக் காட்டுமே தவிர, உண்மையான பலத்தைக்காட்டாது.

"மூன்று ஆண்டுகள் — சட்டத்தை மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க — இந்திய அரசியல் சட்டத்தைக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் கர்த்தாவாகிய காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார் — 'இந்த அரசியல் சட்டத்தில் பல்வேறு கோளாறுகள் இருக்கின்றன' — என்று; 'இது எரிக்கத்தக்கது' — என்று ! 'நீர்தானே இந்தச் சட்டத்தைச் செய்தவர்' என்று சிலர் அவரைக் கேட்க, 'நீங்கள் சொல்லி செய்யப்பட்டதே தவிர, ஏற்றுக்கொள்ள முடியாத, மனதிற்கு ஒவ்வாதபல கருத்துக்கள் இருக்கின்றன' — என்று சொன்னார்கள்.

" அரசியல் சட்டத்தில், இன்றைய தினம் உள்ள நாக நாட்டு நிலைமையைப் பற்றி நாளைக்கு ஒரு திருத்தம் கொண்டுவர இருக்கிறார்கள். இந்த 7 ஆண்டுகளிலே அரசியல் சட்டத்தில் 10 தடவைகள் திருத்தங்கள் கொடுத்தீருக்கிறார்கள். திருத்தங்கள் கொடுப்பது என்பது, நாகரீகமான முறையில் சட்டத்தைக் கொளுத்துவதாகும்; 'திருத்துகிறோம்' என்ற பெயரால், 10 தடவை கொளுத்தியிருக்கிறீர்கள், அந்தச் சட்டத்தை !

"மேலும், வெள்ளைக்காரனுடைய துணியைக் கொளுத்தினீர்கள் என்றால், வெள்ளைக்காரர்களையே கொளுத்துவது என்று அர்த்தம் அல்ல; அந்தத் துணிகளைக் கொளுத்துவது என்றும் அர்த்தம் அல்ல !

"அந்தத் துணிகளைக் கொளுத்துவதன் மூலம் சுதேசி உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

"அரசியல் சட்டத்தைக் கொளுத்துவதன் மூலம் அவர்கள், இன்று சாதி அடிப்படையிலே இருக்கும் பல குறைகளை வெளிப்படுத்துவதற்காகத்தான். இப்பொழுது முதலமைச்சராக இருக்கும் திரு. காமராசர் அவர்கள், சென்னையில் பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றில் கலந்து பேசுகையில், 'நான் அதிகாரத்திற்கு வந்தால் நான் செய்யக்கூடிய முதல் காரியம் சாதி ஒழிப்பாகத்தான் இருக்கும்' என்று பேசினார். இதை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் ; நான் கேட்டிருக்கிறேன். ஆகையால், பெரியார் அவர்கள், தன்னுடைய 'செல்லப் பிள்ளை' ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இரவு — பகல் பாராமல் உழைத்து உங்களை உட்கார வைத்திருப்பது, நீங்கள் சாதி ஒழிப்பதற்கு ஆதரவாக இருப்பர்கள் என்ற நம்பிக்கையினால்தான்; ஆனால், அப்படி உங்களை நம்பினவரை நட்டாற்றில் கைவிடுகிறீர்களே என்றுதான் நான் பரிதாபப்படுகிறேன்.

"பெரியார் அவர்கள் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியதைப் பத்திரிகையிலே பார்த்தேன்; பெரியாரோடு நெடுங்காலமாகப் பழகியிருக்கிற எனக்கு, நம்முடைய திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் சொன்ன வாக்கியம் எந்தத் தொனியிலே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த வாக்கியத்தின் அடிப்படை உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். சட்டத்தை அவர் என்றைக்கும் ஏற்றுக்கொள்கிறவர் — மதித்து நடக்கிறவர் என்பதை நான் அறிவேன். அனாவசியமாகக் கிளர்ச்சிகளிலும், கொந்தளிப்புகளிலும் அவர் ஈடுபடுகின்றவர் அல்ல !

"ஜெர்மன் நாட்டிலே கிரீச்சிங்பாம் போட்டார்கள் அது பயங்கரமான ஒரு சத்தத்தை விம்பும்; அதிலே மக்கள் அயர்ந்துவிட வேண்டுமென்று எண்ணினார்கள். அதைப் போல, பலருக்கு ‘அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து' மதமதப்பு அடைந்திருக்கும் சர்க்காரை, கொஞ்சம் சுறுசுறுப்பாக்க வேண்டுமென்று கருதினார்கள். அதைப்போல, சாதி ஒழிப்பிலே பெரியார் அவர்கள், 'கொஞ்சம் தீவிரமாக வேண்டும்' என்று கேட்டுக்கொள்வதில் தவறு என்ன இருக்கிறது.

"நான் வழக்கறிஞன் அல்ல என்றாலும், 'இந்தச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது' என்று சொல்லுவேன். வாதத்தில் சிறந்த வழக்கறிஞராக இருக்கும் போலீஸ் அமைச்சரும், நிதி அமைச்சரும் இருக்கிறார்கள் நான் வழக்கறிஞன் அல்ல என்ற காரணத்தால் என்னுடைய வாதத்திலே ஓட்டை இருப்பதாக எடுத்துச் சொல்லக்கூடும். அதே சமயத்தில் வழக்கறிஞர் அல்லாதவர்களும் சட்டத்தைப் பார்த்தால் அதில் என்ன குறைகள் இருக்கின்றன என்று உணரமுடியும்.

"நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்—இந்திய அரசியல் சட்டத்தில், அவரவர்கள் தங்களுக்குரிய சொத்துக்களைப் பெறுவதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்கும் 19 வது பிரிவில் உரிமை அளிக்கப்படுகிறது; அடிப்படை உரிமை அது. அதனையும் பாதிக்கும் சட்டங்களை இயற்ற சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது. இயற்றப்படும் நேரத்தில் ஆர அமர யோசித்துப் பார்த்து இயற்ற வேண்டுமே தவிர கண்மூடித்தனமாக இயற்றக்கூடாது என்பதை சட்ட நிபுணர்கள் ஒத்துக்கொள்வார்கள்; ஆட்சியாளர்கள் இதைக் கூர்ந்து கவனிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

"அரசியல் புத்தகத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கருதினாலும் — பாதுகாக்க வேண்டுடுமன்று கருதினாலும் — நாசமாக்க வேண்டுமென்று கருதினாலும் அதற்கு அடிப்படை உரிமை தரப்பட்டிருக்கின்ற நேரத்தில், பெரியார் தம் கையிலே உள்ள பணத்தைப் போட்டு ஏடு வாங்கி. தம் மனையில் இரண்டு பக்கத்தைப் படித்துக்காட்டி, 'இதில் குறை இருக்கிறது; சனியன் தொலையட்டும்' என்று சொல்லி அதைக் கிழித்து எறிந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்று நீங்கள் ஏன் கருதக்கூடாது? சட்ட நிபுணர்களும், வழக்கறிஞர்களும் வேறுவிதமாக சொல்லக்கூடும். "அந்த உரிமை மக்களுடைய உரிமைதானே; நீங்கள் குறுக்கிடுவானேன்? 'சோஷல்வெல்பேர்' ஆட்சியாக வேண்டுமென்று இப்படிப்பட்ட சட்டங்கள், கொண்டு வர வேண்டுமா? வேண்டுமென்றால், 'எங்களுக்குப் பிடிக்க வில்லை; எங்கள் காலத்திலேயே இப்படி நடக்கிறீரே' என்று சொல்லுங்கள்.

“திரு. என். கே. பழனிசாமி அவர்கள், 'காந்தியடிகள் தேசபிதாவாக இருந்தார்; அவருடைய படத்தையா இப்படிச் செய்வது?' — என்று கேட்டார். நல்லவேளையாக அப்படிச் சொன்னாரே என்று, மகிழ்ச்சியடைந்தேன். அவர் வணங்கிய பழய தெய்வமாகிய ஸ்டாலின் சிலை தூக்கிப்பேட்டு உடைக்கப்பட்டது என்பதை அவர் இன்றைய தினம் மறந்து பேசுகிறார்.

"ஒருவேளை இவர் ரஷ்யாவில் இருந்தால், குருஷேவை கரத்தைப் பிடித்துத் தடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இவர் இங்கே இருக்கிறார்.

"தேசப் பிதாவின் படங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்று எடுத்துச் சொல்லுகிறார்கள்; தேசபிதாவைப் புகழ்ந்து பேசுகிறார்கள்; 'அவருடைய புனிதத்தன்மை பாழாக்கப் படுகிறது' என்று சொல்லுகிறார்கள்; 'நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும்' என்று குற்றம் சாட்டுகிறார்கள்; இவைஎல்லாம், ஒரு கடுமையான சட்டமியற்றுவதற்காகக் காட்டப்படும் சாக்குகள்!

"பெரியார் இராமசாமி அவர்கள் காமராசர் அவர்களை எந்தவகையில் கருதுகிறார்கள் என்பதை இன்று பார்த்தால், 'ஓங்கி அடித்தாலும் காமராசரின் கரம் வலிக்குமே' என்று தான் பெரியார் கருதுவார்!

"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதுபோல், பெரியார் அவர்களும் என்னைத்தான் தாக்குவாரே ஒழிய, காமராசர் பக்கம் திரும்பமாட்டார். அந்த அளவுக்கு உங்களை நம்பி, பாசம் வைத்திருப்பவரை, பாதி வழியில் சென்று சந்திந்துப்பேசி, தேசியக் கொடியின் கவுரவத்தைக்காப்பாற்றினால் உங்கள் கவுரவம் எப்படிப் பாதிக்கப்படும் என்று அறிய விரும்புகிறேன்.

"திரு.முத்துராமலிங்கதேவர் அவர்களை திரு. காமராசர் அவர்கள் சந்தித்துப் பேசக்கூடாதா என்று கேட்டதற்கு, நம்முடைய நிதி அமைச்சர் ஒரு சமாதானம் சொன்னார். 'காமராசரவர்களுடைய குலத்தையே அவர் தாழ்வாகப் பேசுகிறார்; அப்படிப்பட்டவரோடு எப்படிக் கலந்து உரையாடுவது?' என்று கேட்டார்கள். 'அந்தக் குலத்தைப் பொறுத்து அதிகமாகக் கொந்தளிப்பு ஏற்படும்' என்று சொன்னார்கள்; அது வாதத்திற்கு ஒப்புக்கொள்ளத்தக்கதாக இருககும். ஆனால், பெரியார் — காமராசர் தொடர்பை அப்படிக் கருதமுடியாது. அவர் காமராசரின் அருங்குணங்களை — இதுவரை சொல்லாத அருங்குணங்களை — காமராசருக்கே தெரியாமல் இருக்கும் அருங்குணங்களை அவர் எடுத்துச் சொல்லி, 'அவர் சிறந்த தமிழர்—பச்சைத் தமிழர் — என்னால் வளர்க்கப்பட்ட தமிழரைவிடச் சிறந்த தமிழர்' — என்று சொல்லி, தக்க அளவிலே பாசம் வைத்திருக்கிறார். ஏன் திரு. காமராசர் அவர்கள், பெரியார் அவர்களை ஒருதரம் சந்தித்துப் பேசக்கூடாது?

