உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/007

விக்கிமூலம் இலிருந்து

4. மால கொண்ட பிராமிய எழுத்து

நெல்லூர் மாவட்டத்து கண்டுகூர் தாலுகாவில் மாலகொண்ட என்னும் மலை இருக்கிறது. கொண்ட என்றால் தெலுங்கு மொழியில் மலை என்பது பொருள். இந்த மலையில் ஒரு குகையும் அதன் அருகில் பிராமி எழுத்தும் காணப்படுகின்றன. இவை 1937ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தென் இந்தியக் கல்வெட்டுத் துறையின் 1937- 38 ஆம் ஆண்டு அறிக்கையில் இது கூறப்பட்டிருக்கின்றது.1

இந்தப் பிராமி எழுத்தின் மொழித் தொடர்கள் பிராகிருத மொழித் தொடர்கள். இப்போது ஆந்திரநாட்டில் சேர்ந்துள்ள இந்த இடம் சங்க காலத்தில் தமிழகத்தின் வடஎல்லையைச் சேர்ந்திருந்தது. தமிழகத்தின் வட எல்லை பொதுவாக வேங்கடமலை என்று கூறப்பட்டாலும் அதன் சரியான எல்லை வடபெண்ணை ஆறு. பழைய காலத்துத் தொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அக்கோட்டங்களின் முதல் கோட்டம் வடபெண்ணை ஆற்றின் தென் கரையில் இருந்தது. பழந்தமிழகத்தின் வட எல்லையில் இருந்த மால கொண்ட மலையில் உள்ள பிராமி எழுத்தின் வரிவடிவம் இது. (படத்தில் காண்க.)

இதன் சொற்றொடர் இது. அர சாள குல்ஸ தத ஸெடி புதஸ ஸிரி வீரி செ ட்டி நோ தான.

அருவாள குலத்து ந(ந்)த செட்டி மகனான ஸிரி வீரி செட்டியினுடைய தானம் என்று இதன் பொருள்.

விளக்கம். அரவாள என்பது அருவாள என்னும் சொல். அருவா நாடு அல்லது அருவாள நாடு என்பது தொண்டை மண்டலத்தின் பழைய பெயர். தொண்டை நாடான அருவா நாடு - பழங்காலத்தில் திருவேங்கட நாட்டை (திருவேங்கடக் கோட்டத்தை)த் தன்னுடன் கொண்டிருந்தது. அதன் வட எல்லை வடபெண்ணையாறு. தொண்டை மண்டலமான அருவா நாட்டைத் தாலமி என்னும் கிரேக்கர் அருவர்னொய் (Aruvarnoi) என்று கூறுகின்றார். அருவா நாட்டுக்கு அடுத்து வடக்கேயிருந்த தெலுங்கர் தமிழரை அரவர் என்றும் தமிழ்


மொழியை அரவபாஷை என்றும் கூறுவர். அருவா நாட்டவர் அருவா நாட்டு மொழி என்பது இதன் பொருள்.

குலஸ என்பது குலத்தினுடைய கலத்தைச் சேர்ந்த என்னும் பொருள் உள்ள சொல். ஸ என்பது பிராகிருத மொழி எழுத்து. அருவாள குலஸ என்பதன் பொருள் அருவாள குலத்தைச் சார்ந்த என்பது. எனவே இந்தக் குகையைத் தானஞ் செய்தவர் அருவா நாட்டவர் (தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்) என்று தெரிகின்றார். நதசெடி என்பது நந்த செட்டி என்பதாகும். செட்டி என்பது வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். நந்த செட்டி என்பது வாணிகத் தொழில் செய்த நந்தன் என்று பொருள் உள்ளது. புதஸ என்பது புத்திரனுடைய என்னும் பொருள் உள்ள பிராகிருத மொழிச் சொல். ஸிரி என்பது ஸ்ரீ என்பது. வீரிசெட்டி நோ என்பதன் பொருள் வீரி செட்டி யினால் என்பது. இதிலுள்ள ட்டி என்னும் எழுத்து வடமொழி எழுத்து. தான என்பது தானம் என்னும் சொல். தா என்னும் எழுத்து வடமொழி 3ஆம் தகர எழுத்து. அருவாள குலத்தைச் சேர்ந்த வணிகனான நந்தன் என்பவருடைய மகனும் வாணிகனுமான ஸ்ரீவீரி என்பவன் இந்தத் தானத்தைக் கொடுத்தான் என்பது இதன் திரண்ட பொருள்.

அடிக் குறிப்புகள்

1. Annual Report, on South Indian Epigraphy 1937-38 part II. para. 1.