46
பிடி
பரஞ்ஜோதி சிறுத்தொண்டனானான். படைத்தலைவன் பக்தனானான்; முரசு கொட்டியவன் முக்திக்கு வழிதேட முனைந்துவிட்டான்; வீரக் கோட்டத்திலே இடம்பெற வேண்டியவன் வீழ்ந்து வணங்க வேண்டிய கோயிலுக்குக் குடி ஏறிவிட்டான். சாளுக்கிய நாட்டுக்குச் சண்டமாருதமாகியவன் சரித்திரத்தில் இடம்பெறாமல், சாதுக்கள் கூட்டத்தில் ஒருவனாகிவிடுகிறான்! போர்ப் பயிற்சிக்கெனத் தமிழகம் ஓர் போற்றற்குரிய கழகம் அமைத்திடின், அதிலே சாளுக்கிய நாட்டை ஜெயித்துப் புலிகேசியைக் கொன்ற மாவீரன் பரஞ்ஜோதி என்று ஓர் சிலை இராது. அது எவ்வளவு பெரிய இலாபம் நமக்கெல்லாம். பரஞ்ஜோதி! காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அஞ்சா நெஞ்சன், ஆற்றல் மிக்கோன், வடநாட்டு வீரனை வீழ்த்திய வல்லமைசாலி, புலிகேசியை வென்றவன் என்ற எண்ணத்தை, அதன் மூலம் வீரத்தை, தமிழ் இனத்தின் தீரத்தை, தமிழகத்தின் கீர்த்தியை ஊட்டும் உருவமாக அமைந்துவிட்டால், பிறகு தமிழரின் வெற்றி எட்டுத் திக்கும் கொட்டுவரே! இனி அப் பயமில்லை! பரஞ்ஜோதியைப் பக்தராக்கிவிட்டோம்; இனித்தாளமும் மத்தளமும் கொட்டுவர் தமிழர். தாராளமாகக் கொட்டட்டும்; புலிகேசி! சாளுக்கிய நாட்டுக்காக இரத்தத்தைக் கொட்டினாய்! உன் இரத்தத்தைக் குடித்து வெற்றி கண்ட தமிழரின்மீது இதோ வஞ்சகம் தீர்த்துக்கொண்டேன்! ஒருபிடி சாம்பலால்! முடிவில் இந்தப் பிடி சாம்பல், சாளுக்கிய நாட்டின் சாம்பல், வெற்றியைப் பெற்றுத் தந்தது.
சாளுக்கிய நாட்டுக்குச் செல்லும் வழியில், எதிர்ப்படுவோரிடம், பழைய நண்பர்களிடம், பாதி பட்டுப்போனமரம் கருகிக் கிடந்த இடம், போர் நடந்த களம் ஆகிய இடங்களைக் கண்டபோது எல்லாம். வெற்றிக் களிப்புடன், வில்லாளன் இங்ஙனம் பேசினான்—சில சமயங்களிலே கூவினான்—கூத்துமாடினான்! ஆம்! அவன் ஆனந்தமடைந்ததிலே ஆழ்ந்த அர்த்தமிருந்தது; பல்லவ நாடு திறமை மிக்க படைத்தலைவரை இழந்து விட்டது; பல்லவப் படை, போர்த்திறனும், போர் பலவற்றிலே பெற்ற அனுபவத்தை எடுத்-