"பெரியாரை ஒருகணம் சந்தித்து, 'சாதி ஒழிப்புப்பற்றி இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது; சாதியை ஒழிக்கவேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது; நீங்கள் அதைப் பாராமல் இருக்கிறீர்களே' என்று எடுத்துச் சொல்லி, 'சாதி ஒழிப்பு என்பது தங்களுக்குள்ள பிரத்தியேக உரிமையா? சாதி வேண்டுமென்று நாங்கள் சொல்லுகிறோமா? அது உங்களுக்குத் தெரயாதா? எங்கள் அமைச்சரவையில் சாதிக் கட்டுப்பாட்டை மீறி கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்களே?'—என்றெல்லாம் பெரியாரிடம் எடுத்துச் சொல்லி, அவரது முறையை மாற்றுவதுதான் இராஜதந்திரம் ஆகுமேயொழிய, 'எங்களுக்கு மெஜாரிட்டி இருக்கிறது' என்று சொல்லி, கட்சி பலத்தைக் கொண்டு சட்டம் போட்டுக்கொள்வதில் வியப்புமில்லை அதில் யூகமுமில்லை!

"பலமுள்ள ஒரு அரசியல் கட்சி இராஜதந்திர முனையில் வெற்றி பெற்றது—என்று, உலகத்திற்கு நீங்கள் அறிவிக்க வேண்டும். ஆகவே, பெரியாரை தயவுசெய்து சந்தியுங்கள். அவரது மனக்குமுறலை உணர்ந்துகொள்ளுங்கள். அவரது இலட்சியமும் உங்களுக்கு உகந்ததுதான். ஆனால், 'அவரது முறை தவறு' என்று நீங்கள் கருதுகிறீர்கள் ; 'நானும் கருதுகிறேன்' அங்ஙனம் கருதுகிற காரணத்தால்தான் நான், அதில் ஈடுபடாமல் இருக்கிறேன். 'முறை தவறு' என்று கண்டிக்கும்போது, தூய்மையான நோக்கத்தை ஆராய்ந்து பார்த்து, அதை நீக்குவதற்கு உங்களுக்கு வழிவகை இருக்கு மானால், ஏன் அந்த வாய்ப்பை நீங்கள் இழக்கவேண்டு மென்று நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காமராசர்—பெரியார் சந்திப்பு இப்பொழுது தேவையே அல்லாது புதிய சட்டம் அல்ல ! சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் — நிறைவேற்றவும் போகிறீர்கள்—நிறைவேற்றத் துடித்துக்கொண்டுமிருக்கிறீர்கள்! 'இதுவரை அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றாதது தவறு' என்றும் ஆளும் கட்சியைச் சார்ந்த சில அங்கத்தினர்கள் கூறினார்கள்.

"சட்டம் இயற்றுவதனால் நமது தேசிய கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளப்போவதில்லை. சட்டங்கள் செய்யப்போகிற நேரத்தில் நீங்கள் யாரை வலுச்சண்டைக்கு அழைக்கிறீர்கள் என்று கருதும் மக்கள், 'மூன்று ஆண்டுகள்தானே' என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்கள் தமிழகததில் ஏராளமாக இருக்கிறார்கள் என்று போலீஸ் அமைச்சர் அவர்கள் உணரவேண்டும்.

"50.000 மக்கள் தஞ்சை மாநாட்டில் கூடினார்கள் என்று சொன்னபோது, போலீஸ் அமைச்சர் அவர்கள், 'நான் அதை நம்பவில்லை' என்று சொன்னார்கள்; அதை நம்ப அவர்கள் மறுக்கிறார்கள்; நம்பினால் கொஞ்சம் நடுக்கம் எடுக்கும்; 50,000 என்று எண்ண அவரது நெஞ்சம் கூசுகிறது.

கனம் திரு. எம். பக்தவச்சலம்: 'எனக்குத் தெரியாது; எனக்கு வந்த தகவல் வேறு. ஆனால், பத்திரிக்கைக்காரர்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொன்னேன்.

அண்ணா:--- “10,000 பேர்கள்தான் வந்திருந்தார்கள் என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். 50,000 என்ன — 4 இலட்சம் பேர்கள் வந்தார்கள் என்று சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. 'அவனவன் மனைவி அவனவன் கண்ணுக்குப் பிடிக்கும்' என்பது மாதிரிதான் இது இருக்கிறது. உங்கள் ஆட்களைக் காணும்போது நீங்கள் ஒருவிதம் எண்ணுவீர்கள்; வேறு ஆட்களைப் பார்க்கும்போது வேறுவிதம் எண்ணுகிறீர்கள்.

"இந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமென்று அவர் சொல்கிற நேரத்தில், அதற்கு 'ஆம்' என்று சொல்லுகிறவர்களை பைத்தியக்காரர்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்—நீங்கள் இன்றையதினம் நிம்மதியாய் உட்கார்ந்திருப்பதின் காரணமாக!

"பெரியார் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் இத்தனை பேர்களும் பைத்தியக்காரர்களா? அப்படி அவர்களை பைத்தியக்காரர்கள் என்றால் நீங்கள் இன்று தமிழநாட்டிற்கு அதிகாரிகள் அல்ல ; பைத்தியக்காரர்கள் அடங்கிய நாட்டிற்குத்தான் அதிகாரிகளாவீர்கள்.

"சாதியை ஒழிப்பது இந்த அரசாங்கத்தின் கடமை என்று 10 தினங்களுக்கு முன்பு நேரு அவர்கள் சொன்னார்களே—அந்த அடிப்படையில், பெரியாரைச் சந்தித்துப் பேசினால், அவரைவிட, தனிப்பட்டவர்களிடத்தில் மரியாதை காட்டுகிறவர்—அவரைவிட தாட்சண்யத்திற்குக் கட்டுப்படக் கூடியவர்—அவரைவிட எதிரியின் மனப்பான்மையை அறிந்து தன்மனப்போக்கை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழகத்திலேயே பார்க்கமுடியாது. சட்டங்களைச் செய்வதினால் பலனில்லை.

