உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

விட்டுவிடுவதில்லை; வெற்றி வீரர்கள், ஆளப் பிறந்தவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள் என்று காரணம் காட்டி, பண்டைய கிரேக்கத்தில், சமூகத்தில் ஒரு பகுதியினரை அடிமைகளாக, எந்தவிதமான உரிமையும் அற்றவர்களாக, மனித மிருகங்களாக வைத்துக் கொண்டிருந்தனர். அறநூற்களும், அறிவு நூற்களும், காவியமும் ஓவியமும், அரசு முறை பற்றிய ஏடுகளும் ஆத்மீகம் பற்றிய ஏடுகளும், எந்தக் கிரேக்கத்திலிருந்து மலர்ந்தனவோ. அதே கிரேக்கத்திலே அடிமைகளாக சமூகத்தில் ஒரு பகுதியினரை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமம் நெளிந்து கொண்டிருந்தது. பிறகு வடிவமெடுத்த ரோமப்பேரரசு, எகிப்திய எழிலரசு போன்ற பலவற்றிலும், ஒவ்வோர் முறையிலும் வடிவிலும், இந்த அக்கிரமம் இருக்கத்தான் செய்தது. இவைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டத்தான் முடிந்தது—நேரம் கிடைக்க முடியாதல்லவா.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பது வெறும் எண்ணிக்கை பிரச்சினை அல்ல-மிகப் பெரும்பான்மையினரிடமிருந்து சிறுபான்மையினர்—அதாவது சிறிய எண்ணிக் கையில் உள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் பிரச்சினை என்று மட்டுமே இதனைக் கருதிவிடக் கூடாது. சில சமயங்களில், சில இடங்களில் மிகப்பெரிய அளவில் உள்ள மக்களை, மிகக் குறைந்த அளவில் உள்ள மக்கள். அடக்கி ஆள்வது காணலாம், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தின்படி ; ஆதிக்கம் செலுத்தும் சிறு கூட்டம், தனது நிலையைக் கெட்டிப் படுத்திக்கொள்ள நியாயம் தேடிக் கொள்ளலாமா! அது அநியாயம்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் இங்கு இருந்த போது, பலகோடி மக்களை ஒரு சில ஆயிரவர்—வெள்ளையர்—சிறுபான்மையினர் அடக்கி ஆண்டு வந்தனர், நாங்கள் சிறுபான்மையினர், ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று வெள்ளையர் வாதாடி இருப்பின், எப்படி இருந்திருக்கும்? அதனை அநீதி என்றுதான் எவரும் கூறி இருப்பர்! சிறுபான்மையினராசு இருக்கிற ஒரே காரணத்துக்காக இனம், மதம், மொழி, வாழ்க்கை முறை போன்ற துறைகளில் பெரும்பான்மையினரிடம் அடங்கிக் கிடக்கவேண்டும் என்ற நிலை இருக்கும்போது தான், சிறுபான்மையினரின் உரிமைக் கிளர்ச்சிக்கு நியாயம் இருக்க முடியும்.