40
பிடி
படைத்தலைவர் பரஞ்ஜோதியால் முடியும்! ஆனால் சாம்ராஜ்யம் மட்டுந்தானா விரிவாகும், அவருடைய கீர்த்தியும், செல்வாக்கும் கூடத்தான் வளரும்! ஓங்கி வளரும்! என்னை மறைக்குமளவு வளரும்! அரசனைக் கேலிச் சித்திரமாக்கும் அளவுக்குப் படைத்தலைவனின் புகழ் பரவும்! செ! அந்த நிலையை நரசிம்மன் விரும்ப முடியுமா? பரஞ்ஜோதியில்லாப் பல்லவ சாம்ராஜ்யத்தை நான் ஆளவேண்டும்—அரசன் என்ற பெயருக்கு அப்போதுதான் நான் அருகதையுள்ளவனாவேன்.
ஆமாம்! நரசிம்மன் அரசனாகவும், பரஞ்ஜோதி படைத் தலைவராகவும் இருந்தால், மன்னன் என்ற நிலையே மங்கும். மங்குவதோடு முடியுமா? அந்த மாவீரன் மனதிலே மாசு இல்லை. ஆமாம்! இன்று இல்லை! மாசு உண்டானால்? ஆசை ஏற்பட்டால்? மங்குவதுமட்டுமா, அந்த மாவீரன் மனதிலே, மகுடத்தின்மீது ஆசை பிறந்தால், நரசிம்மன் சிரத்திலே இருக்கும் நவரத்தின கிரீடம்...ஆமாம்...பறிக்கப்பட்டும் விடக்கூடும்...படைத் தலைவர்கள் பட்டத்தரசர்களை வெட்டி வீழ்த்திக்கூட இருக்கிறார்கள்!
பரஞ்ஜோதி அப்படிப்பட்டவரல்ல! ஆனால் எப்படியோ எதிர்காலம்! இன்னும் இரண்டோர் வெற்றிகள் வாதாபி வீழ்ந்ததுபோல் வேறு சிலபல நகர்கள் வீழ்ந்து, வெற்றிமாலை மேலும் பல, அவர் மார்பில் வீழ்ந்தால், எண்ணம் எப்படி எப்படி மாறுமோ! என்னென்ன தூவுவரோ, சதி செய்யும் தந்திரக்காரர்? யார் கண்டார்கள்!
கொஞ்சும்போதே கிளி கடித்துவிடுகிறதே கோதையர் இதழை! மன்னனாம் எனக்குள்ள புகழை மிஞ்சிடும் புகழ் பெற்ற மாவீரன் பரஞ்ஜோதியின் கூர்வாள், புகழின் சின்னம் இன்று. நாளை அதுவே புரட்சிக் கருவியாக மாறினால்...
பொறாமையா எனக்கு? இல்லை! இருக்காது!—அப்படியும் திட்டமாகச் சொல்வதற்கில்லையே.