மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/013
10. ஆனைமலை பிராமி எழுத்து
மதுரையிலிருந்து மேலூருக்குப் போகிற சாலையில் ஐந்து கல் அளவில் ஆனைமலை இருக்கிறது. இந்தமலை பெரிய கற்பாறையினால் அமைந்துள்ளது. இந்த மலைப்பாறையின் உருவ அமைப்பு யானையொன்று தன்னுடைய முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு அக்கால்களின் நடுவே தும்பிக்கையை வைத்திருப்பது போலக் காணப்படுகிறபடியால் இதற்கு யானை என்று பெயர் உண்டாயிற்று. யானை மலைக்குன்றில் சில இடங்களிலே சமணசமய தீர்த்தங்கரரின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும் காணப்படுகின்றன. இவை கி.பி. 7,8ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த மலையின் அடிவாரத்தில் நரசிங்கமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் பாண்டியனுடைய அமைச்சனாக இருந்த மாறங்காரி கி.பி. 770 இல் நரசிங்கப் பெருமானுக்கு ஒரு குகைக்கோயிலை அமைத்தான் என்று அங்குள்ள வட்டெழுத்து கிரந்த எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.
பிற்காலத்தில் இந்த மலையைப் பற்றிப் புராணக்கதைகள் கற்பிக்கப்பட்டன. சமண சமய முனிவர் தங்களுடைய மந்திர சக்தியினால் ஒரு பெரிய யானையை உண்டாக்கி அதைப் பாண்டியனுடைய மதுரை நகரத்தை அழித்துவிட்டு வரும்படி ஏவினார்களாம். அந்தப் பெரிய யானை மதுரையை யழிக்க வருவதைக்கண்ட பாண்டியன் சொக்கப்பெருமானை வேண்டிக்கொள்ள அவர் நரசிங்க அம்பு எய்து யானையைக் கொன்றாராம். விழுந்த யானை கல்லாகச் சமைந்துவிட்டதாம். இந்தக் கதை திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகின்றன.
இந்த யானைமலை மேல் உயரத்திலுள்ள இயற்கையான குகையும் அக்குகை வாயிலின்மேல் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்தும் நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை. மலையுச்சியிலுள்ள குகைக்குச்செல்வது கடினமானது. குகையின் நீளம் 23 அடி குகைக்குள்ளே முனிவர் இருப்பதற்காகக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குகையின் வாயிலுக்கு மேலேயுள்ள பாறையின் ஓரத்தில், மலைநீர் குகைக்குள்ளே விழாதபடி பக்கங்களில் வழிந்து போகும்படி குழைவான தூம்பு செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியிலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்குச் சற்றுத்தூரத்தில் நீர் ஊற்றுள்ள சுனையொன்று இருக்கிறது. குகைவாயிலின் மேலேயுள்ள பாறையில் நீண்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் அவ்வாண்டின் சாசனத் தொகுப்பில் 457ஆம் எண்ணுள்ளதாக இந்தச் சாசனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வெழுத்துக்களின் வரிவடிவம் இவை:
இந்த எழுத்துக்களைப் படித்த அறிஞர்கள் இதற்கு வெவ்வேறு பொருள் கூறியுள்ளனர். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.
- இ வ(ம்) ஜெனா டு தூ உடை யுள (பா)த்னதானா ஏரி
- அதாது வாயிஅரட்டம் ட்டகாயி பானா (ஆரிதனா)
- இவ்வாறு படித்த இவர் கீழ்க்கண்டவாறு விளக்கங்கூறுகிறார்.
‘இவம்ஜெநாடு’ என்பது ஒரு நாட்டின்பெயர். உடையுஎன்பது உடையன் (தலைவன்) என்னும் பொருள் உள்ளது. ஏரி என்பது குளத்தைக் குறிக்கிறது. ஆரிதனா என்பது ஹரிதானா என்னும் சமற்கிருதச் சொல்லின் திரிபு. தாதுவாயி என்பது தந்துவாய என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு. இதன் பொருள் துணிநெய்கிறவன் என்பது.1
திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்;
- இவ குன்றது உறை உள்நாதன் அ தான
- ஏரி அநிதன் அத்துவாயி அரட்ட காயிபான்
இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகின்றார்: ‘குன்றத்தூரில் வசிக்கிற உள்நாதன் கொடுத்த தானங்கள். பின் உள்ள சொற்கள் இந்தக் குகையில் வசித்தவருடைய பெயரைக் கூறுகின்றன’.2
திரு. நாராயணராவ் இதை இவ்வாறு படித்துள்ளார்:
- ‘இவகு-நாட்டு-தூ உட்டுயுள-பொதன-தானா
- ஏரி ஆரிதானா அதாந்துவாயி ‘அ-ரட்ட-காயிபானா’
நாடு என்பது திராவிடச் சொல் அன்று; அது நட் என்னும் சமற்கிருத வேர்ச்சொல். போதனா என்பது புதரானாம் அல்லது பௌத்ரானாம் என்னும் சமற்கிருதச் சொல்லைச் சுட்டுகிறது. தான என்பது தானம் என்னும் சமற்கிருதச் சொல். ஏரி ஆரிதனா என்பது ஐராவதானாம் என்னும் சொல்லாகும். ரட்ட என்பது ராஷ்ட்ரம். காயிபானா என்பது காஸ்யபானாம் என்னும் சொல். இவ்வாறு விளக்கங்கூறி இதன் கருத்தையும் தெரிவிக்கிறார். அதாத்து வாயக ராஷ்ட்ரத்து இவது நாட்டிலிருந்து வந்தவர்களான காஸ்யபர்களின் ஐராவத குலத்தைச் சேர்ந்த உட்டுயுல் என்பரின் மக்கள் (அல்லது பேரன்கள்?) செய்த தானங்கள்.3
திரு. ஐராவதம் மகாதேவன் இதைப் படித்துக் கூறுவது இது:
- இவ குன்றதூர் உறையுள் நாதன் தான அரிதன்
- அத்துவாயி அரிட்ட காயிபன்.
