உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி கிடைக்கவேண்டும், - நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது.

தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள்.

சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன்—குளோரைட்—இலிமினைட்—போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன.

தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டுமானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும்.

இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள் ஒப்புகின்றனர்.

சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக்காட்டிற்று.

நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும், வரவேற்றனர்.

குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கிட ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர்.