உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

எனும் கருத்துவிளக்க மொழிகள்! நானாவது அவ்வளவு துணிந்து, காங்கிரசாரைத் தூற்றுவதாவது!

அம்மையார், காங்கிரஸ் கட்சிதான்; இப்போதும்.

வீண் தகறாறுகளில் தம்மைச் சிக்கவைத்துக் கொள்பவருமல்ல; எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் இயல்பு உள்ளவருமல்ல. அநேகமாகத் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அப்படிப்பட்ட இலட்சுமி மேனன் அவர்களுக்குத்தான் என்ன கடுங்கோபமோ தெரியவில்லை. மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார், காங்கிரஸ் கட்சியினரை—நேருவை நீக்கிவிட்டு; பிறரை.

காங்கிரசைவிட்டு வெளியேறி வெகுண்டு பேசிய வார்த்தைகளும் அல்ல. இருக்கும் கட்சியிலேயேதானோர் அதி அற்புத மேதை என்ற ஆணவம் பிடித்தலைபவரும் அல்ல அம்மையார். எனினும், காங்கிரஸ்காரர்களைப் பற்றி, காங்கிரசுக்குப் பல ஆண்டுகளாக எதிர்ப்புக் காட்டிவருபவர்கள்கூடச் சொல்லத்துணியாத கண்டனமொழிகளை வீசுகிறார்; காரணங்களும் மிகப் பொருத்தமாகக் காட்டுகிறார். . கேட்கும்போதே, காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆத்திரம் பீறிட்டு எழும்; கண்களிலே கனலும் புனலும் ஒருசேரக் கிளம்பும். பிய்த்து எறிந்துவிடவேண்டும் என்று கோபம் உண்டாகும்.

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்
பத்தாம்பசலிகள்

என்றெல்லாம் இழிமொழி கூறினவர் மட்டும், காங்கிரசல்லாதாராக இருந்திருப்பின், இந்நேரம், காங்கிரஸ் பெருந்தலைவர்கள், பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்திடுவர்; மந்திரி சுப்ரமணியத்தைப் போன்ற அரைகுடமாக இருப்பின், இதற்குள் ‘சவால்கள்’ பிறந்திருக்கும். ஆனால், எவ்வளவு வெட்கம், வேதனை, ஆத்திரம் பிறந்தாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது; ஏனெனில், கண்டனச் சொற்களைக் கூறினவர், காங்கிரஸ் கட்சியினர், அமைச்சர், நேருவுக்குத் துணை அமைச்சர். எனவே, வாய்பொத்திக் கிடக்கிறார்கள்! வேறு வழி!