"நம் போலீஸ் அமைச்சர் அவர்கள் இச்சட்டம் குறித்து பேசியபோது மிகவும் உணர்ச்சியோடு பேசினார்கள்; அவர் இவ்வளவு உணர்ச்சியோடு பேசுவதை நான் இதுவரை பார்த்ததில்லை; நான்கூட நினைத்திருக்கிறேன்—'போலீஸ் அமைச்சருக்கு உணர்ச்சியே வராதோ'—என்று ! அவர் உணர்ச்சியோடு பேசியதற்கு—அவரது உணர்ச்சிக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

"தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள் கருதுவதுபோல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டுவந்தால் மனம் புண்படுபவர்கள், இன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவுசெய்து தெரிந்துகொள்ள வேண்டுமென்று நான் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

"எந்தக் சர்க்காரும் தனிப்பட்டவர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது என்பது இயற்கையாகவே அமைகிறது. ஆனால் எத்தனை தடவை எத்தனை கிளர்ச்சிகளை நீங்கள் இப்படி அடக்கிக்கொண்டிருக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறேன். முத்துராமலிங்கக் தேவரை ஒரு பக்கத்தில் பூட்டிக்கொண்டிருக்கிறீர்கள் ; பெரியார் இராமசாமியை ஒரு பக்கத்தில் பூட்ட இருக்கிறீர்கள். இப்பொழுது, அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது, தேசீயத் தலைவருக்கு இழுக்கு செய்வது சட்டவிரோதமாகும் என்று சட்டம் கொண்டுவருகிறீர்கள்.

“அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது அரசியல் சட்டத்திற்கு விரோதமாகும் என்று சங்கரன் அவர்கள் கூறினார்கள்; ஆனால், எந்தப் புத்தகத்தையும் கொளுத்துவது அல்லது தன் விருப்பப்படி செய்வதற்குள்ள உரிமை இருப்பதுபற்றி அதே அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை வழக்கறிஞராகிய அவர் உணரவில்லை.

“அரசியல் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். அதை சிலர் நாகரீகமாகச் சொல்வார்க; சிலர், வெட்டு ஒன்று—துண்டு இரண்டாகச் சொல்வார்கள்; சிலர், பட்டும் படாததுமாகச் சொல்வார்கள். 'அரசியல் சட்டத்தில் உள்ள குற்றங் குறைகளை எடுத்துச் சொல்வதே கூடாது' என்று சொல்வார்கள் போலிருக்கிறது; அதற்கும் சட்டம் குறுக்கிடக்கூடும். அதேபோல், ஒருவரின் ஆறு வயது குழந்தை காந்தியாரின் படத்தை எடுத்து உடைத்து விட்டால், அவருக்கு வேண்டாத போலீஸ்காரர் இருந்தால், அவர் சட்டப்படி குற்றத்திற்கு ஆளாகலாம். அதற்குப் பிறகு, தானே கோர்ட்டிற்குப் போய், 'நான் அவமானப் படுத்தவில்லை; என் குழந்தை கீழே போட்டு உடைத்து விட்டது' என்று சொல்லி, பிறகுதானே விடுதலைபெற்று வரவேண்டும். ஆகவே, நான் சொல்வது, வேண்டுமென்றே செய்யப்பட்டால், பொதுவிடங்களில் செய்தால் என்றுகூட எழுதாமல் விட்டிருக்கிறீர்கள்.

"காந்தியின் படத்தைத் தொட்டால், அரசியல் சட்டத்தைத் தீண்டினால் மூன்று வருடம்; இது எதைக்காட்டுகிறது? வாசகங்களை எழுதுவதில்கூட ஏன் அலங்கோலம் இருக்கவேண்டும்? சட்டத்தைக் கொண்டுவந்தாலும், அதன் வாசகம் எப்படி இருந்தாலும், உங்களுக்கு 150 பேர்கள் இருக்கிறார்கள் — மன்னிக்கவேண்டும்—இதற்கு 190 பேர்கள் இருக்றாகிறார்கள் என்ற நம்பிக்கையின்பேரில் இச்சட்டத்தைக் கொண்டுவருகிறீர்களே தவிர, பிரச்சினையின் அடிப்படையை ஆராய்ந்து, அதன் பின்னால் இருக்கும் பெரியாரின் மனப்போக்கை அறிய நீங்கள் முயற்சி எடுக்கவில்லை, இப்படிப்பட்ட தேவையற்ற தீதான—கொடுங்கோன்மைக்கு வழிகோலக்கூடிய—சர்வாதிகார நாடுகளில் கையாளக்கூடிய முறைகளைக் கையாளாது, தேசீயக் கொடியின் மாண்புகளையும், அரசியல் சட்டத்தின் மாண்புகளையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவைகளுக்கு கௌரவம் தேடுங்கள் என்று சொல்லிக்கொள்வேன்.

"நமது அரசியல் சட்டம் வேதத்திற்கும் சிறந்த வேதம் —என்று, போலீஸ் அமைச்சர் கூறுகிறார்; வேதம் படும்பாட்டை உலகம் இன்று பார்க்கிறது. வேதத்திற்கும் சிறந்த வேதம் என்று சொல்வதால், அதற்கு முக்கியத்துவம் கற்பித்துக் கொடுத்துவிட முடியாது.

"அரசியல் சட்டம் என்றால், 'அது, என் வாழ்விற்காக இருக்கிறது; அது என்னை மனிதனாக ஆக்குகிறது; என்னை நல்லவனாக இருக்கச்செய்கிறது; எனக்கு நாட்டில் மதிப்பளிக்கிறது' என்று, நாட்டில் உள்ள மக்களை உணரச் செய்தால், அதை யாருமே தீண்டமாட்டார்கள்.