“குன்ற(த்)தூர் (படுக்கையில் வசிக்கும்) நாதன் என்பவரின் படுக்கைகள் (இவற்றைச் செய்து கொடுத்தவர்) அரி அரிதன், அத்துவாயி, அரட்ட காயிபன்.4
திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், இவ்வாறு படித்து விளக்கமும் பொருளும் கூறுகிறார்:
- ‘இவ குன்றதூ உறையுள் பாதந்தன் எரி அரிதன்
- அதன் தூவயி அரிட்ட கோயிபன்’
இவகுன்றம் என்பது யானைமலை. இவம் என்னும் சமற்கிருதச்சொல் இபம் என்றாயிற்று. இந்த மலையின் பழைய பெயர் ‘இவகுன்று’ என்றிருக்கலாம். ‘பதந்தன்’ என்பது ‘பதந்த’ என்னும் பாலிமொழிச் சொல். இதன் பொருள் வணக்கத்துக்குரிய ஆசிரியர்’ என்பது. எரி என்பது தீ (அக்கினி). அஃதாவது சூரியனைக் குறிக்கிறது. அரிதன் என்பது ஹாரித என்பதாகும். ஹாரித குலத்தைச் சேர்ந்தவன் என்பது இதன் பொருள்.
- முதல் வாக்கியத்தின் பொருள். ‘இவ குன்றத்தில் வசிக்கிற வணக்கத்துக்குரிய (பத்தந்த)
ஏரி ஆரிதன் ‘என்பது இரண்டாவது வரியில்’ அதன் என்பது ஆதன் என்னும் சொல்லின் திரிபு. ஆதன் என்பது அதன் என்று எழுதப்பட்டுள்ளது. தூவி, தூவல் என்னுஞ் சொற்கள் பறவைகளின் சிறகைக் குறிக்கும் சொற்கள். இவை மயில் இறகையும் குறிக்கிறது. தூவயி (தூவை அல்லது தூவையர்) என்பது மயில் இறகைக் கையில் வைத்திருப்பவர் என்னும் பொருள் உள்ளது. திகம்பர சைனர் மயில்இறகுக் கொத்தைக் கையில் வைத்திருப்பது வழக்கம். ஆசீவர்களும் இறகை வைத்திருக்கக் கூடும். அரிட்ட கோயிபன் என்பது ஓர் ஆளின் பெயர். கோயிபன் என்பது காஸ்யபன் என்பதன் திரிபு. இந்த வாக்கியத்தின் பொருள் ‘மயில் இறகுக் கத்தையை வைத்திருக்கிற ஆதனாகிய’ அரிட்ட கோயிபன்’ என்பது.5
இந்த வாக்கியத்தை நாம் படித்து நேரான செம்பொருள் காண்போம்.
- இ வ கு ன ற தூ உ றை யு ள உ த ன ஏ ரிஅ ரி த ன
- அ த தூ வா யி அ ரி ட் ட கொ யி ப ன
புள்ளி இட்டுப் பதம்பிரித்தால் இவ்வாறு வாக்கியம் அமைகிறது:
- இவ் குன்ற தூ உறையுள் உதன் ஏரி அரிதன்
- அத் தூ வாயி அரிட்ட கோ யிபன்
இந்த வாக்கியத்தின் பொருள் இது:
குன்றிலுள்ள உறையுளையும் (குகையையும்) அதன் அருகில் உள்ள ஏரியையும் அரிதன் அந்துவாயி, அரிட்டகோயிபன் (என்னும் இருவர் தானமாக முனிவர்களுக்குக் கொடுத்தார்கள்).
