மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/008
5. முத்துப்பட்டி பிராமி எழுத்து
மதுரையிலிருந்து திருமங்கலத்துக்குப் போகின்ற சாலையில் பத்துக் கல் தொலைவில் முத்துப்பட்டி இருக்கின்றது. இந்தச் சிற்றூரின் சாலையில் இடப்பக்கமாக உம்மணாமலை என்னும் குன்றுகள் இருக்கின்றன. கடைசிக் குன்றிலே இவ்வூருக்கருகில் பெரிய குகை ஒன்று இருக்கிறது. கிழக்கு மேற்காக அமைந்திருக்கிற இந்தக் குகையின் நீளம் 43 அடி, உயரம் 5 அடி. இங்கு முப்பதுக்கு மேற்பட்ட கற்படுக்கைகள் இருக்கின்றன. இங்கு ஐந்து இடங்களில் பிராமி எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டெழுத்துக்கள் படிக்க முடியாதபடி அதிகமாகச் சிதைந்து உள்ளன. இவை 1910 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 1910 ஆம் ஆண்டு சாசனத் தொகுதியில் 58, 59, 60 ஆம் எண்ணுள்ளவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வரிவடிவம் இது:
திரு. கிருட்டிண சாத்திரி இவற்றை 1. 'விநதை ஊர், 2. சைய அளனா, 3. கா விய' என்று படித்துள்ளார்.1 திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு கூறுகின்றார்.2
‘சைன அளன் விநதை ஊர கவிய்’. கவிய்-காவி-குகை. இந்தக் குகையில் வசித்தவர் பெயர் சையளன் விந்தை ஊரன் என்று பொருள் கூறுகின்றார்.
திரு.சி. நாராயண ராவ், ‘விநதை’ ஊர ‘சைய அலேன காவிய' என்று படித்து, 'விநதை ஊர என்பவருடைய குடைவான குகை ஆசிரமம்' என்று பொருள் கூறுகின்றார்.3
திரு.டி.வி. மகாலிங்கம், 'விந்தை ஊர் சையளன் கவிய்' என்று படித்து ‘விந்தை ஊர சையளனுடைய குகை குகை என்று பொருள் கூறியுள்ளார்.4 திரு.ஐ. மகாதேவன் கூறுவது இது.5
‘சையளன் விந்தை ஊர் காவிய்’ என்று படித்து, சையௗன் (இலங்கையைச் சேர்ந்தவன்) ஆன விந்தை என்பவருடைய காவிய் (குகை) என்று பொருள் கூறுகின்றார்.
இதை ‘விந்தை ஊர் சையளன் காவய்' என்று படிக்கலாம். விந்தையூர் சையளன் காவய் என்பவர் இக் கற்படுக்கையை அமைத்தார் என்பது பொருள்.
அடிக் குறிப்புகள்
1. 1st All India Oriental Conference 1919.
2. 3rd All India Oriental Conference.
3. New Indian Antiquary Vol, I.
4. p. 268-271 Early South Indian Palaeography.
5. p. 65 Seminar on Inscriptions 1960.