உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/004

விக்கிமூலம் இலிருந்து


1. அரச்சலூர் பிராமி எழுத்துக்கள்

கோயமுத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில், ஈரோடு காங்கேயம் நெடுஞ்சாலையில் ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது. புகழூருக்கும் அரச்சலூருக்கும் முப்பது கல் தொலைவு இருக்கும். அரச்சலூர் நாகமலைமேல் ஏறத்தாழ அறுபது அடி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையை இவ்வூரார் ஆண்டிப்பாறை என்று கூறுகிறார்கள். இந்தக் குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் உள்ளன. 1961 ஆம் ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி, ஈரோடு புலவர் இராசு மற்றும் சில நண்பர்கள் இந்தக் குகைக்கும் சென்று இங்குள்ள பிராமி எழுத்தை மைப்படி எடுத்து சுதேசமித்திரன், செந்தமிழ்ச் செல்வி இதழ்களில் வெளியிட்டார்கள்.1 பிறகு தொல்பொருள் துறையினர் அங்குச் சென்று இவ்வெழுத்துக்களைப் பார்த்தனர். இதனுடைய வரிவடிவம் இது:


இந்தப் பிராமி எழுத்து காலத்தால் பிற்பட்டது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இது இருபத்தேழு எழுத்துக்களைக் கொண்ட ஒரே சொற்றொடராக அமைந்திருக்கிறது.

எபிகிருபி இலாகாவின் 1961 - 62 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த எழுத்துக்களைப் பற்றி அறிமுகப்படுத்தி, தற்காலிகமாக இதைப் படித்துள்ளனர்.2 அதில் இவ்வாறு படித்திருக்கிறார்கள்.

எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய்
வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன்

திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துள்ளார்.3

ஏழு தானம் பண் வித்தான் மணிய்
வண்ணக்கன் தே(வ)ன் சா(த்த)ன்.

மணிக்கல் வாணிகனான தேவன் சாத்தன் (இந்த) எழு படுக்கைகளை (இருக்கைகளை) பண்ணுவித்தான் என்று பொருள் கூறியுள்ளார்.

திரு.டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் படித்துப் பொருள் கூறியுள்ளார். 4இவ்வெழுத்துக்களின் தொடக்கத்தில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் ‘சித்தம்” என்னும் சொல்லைக் குறிக்கிற அடையாளம் என்று கருதுகிறார்.

‘(சித்தம்) தித்தம் பூணதத்தான் மாறைய வண்ணக்கன் தேவன் சாத்தன்’. தித்தம் என்பது தீர்த்தம். புனிதம் என்னும் பொருள் உள்ளது. தத்தான் என்றிருப்பது தந்தான் என்றிருக்கவேண்டும். 'மாறைய' என்பது ஓர் ஊரின் பெயரைக் குறிக்கிறது. இது மாறை நாட்டைச் சேர்ந்த ஊர் என்பது பொருள். வண்ணக்கன் என்பது நாணயப் பரிசோதகன் என்னும் பொருள் உள்ளது. கடைசிக் சொற்கள், தேவன் சாத்தன் என்பவை.

மாறநாட்டு நாணயப் பரிசோதகனாகிய தேவன் சாத்தன் தூய்மை பெறுவதற்குத் தவம் செய்ய (இந்தப் படுக்கைகளைக்) கொடுத்தான் என்பது பொருள். இதை நாம் படித்துப் பொருள் காண்போம்.

முதலில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் ௭ என்னும் எழுத்தாகும். சாதாரணமாகப் புள்ளியிடப்படவேண்டிய எழுத்துக்கள் கல்வெட்டில் புள்ளியிடப்படுவது இல்லை. இந்த எகர எழுத்தில் புள்ளியிடப்பட்டிருக்கிறது. ‘எகர ஒகர மெய் புள்ளி பெறும்’ என்பது பழைய எழுத்திலக்கணம். இதில் புள்ளியிட்டிருப்பதனால் இது எகரக் குற்றெழுத்து என்பது நன்றாகத் தெரிகிறது. பிராமி எகர எழுத்து முக்கோண வடிவமாக எழுதப்படுவது வழக்கம். முக்கோண வடிவம் காலப்போக்கில் வட்டவடிவமாக மாறிவிட்டது. இந்த எழுத்துக்களைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்:

எழுத்தும் புணருத்தான் மணிய்
வணக்கன் தேவன் சாத்தன்.

எழுதுதும் என்றிருப்பது எழுத்தும் என்றிருக்கவேண்டும். புணருத்தான் என்பது பொருத்தினான் சேர்த்தான் என்னும் பொருள் உள்ள சொல். இது புணர்த்தான் என்றிருக்கவேண்டும். எழுத்தும் புணர்த்தான் என்பதன் பொருள். எழுத்தையும் சேர்த்தவன் (எழுதினவன்) என்பது. மணிய் என்பது மணி. மணிக்கற்கள். இகர ஈற்றுச் சொல்லில் யகர மெய் சேர்ந்துள்ளது. வண்ணக்கன் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். மணிவண்ணக்கன் என்றால் மணிக்கல் (இரத்தினக்கல்) வாணிகன் என்பது பொருள். தேவன் சாத்தன் - இது மணி வாணிகனுடைய பெயர். வண்ணக்கன் என்பது பொன்னையும் மணிகளையும் பரிசோதிக்கிறவன். புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர்கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன், வண்ணக்கன் சோமருங்குமரனார் என்னும் பெயர்களைச் சங்கச் செய்யுட்களில் காண்கிறோம்.

மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் (இந்தக் கல்வெட்டின்) எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள். எழுத்தும் என்பதில் உள்ள ‘உம்' இவன் இன்னும் எதையோ செய்தான் என்று கூறுகிறது. அது என்ன? குகையில் முனிவர் இருப்பதற்குக் கற்படுக்கையை அமைத்ததோடு அல்லாமல் அவனே இந்தக் கல்வெட்டின் எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள்.

அடிக் குறிப்புகள்

1. சுதேசமித்திரன் 1961 சூன் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு, ‘ஈரோடு அருகே பிராமி எழுத்துச் சாசனம் என்னும் தலைப்பு ‘ஈரோடுக்குப் பக்கத்தில் அரச்சலூர் மலையில் மே 26 ஆம் நாள் பிராமி எழுத்துச் சாசனம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அரச்சலூர் மலையிலே ஆண்டிப்பாறை என்னும் குகையிலே இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. மயிலை சீனி வேங்கடசாமியும் அவருடைய நண்பர்களான ஸ்ரீபால், வித்துவான்கள் இராசு, பச்சையப்பன், சென்னியப்பனும் இந்தச் சாசனத்தைத் தற்செயலாகக் கண்டு பிடித்தார்கள்.'

2. Annual Report on Indian Epigraphy 1961-62 P. 10

3. P. 67. Seminar on Inscriptions 1966.

4. Early South Indian Palaeography, P. 293-298.