சாம்பல்
37
திகைத்தேன். அந்தத் திகைப்பு இன்னமும் மாறவில்லை; எப்படி மாறும்?
நானே, மறுத்துப் பார்த்தேன். இறைவனுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு போலவே, என் அரசனுக்கும் பணி புரிவதேயன்றோ முறை என்று வாதாடினேன். மன்னன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
தமிழகம் வாதாபியின் வீழ்ச்சியைக் கேட்டுக் களித்தது. வாதாபி...என் வெற்றி... கடைசியில் அந்த வெற்றி...என்னை அரச அவையிலிருந்து விரட்டிவிடவா பயன்பட்டது! அவனுக்கு அடியவனாக இருந்து வருபவன். ஆகவே இங்கு வேண்டாம்! யாரும் கேட்டறியா வாதம்! எதிர்பாராத விபத்து! ஏன்? என்பால் மன்னருக்கு என்ன கோபம்? வெறுப்புக்குக் காரணம் இல்லையே. பேழையும் பொற்கட்டிகளும் மானியமும் அளித்தார் மன்னர்; அளித்து, என்னை ‘பஜனை’ செய்யச் சொல்கிறார்!
பரஞ்ஜோதி, பரமபக்தன்! சிவத்தொண்டு புரியும் செம்மல்! சிவனருள் காரணமாகவே, வாதாபியில் வெற்றி கிடைத்தது என்றனர் அமைச்சர். ஏன், அதே சிவனருள் அதன் பயனையும், என் மூலமாகவே மன்னன் அடையக்கூடாது? இதுவரை போர்த் தொழிலிலேயும் ஈடுபட்டபடி சிவத்தொண்டும் செய்துகொண்டு, சிவனருளைப் பெற என்னால் முடிந்தது—அமைச்சர் கூறி அரசனும் ஒப்பின மொழிப்படியே யோசிக்கும்போது, அங்ஙனமிருக்க, எப்போதும் போலவே, அரச அவையில் இருந்து ஆற்ற வேண்டிய பணியினையும் செய்து கொண்டே என்னால் அதே சிவத்தொண்டில் ஈடுபட்டிருக்க முடியாதா! மன்னரின் நோக்கந்தான் என்னவோ!
பலப்பல எண்ணினார் பரஞ்ஜோதியார். காலைமுதல் மாலை நெடுநேரம் வரையில், இதே சிந்தனை—“விரட்டப்பட்டோம்” என்பதுதான், அவருடைய சிந்தனையின் முடிவு. ஏன் என்று யோசித்தார்—அவருடைய முகத்திலே புன்னகை பூத்தது. மெள்ள வாய்விட்டுக் கூறினார், “பாபம்! பீதி! பாபம் பரிதாபம்” என்று.