"நான் கேள்விப்படுகிறேன்—நேரு அடுத்த திங்கள் இந்த மாகாணத்திற்கு வருகிறபோது, அவர்கள், ஏதோ ஒரு பிரச்சினையில் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை என்று அதிருப்திப்பட்டவர்கள், அவருக்குக் கருப்புக்கொடி காட்டுவதாக இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் மதுரையிலும், கொடைக்கானலிலும் நின்றுகொண்டு 'நேருவே திரும்பிப்போ ! நேருவே திரும்பிப்போ!'—என்று சொன்னால் அதில் தேசீய கெளரவம் பங்கப்படவில்லையா?

"ஜப்பானில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படுகிறது; அமெரிக்காவில் கோலாகலமான விழாவில் அவர் கலந்துகொள்ளும்போது, மதுரையில் கருப்புக்கொடி பிடிக்கிறார்கள்; அது அவருக்கும், தேசீய கெளரவத்திற்கும் இழுக்குத்தான். அப்போழுது, 'அதையும் குடுக்கவேண்டும் —கருப்புக்கொடி காட்டுவதையும் தடுக்கவேண்டும்'—இப்படி எல்லாம் சட்டம் கொண்டுவந்தால், இந்த ஐந்து வருடத்தில் எதிர்க்கட்சியிருப்பதே கூடாது என்று சொல்லி, சில நாடுகளில் ஒரு கட்சிதான் இருக்கலாம் — அதற்குப் பெயரும் ஜனநாயகம்தான்—என்பதுபோல, நீங்களும் ஒரு கட்சி 'ஜனநாய'கத்தை உண்டாக்க விரும்புகிறீர்கள்.


நீங்கள் ஜனநாயகம் போர்வையில் சர்வாதிகாரப் பாதையில் போகிறீர்கள். அதற்கு வேண்டிய--அதற்கு உதவக்கூடிய காரியங்களைத்தான் நீங்கள் செய்கிறீர்கள் அப்படி சொல்லும்போது--கொளுத்துகிற காரியத்தில் நான் பங்கு ஏற்றுக்கொள்ளுகிறவன் அல்ல; நாங்கள் அந்த முறைகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் அல்ல--என்பதை நஙகள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொள்வதோடு, தயவு செய்து--அருள்கூர்ந்து ஜனநாயகத் தத்துவத்தை மனதில் வைத்துக்கொண்டு, விஷயம் என்னவென்று, ஆராய்ந்து, பெரியாரைச் சந்தித்து. அவர் மூலம் இந்த நாட்டிலே நன்மை ஏற்பட நீங்கள் வழி செய்து. அந்த வகையில நீங்கள் உங்கள் கௌரவத்திற்குப் பாதகம் இல்லை என்று உணரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, 'இப்போது தேவை சட்டமல்ல-– சந்திப்புதான்; இப்போது தேவை — ஒருவரை ஒருவர் கலந்து பேசுவதே தவிர, ஒருவரையொருவர் மிரட்டுவதலை: இப்போது தேவைப்படுவது--அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதே தவிர, 'வலுத்தவன் இளைத்தவன்' என்று சொல்லி, வைத்துப் பூட்டுவதல்ல--என்று சொல்லிக்கொண்டு. இந்த மசோதா தேவையற்றது--தீதானது--கொடுங்கோன்மைக்கு வழிதேடுவது என்று எனது உரையை முடித்துக்கொள்ளுகிறேன்."

அண்ணா அவர்கள் பேசி முடித்ததும் மந்திரி சுப்பிரமணியம் விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசினார். அதன் பிறகு மந்திரி பக்தவத்சலம் பேசினார். மசோதாவின் இறுதி வாசிப்பின்போது மீண்டும் அண்ணா அவர்கள் பேசினார்கள் அந்த உரையாவது:

"சட்ட மன்றத் வலைவர் அவர்களே! இந்த மசோதா சட்டமாவதற்கான கடைசிக் கட்டத்திலும் நான் இதை ஆட்சேபிக்கிறேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன் ; ‘அவசரப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமையை அலங்கோலமாக்காதீர்' என்ற ஒரு வாதத்தை நான் முக்கியமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கனம் நிதி அமைச்சர் அவர்கள் இந்த நேரத்தில், எனக்கும், நான் சார்ந்திருக்கிற கட்சிக்கும் அவரால் ஆன சிறு கைங்கரியத்தைச் செய்யலாம் என்று எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் கருதிக்கொண்டிருக்கலாம்......

சி. சுப்பிரமணியம் : 'வெற்றிபெறவில்லை; நீங்கள் இன்னும் பேசி முடியவில்லையே!"

அண்ணா: என்றாலும், அதிலே சில கொள்கைப் பிரச்னைகள் வெளியிடப்பட்ட காரணத்தினால் அது பற்றி மட்டும் நான் சில வார்த்தைகளைப் பேசக் கடமைப்பட்டிருக்கிறேன், 'திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் வெவ்வேறாகப் பிரிந்திருந்தாலும், இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரை கிழிக்கப்பட்டு விட்டது; அவர்களுடைய உண்மை சொரூபத்தை நாங்கள் கண்டுவிட்டோம்; என்று நிதியமைச்சர் அவர்கள் கூறினார்கள். எங்கள் சுயரூபத்தை நாங்கள் அவ்வளவு சுலபமாகக் காட்டிவிட்டோம். நிதியமைச்சர் அவர்கள் உண்மையிலேயே எங்கள் சுயரூபத்தைக் கண்டுபிடித்ததாக இருந்தாலும் அவரே, திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக்கழகம் டுகாள்கைகளில் வேறுபாடு இருப்பதை, திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகிற 'நம்நாடு' பத்திரிகையிலும், நான் எழுதுகிற எழுத்துக்களிலும் குறைகாணுவதற்கு எதுவுமில்லை என்று எடுத்துச்சொன்னதிலிருந்து, நாங்கள் ஒப்புக்கொள்ளத்தக்க கொள்கைகளுடன் நல்ல முறையிலே...

