மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5
This page is under construction. This text or section is currently in the middle of an expansion or major revamping. More Information and Options However, you are welcome to assist in its construction by editing it as well. Please consult the edit history should you wish to contact the person who placed this template. If this article has not been edited in several days, please remove the under construction notice. While actively editing, consider adding {{inuse}} to reduce edit conflicts. |
மயிலை சீனி. வேங்கடசாமி
ஆய்வுக் களஞ்சியம்
5
பண்டைத் தமிழகம்
ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்
பதிப்பு
வீ. அரசு
இளங்கணி பதிப்பகம்
நூற் குறிப்பு
நூற்பெயர் | : | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5 |
ஆசிரியர் | : | மயிலை சீனி. வேங்கடசாமி |
பதிப்பாசிரியர் | : | பேரா. வீ. அரசு |
பதிப்பாளர் | : | முனைவர் இ. இனியன் |
பதிப்பு | : | 2014 |
தாள் | : | 16கி வெள்ளைத்தாள் |
அளவு | : | 1/8 தெம்மி |
எழுத்து | : | 11 புள்ளி |
பக்கம் | : | 200 |
நூல் கட்டமைப்பு | : | இயல்பு (சாதாரணம்) |
விலை | : | உருபா. 190/- |
படிகள் | : | 1000 |
மேலட்டை | : | கவி பாஸ்கர் |
நூலாக்கம் | : | வி. சித்ரா & வி. ஹேமலதா |
அச்சிட்டோர் | : | ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் |
வடபழனி, சென்னை - 26. | ||
வெளியீடு | : | இளங்கணி பதிப்பகம், |
பி 11, குல்மொகர் அடுக்ககம், | ||
35/15பி, தெற்கு போக்கு சாலை, | ||
தியாகராய நகர், | ||
சென்னை - 600017. | ||
நூல் கிடைக்குமிடம் | : | தமிழ்மண் பதிப்பகம், |
2, சிங்காரவேலர் தெரு, | ||
தியாகராயர் நகர், சென்னை - 17. | ||
☎ 044 2433 9030. |
பதிப்புரை
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற்காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல்.
இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராகவும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப்பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர்.
இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர்.
பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப்பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.
இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளிவருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி.
- பதிப்பாளர்
பண்டைத் தமிழகம்
ஆவணம் - பிராமி எழுத்துக்கள் - நடுகற்கள்
அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இறுதி நூல் இதுவாகும். அவரது மறைவிற்குப் பிறகு இந்நூல் வெளிவந்தது. பிராமி எழுத்துக்கள் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுவாகக் கருதலாம். 1960 தொடங்கி ஐராவதம் மகாதேவன் இத்துறை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆய்வுகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். 2004 இல்தான் அனைத்து ஆய்வுகளும் அடங்கிய முழுமையான நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 1970 களின் இறுதிக் காலங்களில் களஆய்வுசெய்து இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியுள்ளார்.
தமிழ் மொழிக்கென உருவாகிய தொல்லெழுத்துமரபுகள் குறித்த முரண்பட்ட கருத்துக்கள் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருவதைக் காண்கிறோம். தொல்லெழுத்தியல்துறை குறிப்பிட்ட மொழியின் பழமைகுறித்து அறிவதற்கான அடிப்படை மூலத்தரவு ஆகும். ஒலிவடிவம், வரிவடிவம் பெறுதல் என்பது அம்மொழியின் தொல்வரலாறு அறிவதற்கு உதவும். தமிழ் X சமசுகிருதம் என்னும் முரண் சார்ந்த கருத்துநிலை உடையோர், பிராமிஎழுத்துக்கள் தொடர்பாகவும் இவ்வகையான முரண்பட்ட கருத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது களஆய்வு மூலம் திரட்டிய பிராமி கல்வெட்டுக்களை, தமிழ் தொல்லெழுத்தியலாகவே ஆய்வு செய்துள்ளார். தமிழ் மொழியின் மூல எழுத்து வடிவமாக பிராமியைக் கருதியுள்ளார். அக் கண்ணோட்டத்தில் இந்நூலை உருவாக்கியுள்ளார். அரச்சலூர், கொங்கர் புளியங்குளம், குன்னக்குடி, மால கொண்ட, முத்துப்பட்டி, அழகர்மலை, ஆண்டிப்பட்டி, விக்கிரம மங்கலம், அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, மேட்டுப்பட்டி, கீழை வலவு, மருகால்தலை, அரிக்கமேடு, புகழூர், ஐயர்மலை ஆகிய இடங்களில் காணப்படும் பிராமி எழுத்துள்ள கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவை அனைத்து குறித்தும் அறிஞர் ஐ. மகாதேவன் அவர்களால் விரிவான ஆய்வு நிகழ்த்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
சங்க காலத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் பிராமி கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளுக்குமான உறவுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்நூலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய வேறு பல பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான கட்டுரைகளையும் இணைத்துள்ளோம். இத்தொகுப்பு, பண்டைய தமிழகம் குறித்த வரலாற்று ஆய்வுக்கு மூலத்தரவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். சங்க கால நூற்பிரதிகளில் காணப்படும் செய்திகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிராமி கல்வெட்டு மற்றும் சங்க கால நடுகற்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் அமைந்துள்ளன.
இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.
ஏப்ரல் 2010
சென்னை - 96.
வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர்.
இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக்காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது.
தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார்.
வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்தியவியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார்.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதிகளை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன.
இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன்.
- வீ. அரசு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள்
- சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.
- கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும்.
- பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார்.
- சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது.
- பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார்.
- அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார்.
- சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
- ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந்தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார்.
- தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம்.
- பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது.
- இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம்.
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள்
1936 : கிறித்தவமும் தமிழும்
1940 : பௌத்தமும் தமிழும்
1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு)
1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு)
1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 : பௌத்தக் கதைகள்
1954 : சமணமும் தமிழும்
1955 : மகேந்திர வர்மன்
: மயிலை நேமிநாதர் பதிகம்
1956 : கௌதம புத்தர்
: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 : அஞ்சிறைத் தும்பி
: மூன்றாம் நந்தி வர்மன்
1959 :மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 : புத்தர் ஜாதகக் கதைகள்
1961 : மனோன்மணீயம்
1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 : உணவு நூல்
1966 : துளு நாட்டு வரலாறு
: சமயங்கள் வளர்த்த தமிழ்
1967 :நுண்கலைகள்
1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 :பழங்காலத் தமிழர் வாணிகம்
: கொங்குநாட்டு வரலாறு
1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1977 : இசைவாணர் கதைகள்
1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு
: பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டு இல்லை)
வாழ்க்கைக் குறிப்புகள்
1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார்.
1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார்.
1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறைவுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார்.
1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார்.
1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை சிரியராகப் பணியேற்றார்.
1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார்.
1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.
1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு.
1975-1979 : தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர்.
1980 : 8.5.1980-இல் மறைவுற்றார்.
2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை.
பொருளடக்கம்
பண்டைத் தமிழகம்
ஆவணம் – பிராமி எழுத்துகள், நடுகற்கள்
20 |
46 |
49 |
55 |
58 |
61 |
63 |
77 |
79 |
84 |
103 |
108 |
111 |
118 |
121 |
126 |
129 |
134 |
143 |
பின்னிணைப்பு
146 |
149 |
156 |
166 |
174 |
181 |
188 |
126 |
129 |
134 |
143 |
பின்னிணைப்பு
146 |
149 |
156 |
166 |
174 |
181 |
188 |
[.[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/027]]
[.[மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/028]]
[.[பகுப்பு:Transclusion completed]]