இதற்கு விளக்கம் வருமாறு: இவ் என்பது இவை என்னும் பொருள் உள்ள சொல். இச்சொல் குன்றின் மேலுள்ள குகையையும், அதற்குள் உள்ள கற்படுக்கைகளையும், குன்றின் கீழேயுள்ள ஏரியையும் சுட்டுகிறது. குன்றதூ: இதன் பொருள் குன்றத்து என்பது. கடைசி எழுத்து து என்றிருக்க வேண்டியது. தூ என்று எழுதப்பட்டுள்ளது. த்து என்று தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. வேறு சில பிராமிக் கல்வெட்டுக்களிலும் இவ்வாறே தகர ஒற்றெழுத்து விடுபட்டிருக்கிறது. இதை த்து என்று படிப்பதுதான் வாக்கிய அமைதிக்குப் பொருந்துகிறது. உறையுள் என்பது வசிக்கும்இடம் என்னும் பொருள் உள்ள சொல். உறையுள் என்பது இங்கு இம்மலையில் இருந்த முனிவர்கள் குகையைச் சுட்டுகிறது. அடுத்துள்ள உதன் என்பது சுட்டெழுத்து. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்களில் அகரம் (உது) நடுவில் (இடையில்) உள்ள பொருளைச் சுட்டுகிறது, என்பது இலக்கணம். இந்த இலக்கணப்படி ‘உதன்’ என்பது இடையிலுள்ள என்னும் பொருள்உள்ள சொல். இச்சொல் ஏரியைச் சுட்டுகிறது. ஏரி என்பது நீர்நிலையைக் குறிக்கிறது. இந்த யானைமலையின் உச்சியில் குகைக்கு அருகில் நீரூற்றுச்சுனை இருக்கிறது என்று முன்னமே அறிந்தோம். கவ்வெட்டு கூறுகிற ஏரி, இந்தச் சுனை அன்று. மலையில் அடிவாரத்தில் இருந்த ஏரியைக் குறிக்கிறது.
குன்றத்தைச் சார்ந்த உறையுளையும் (குகையையும்) குன்றத்தைச் சார்ந்த (அடிவாரத்தில்) இருந்த ஏரியையும் ஆக இரண்டையும் முனிவர்களுக்குத் தானம் செய்தார்கள். இவ்விரண்டு பொருள்களையும் குறிக்கவே ‘இவ்’ என்னும் சொல் பன்மையில் குறிக்கப்பட்டது. இச்சொல் குன்றத்தை மட்டும் குறிப்பதாக இருந்தால் ‘இக் குன்றத்து என்று ஒருமையில் எழுதப்பட்டிருக்கும். ‘இவ்’ என்று இருப்பதனால் இச்சொல் குகையை (உறையுளை)யும் ஏரியையும் குறிக்கிறது என்பது தெளிவு. உறையுளைத் தானங்கொடுத்தது சரி, ஆனால் ஏரியை ஏன் துறவிகளுக்குத் தானங்கொடுத்தார்கள் என்று ஐயம் உண்டாகலாம். முனிவர்களின் உணவுக்காகத் தானியம் பயிர்செய்வதற்கு இந்த ஏரி தானம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இலங்கையில் ஒரு குகையில் உள்ள பிராமிக்கல்வெட்டு ஒன்று, மலைக்குகையையும் அதன் கீழுள்ள ஏரியையும் தானம்செய்ததைக் கூறுகிறது. பருப்புகளைப் பயிர்செய்வதற்கு அந்த ஏரியைத் தானம் செய்துள்ளனர். அதுபோன்ற இந்த மலையை அடுத்துள்ள ஏரி தானியம் பயிர் செய்யத்
தானங் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது. அரிதன் அத்துவாயி, அரிட்ட கோயிபன் என்பவை தானங்கொடுத்தவர்களின் பெயர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து குகையையும் (உறையுளையும்) ஏரியையும் தானம் செய்தார்கள்.
கடைசியில் தானம் என்னும் சொல் இவ்வாக்கியத்தில் விடுபட்டுள்ளது. ஆகவே இந்த வாக்கியம் பயனிலை இல்லாமல் முடிகிறது. வினைச்சொல்லைச் சேர்த்து இந்த வாக்கியத்தை ‘இவ் குன்றத்து உறையுள் உதன் ஏரி அரிதன் அத்துவாயி அரிட்ட போயிபன் தானம்’ என்று முடிக்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. Proceedings and Transaction of the First All India Oriental Conference, Poona 1919.
2. Proceedings and Transaction of the Third All India Oriental Conference, Madras 1924.
3. Proceedings and Transaction of the Tenth All India Oriental Conference, Tirupati 1940; pp 362-367 New Indian Antiquary Vol. I.
4. P. 65 No. Seminar on Inscriptions 1966.
5. PP. 276-278. Early South Indian Palaeography.