சி. சுப்பிரமணியம் :— 'குறை காணுவதற்கு இல்லை என்பது இல்லை. சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்துக்கொள்வதற்கு அதிலே இடமில்லை.

அண்ணா :—“சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவதற்கு அதில் இடமில்லை என்று சொல்லுகிறார்கள் ; அது என்னுடைய வாதத்திற்கு வலிவு அளிப்பதுதான் ; ஆகையால், சட்டபூர்வமான முறையிலேயே இவைகளை எடுத்துச் சொல்வது என்பது, திராவிட முன்னேற்றக் கட்சியின் கொள்கை, ‘சட்டத்திற்கு விரோதமான முறையில் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்வது திராவிடக் கட்சியின் கொள்கை' என நிதி அமைச்சர் கருதுகிறார்; இது ஒன்றைப் பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கட்சியினருக்கும், திராவிட கட்சியினருக்கும் உள்ள மாறுபாடு தெரியும். முரண்பாடு என்பதும் மாறுபாடு என்பதும், வேறுபாடு என்பதும் தமிழில் ஒரே பொருளைக் குறிக்கின்ற சொல்லாகப் பொதுவாகப் பார்க்குமிடத்து தோன்றினாலும், ஆழ்ந்து கருத்துக்களை ஆராய முற்படும்போது இவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நான் குறிப்பிட வேண்டும் என்பது இல்லை; கனம் நிதி அமைச்சர் அவர்களே இதை உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள், இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியைப் பற்றி ஏதாவது பேசவேண்டும் என்று கருதியது, ஆளுகின்ற கட்சி எங்களுக்குக் கொடுத்த கெளரவமாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

"மற்றொன்று, 'சட்டமன்ற பிரச்சினைகளைப் பார்க்கும்போது--- குழந்தைகள் பயங்கரமான வஸ்துக்களைப் பார்க்குப்போது பயத்தால் இறுகக் கண்ணை மூடிக்கொள்ளுமே---அப்படி நாங்கள் பயந்து கண்ணை மூடிக்கொள்கிறோம்' என்று சொன்னார்கள். உண்மையில் நாங்கள் குழந்தைகள்; நீங்கள் ரொம்பப் பயம்காட்டுகிறீர்கள்; இந்த இரண்டும், நீங்கள் சொல்கிற வாதத்தில் தெரிகிறது. 'பயந்து ஓடி விடுகிறோம்' என்று சொல்வது--'கண்ணை மூடிக்கொள்கிறோம்' என்று சொல்வது, கோழைத்தனம் என்கிற நினைப்பில் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொள்கிறார்களோ என்னவோ? ஆனால் ஆங்கிலத்தில் சொல்வார்களே இரண்டு வார்த்தைகள்—Prudence Cowardice என்று! இரண்டுக்கும் பொருள், கனம் நிதி அமைச்சருக்குத் தெரியாமல் இருக்காது. 'சபையிலிருந்து நாங்கள் ஓடிவிடுகிறோம்' என்று சொல்வது உண்மையானாலும், கோழைத்தனத்தால் அல்ல; 'இருப்பது முறையாகாது' என்று எழுந்துபோயிருக்கலாம்.

"இன்னொன்றும் தங்கள் மூலமாக நிதி அமைச்சருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ; பயத்தால் கண்ணை மூடிக்கொள்வது ஒன்று; ஒன்றைப் பார்க்க அருவருப்படைகிற நேரத்தில் கண்ணை முடிக்கொள்வது மற்றொன்று; அப்படிச் சில சமயங்களில் ஒரு செயலைப் பார்க்க அருவருப்பு அடைந்து நாங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கலாம். கண்ணை மூடிக்கொள்வது கோழைத்தனமல்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

"மற்றொன்று — திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் பேசும்போது ‘பகுத்தறிவு என்று குறுக்குவழியில் போகக்கூடாது' என்கிறார்கள் குறுக்குவழியில் போவதை மாற்றுவதுதான் 'பகுத்தறிவு' என்பதை அவர் உணர்ந்துகொண்டிருப்பாரேயானால், அப்படிச் சொல்லியிருக்கமாட்டார். 'பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு— புராணங்கள், இதிகாசங்களில் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன—அவற்றை ஏன் கொளுத்தவேண்டும்? ஏன் குறுக்குவழியில் போகவேண்டும்? குறுக்கு வழியில் போவதை அனுமதிக்கக்கூடாது, —என்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ளுவேன்—மாகாணத்திலேயே மிகவும் செல்வாக்கு உடையவராக இருக்கக்கூடிய ஒரு தலைவர், 'எதைக் கொளுத்துவேன்' என்று சொல்கிறாரோ, அதைக் குறுக்கு வழி என்று சொல்வது எவ்வளவு பொருத்தமற்றது என்பதைக்காட்ட ஒரு விஷயத்தைக் காட்டவேண்டும்.

