52
தொடர்ந்து, மக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும், வளரும் வகையாக நடந்துகொண்டிருக்கலாம்! ஆனால், அவன்தான், கருத்தறியா மக்கள், தூண்டிவிடும் தலைவர்களின் சொல் கேட்டு ஆடிக் கெடுகிறார்கள் என்று கருதுகிறானே! எனவே, இந்தச்சமயம் வாளா இருப்போம், வேறோர் வேளை வரட்டும், வட்டியும் முதலுமாகத் தீர்த்து வசூலித்துக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்தான்.
கட்டாயக் கடன் என்பது காட்டுமிராண்டி முறை, கள்ளன் கொள்ளைக்காரன் கையாளவேண்டிய முறையே தவிர, முறைப்படி அமைக்கப்பட்ட அரசு, இங்ஙனம், செய்தல் கூடாது என்று நாடு முழக்கமிட்டது — ஐவர், அந்தக் கடன் தரமுடியாது என்று கண்டிப்பாக மறுத்தனர், அவர்களைச் சிறையில் தள்ளினான் மன்னன்.
டார்னல், கார்பெட், வால்டர், ஹெவினிங்காம் ஹாம்டன்—எனும் ஐவர் வழக்கு தொடுத்தனர், காரணமின்றிச் சிறை வைத்தது தவறு என்று; இந்த வழக்கு, நாட்டிலே பெரியதோர் பரபரப்பை உண்டாக்கிற்று; கண்மூடி தர்பாரைக் கண்டிக்காத மக்கள் இல்லை; இந்த ஐவர், தமக்காக அல்ல, நாட்டு மக்களின் பொது உரிமைக்காகவே இந்த வழக்குத் தொடுத்துள்ளனர், அவர்களுடைய வெற்றி நமது வெற்றி, அவர்கள் தோல்வி நமது தோல்வி, என்று மக்கள் எண்ணினர். மன்னன் எதைச் செய்தாலும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும், அவன் செய்வதைத் தடுக்கும் ஆற்றலுள்ள இடம் ஏது, எனவே கசிந்துருகுவதன்றி வேறு வழி இல்லை, என்ற நிலை மாறிவிட்டது, மன்னனும் நீதிக்கும் சட்டத்துக்கும் கட்டுப்பட்டாக வேண்டும், நீதியற்ற செயலை மன்னன் செய்தால், ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்பதில்லை