உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

மூன்று படம் எடுக்கப் போகிறார்களே முதலாளிகள், அவர்களுக்கே தெரியும்! மிக நன்றாகத் தெரியும்!!

ஒருபுறம் நான்! எதிர்ப்புறம், கனம். சுப்பிரமணியம்! அவர் ஆத்திரத்துடன்! நான் அச்சத்துடன்! அவர் கேட்கிறார், ‘ஏ! அண்ணாத்துரை, என்னைக் கசாப்புக் கடையா வைக்கச் சொல்லுகிறாய் என்று’–உடனே ஒரு காங்கிரஸ் படை, இடி இடியெனச் சிரிக்கிறது—கையொலி எழுப்புகிறது. ஒரு காட்சி! அதை அடுத்து ‘இதோ பாரீர்!’ என்று ஒரு குரல்! மலர்ந்த முகத்துடன் ஒரு காங்கிரஸ் தலைவர்—ஆவல் ததும்பும் கண்களுடன் மக்கள்— என்ன? என்ன? என்ற கேள்வி ஒலி! “எமது சாதனை! நாலாவது திட்டத்தில்!!” என்று பெருந்தலைவரின் பெருமிதப் பேச்சு! எதிரே பார்த்தால், குட்டிகள் பலவற்றுடன் பன்றிகள்!! என்ன இது? என்று ஒருவரின் கேள்வி தயக்கத்துடன்! பன்றிப் பண்ணை! பன்றி இறைச்சிக்கு நிரம்பக் கிராக்கி. ஆகவே பன்றிப் பண்ணை! இரு துறையிலும்! தனியார் துறையிலும் — பொதுத் துறையிலும்!!—என்ற விளக்கம். காட்சி, படமாக்குவது எளிது! பொய் அல்ல; புனைசுருட்டு அல்ல! நாலாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பல இடங்களில் பன்றிப் பண்ணைகள் வைக்கப் போவதாக, பல திங்களுக்கு முன்பே இதழ்களில் செய்தி வெளிவந்தது. உண்மையைத்தான் படமாக்குகிறோம். ஆனால் கத்தரிக்கோல்? சும்மா இருக்குமா? கலை உலகினர் அனைவரும் அறிவர்!

ஆகவே அவர்கள் படங்கள் மூலம் எதிர்க்கட்சிகளைக் கேவலப்படுத்த முயலுவது, கட்டுடல் படைத்த காளையை இருப்புத் தூணிலே இறுகக் கட்டி வைத்து விட்டு, வலிவும் துணிவுமற்ற பேர்வழி, ‘அடி அடி’யென்று அடிப்பதற்கு ஒப்பானது. கலைஞர்கள் அறிவார்கள்!!

பாலோ பால்! என்று அழும் தாயைக் காட்டலாம்; பால் கிடைக்காது அலைந்து அலுத்துப்போன தகப்பனைக் காட்டலாம்! ஒரு காங்கிரஸ் தலைவர் படத்தைக் காட்டலாம். பாலும் தேனும் கலந்து ஓடும்! என்று அவர் முன்பு முழக்கமிட்டது அந்த ஏழையின் காதில் விழுவது போன்ற நிலையைக் காட்டலாம். எங்கிருந்தோ ஒரு கழுதைக் குரல் கிளம்புவதைக் காட்டலாம். அன்றைய இதழில், கொட்டை எழுத்தில் கழுதைப் பாலைச் சாப்பிடலாம்— ருசியானது— வலிவு தரவல்லது என்று அமைச்சர் ஒருவர்