"வெகு காலத்திற்கு முன்னாலேயே மார்ட்டின் லூதர் என்பவர், 'கிருத்தவ வேதம்—உலகம் முழுவதும் மிகவும் புனிதமானது என்று கருதுகிற பைபிள் லத்தீன் மொழியிலிருப்பது கூடாது; போப் ஆண்டவரின் ஆதிக்கம் ஏற்பட்டுவிடுகிறது' என்ற ஒரு காரணத்திற்காக, பகிரங்கமாக ஐரோப்பாக் கண்டத்திலே கொளுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கூறுவேன்—நண்பர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் அடிக்கடி ஐரோப்பா போவதனால், ஓய்வு நேரத்தில் இதைப்பற்றியும் அங்கிருந்து தெரிந்து கொண்டு வரவேண்டும் என்பதாகக் கேட்டுக்கொள்கிறேன்,

"ஆகவே, இன்றைக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது என்பது முரண்பட்ட செய்கையோ, குறுக்குவழி செய்கையோ என்று நினைக்கமுடியாது; ஆனால் போலீஸ் அமைச்சர் அவர்கள் சொன்னதுபோல, 'சமுதாயத்தில் கலவரம் ஏற்படக்கூடும்' என்கிற வாதத்தை நான் உண்மையில் உணருகிறேன். அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் சாத்தியமானால், சட்டம் வேண்டாம். முடிவான ஒரு சட்டத்தைப் போடுவது. மேலும் அவர்களை அந்தக் காரியத்தைச் செய்யும்படி தூண்டச் செய்வதாகவே ஆகும் என்பதற்காகவே முன்பு சொன்னேன்.

"எங்களுக்கும் — திராவிடர் கழகத்திற்கும் உள்ள முறைகளில் வித்தியாசம் இருக்கிறது என்பதையும். பார்ப்பனர்களை நாங்கள் எந்தவகையில் நடத்துகிறோம் — திராவிடர் கழகம் எந்தவகையில் நடத்துகிறது என்பதையும் கவனித்துப் பார்த்திருந்தால் நிதியமைச்சர் அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

"திராவிட முன்னேற்றக் கழகத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினாகளாக இருக்கிறார்கள் ; பார்ப்பனர்களாலேயே 'பார்ப்பனீயம்' அழிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். இதற்குக் கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும் என்றாலும்கூட இந்த வழிதான் உறுதியானது என எண்ணிக்கொண்டிருக்கிறோம். காலதாமதம் ஆனாலும், நாகரீகமான முறையில் பார்ப்பனீயத்தை ஒழிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உழைக்கிறது. இதே விஷயத்தை வேறு வகையில் தீவிரமாக—காலதாமதமின்றி நிறைவேற்றிடத் திராவிடர் கழகம் துடிக்கிறது. அதனாலேயே, 'இந்த இரண்டு கட்சியும் ஒன்றுதான்' என நிதியமைச்சர் அவர்கள் சொல்லி, அதனால் அவர் அடைகிற இலாபம் என்னவோ தெரியவில்லை? இதனால் ஒரு சில பிராமணர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல் செய்துவிடுகிற இலாபத்தை அவர் அடைந்தாலும் நான் கவலைப்படவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் கொள்கையைப்பற்றித் தெளிவாகச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகையால் அதைக் சொல்கிறேன்.

"சேரிகளை ஒழிக்கவேண்டும் என்பதற்காக சேரிகளை எல்லாம் கொளுத்திவிட முடியுமா என்கிற வாதத்தை நிதியமைச்சர் அவர்கள் எழுப்பினார்கள். அப்படி அவர் கேட்கின்ற நேரத்தில்—ஒரு பெரும் வழக்கறிஞராக கோவையில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், இந்த மாதிரியான கேள்விகள் எத்தனை போட்டு எதிர்க்கட்சியைத் திணற அடித்திருப்பாரோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

"சேரியை ஒழிக்கவேண்டும் என்பதற்காக, நகரசபை அதிகாரிகள், ‘இந்த இடத்திலே சேரி இருக்கக்கூடாது' என்று உத்தரவு போடுகிறார்கள்; அதை மீறி மறுபடியும் அந்த இடத்தில் சேரி ஏற்படுமானால்—குடிசைகள் போடப்படுமானால் அவர்கள் அந்தக் குடிசைகளை பிரித்துத்தான் போடுகிறார்கள்-கொளுத்திவிட்டுப் போகிறார்கள்.

'செத்த பிணம் நாறிக்கிடக்கிறது என்றால். அதை எடுத்துப் புகைக்கத்தான் வேண்டும்; இல்லையானால் கொளுத்த வேண்டும். அதை எரிக்காமல் வைத்துக்கொண்டிருக்க முடியாது; யாரும் வைத்துக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். ஆகவே, 'கொளுத்துவதாவது' என்ற வாதத்தை எடுத்துச் சொல்லிப் பயன் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

“கடைசியாக ஒரு விஷயம்—நான், ‘திரு. காமராசரும்— பெரியாரும் சந்திக்கவேண்டும்; அவர்கள் இரண்டு பேரும்தான் பரஸ்பரம் நண்பர்கள் ஆயிற்றே' என்று சொன்னதற்கு, போலீஸ் அமைச்சர் அவர்கள் -- சங்க காலத்து இலக்கியத்தில் ஒருதலைக் காதல் என்பார்களே அப்படி -- 'பெரியாருக்கு காமராசரிடத்தில் அதிகமான காதல் இருக்கலாம்; ஆனால், காமராசருக்கு அவரிடத்தில் காதல் இல்லை' என்று சொன்னார்கள்.

சங்க காலத்தில், தூதன் பாகன், பாணன்போல இவர் இங்கே பேசியது பொருந்தாது ஒருக்கால், காமராசருக்கும்--பெரியாருக்கும்; பெரியாருக்கும்--காமராசருக்கும் எப்படிப்பட்ட காதல் உண்டு என்பதை இடையே இருந்து அவர் நன்றாக உணர்ந்திருக்கலாம்; எந்த அளவுக்கு அவ்விஷயம் இவருக்குத் தெரியும் என்பது எனக்குப் புரியாது.

"உண்மையிலேயே பெரியாருடைய காதல் ஒருதலைபட்சமானதாக இருந்தாலும், காமராசருக்கு அவரிடத்தில் காதல் இல்லை என்றாலும், காமராசர் சென்று சந்திக்கச்கூடிய அளவுக்கு, மக்களிடத்திலே அதிக செல்வாக்கைப் படைத்த ஒரு தலைவர் பெரியார் என்பதை இவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். அவர் திடீரென்று ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து நேற்று காலை நம் இராஜ்யத்துக்கு வந்தவர் அல்ல; லண்டன் நாட்டவர் போகும்போது நம்மிடத்திலே விட்டுவிட்டுச் சென்றுவிட்ட விசித்திரப் பிறவியுமல்ல; நெடுங்காலத்திற்கு முன்னாலிருந்தே இந்த நாட்டுக்கு இடைவிடாமல் உழைத்து வருபவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர்; இருந்தாலும், 'இன்றைய நிலையில் காங்கிரஸ்தான் பதவியில் இருக்கவேண்டும்' என்பதற்காகப் பொதுத் தேர்தலின்போது உங்களுக்காக இடைவிடாமல் உழைத்தவர்,

"தகப்பனிடத்தில் பிள்ளை போவது—எத்தனை மனஸ்தாபமாக இருந்தாலும் அதுதான்சரி என்பதுபோல—காமராசருக்கும் பெரியாரிடத்தில் காதல் இல்லை என்றாலும் கூட—பெரியார் உங்களுடைய மாஜி தலைவர், மாஜி தோழர் என்கிற முறையிலாவது அவரை அணுகுவது சரியான கொள்கைதான் என்று நான் கருதுகிறேன்.

"தன்னுடைய மாஜி தலைவர், மாஜி தோழர் இவரைப் பற்றி சபையில் யாராவது ஏதாவது சொன்னால் மனம் புண்படுமே என்பதுபோலத்தான், இன்றைக்கு சபையில் காமராசர் இல்லை என்று கருதுகிறேன். கனம் நிதியமைச்சர் என்னைப்பற்றிச் சொன்னதுபோல, 'அவர் ஓடிவிட்டார்' என்று சொல்லமாட்டேன் நாகரிகமான பாஷையில், 'ஒளிந்து கொண்டார்' என்று கருதலாம். தான் இவ்விடத்திலிருந்து துக்கப்படாமல் வேறு இடத்திலிருந்து மனத்திற்கு சாந்தி ஏற்படுத்திக்கொள்கிறார் என்று கருதுகிறேன்:

'ஆனாலும், போலீஸ் அமைச்சர் அவர்கள் பேசும்போது, 'காமராசர் போய்ச் சந்திப்பதைக் காட்டிலும், நீங்களே போய்ச் சந்திதிக்கலாமே; தந்தையும் மகனும் பிரிந்திருந்தாலும் இந்தக் காரணத்தால் சந்திப்பது மிகவும் பொருத்தமாயிற்றே' என்று குறிப்பிட்டார்கள்; "பிரிந்துவிட்டதனால் இழந்துவிட்ட இலாபத்தை, திரும்பவும் சந்தித்து ஒட்டிக்கொள்வதன் மூலம் பெற்றவிடலாம்' என்றும் சொன்னார்கள்.

"வர்களுடைய நல்லெண்ணத்தைத் துணைகொண்டு நான் வரைப் போய்ச் சந்தித்துப் பார்க்கிறேன்; ஆனால் அதுவரையில், இந்தச் சட்டத்தை நிறுத்திவையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன், சட்டத்தை நிறுத்திவையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அவரைப் போய்ச் சந்திப்பது தூது ஆகாது. 'இந்தக் குற்றத்தைச் செய்தால் இத்தனை வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும்' என்பதை அவரிடத்திலே, சென்று சொல்லும் றிவிப்பாகத்தான் இருக்கும். தைப்போய் நான் சொல்லவேண்டாம். பத்திரிகை வாயிலாக அவரே பார்த்துக்கொள்வார்.

"உண்மையில் நான் அவரைப் போய் இந்தக் காரணமாக சந்திப்பதனால் இலாபம் ஏற்படும் என்றால்—திரும்பவும் நாங்கள் அவரோடு ஒட்டிக்கொள்ள முடியும் என்றால்—மகன், தந்தை செய்ததை மறந்து, திரும்பவும் அவரிடத்தில் சென்று ஒட்டிக்கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல—குணங்களில் ஒன்று என்பதை நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லவிரும்புகிறேன்.

"அவர் உதாசினப்படுத்தினாலும் நான் சென்று பேசுகிறேன்; அது வசையில் இந்தச் சட்டத்தை நிறுத்திவையுங்கள். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு நான் போய்ப் பேசினால் அவர் என்ன சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும்; 'எனக்கு எண்பது வயதாகிவிட்டது; மூன்று வருடம் சிறையில் கிடந்தால் என்ன? —முப்பது வருடம் சிறையில் கிடந்நால் என்ன? எனக்காக யாரும் துக்கப்படவேண்டாம்' எனத்தான் சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் இந்த நேரத்திலும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்—இப்போது வேண்டியது சந்திப்பு; சந்திப்புத் தேவையே தவிர ; சட்டம் தேவை இல்லை என்று கடைசியாகவும் வலியுறுத்திக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்'.

★★★

தயாராகிறது !
காதலர் கவிப்பாடும் கன்னித்தமிழ் ஏடு
தமிழ்ச்சுவை மொண்டுவரும் செந்தேன் கூடு
அழகுத்தமிழ் நடையில் அணிசெய்யும் பூக்காடு

மலர்ந்த வாழ்வு

ஆசிரியர் :
தங்கவயல் தம்பி

மூவண்ண முகப்போடு விரைவில்
வெளிவருகிறது

விபரங்களுக்கு:

முத்துமணி பதிப்பகம்

7,பெத்துநாயக்கன் தெரு. சென்னை