உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/005

விக்கிமூலம் இலிருந்து

2. கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து

மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பதரைக் கல் தொலைவில் திருமங்கலம் சாலையில் கொங்கர் புளியங்குளம் என்னும் ஊர் இருக்கின்றது. இவ்வூரின் வடகிழக்கே தாழ்வான பாறைக்குன்றுகள் இருக்கின்றன. இக் குன்றுகள் ஒன்றில் இயற்கையாக அமைந்த ஒரு பொடலில் ஆறு சிறு குகைகள் உள்ளன. இந்தக் குகைகளிலே 33 கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குகையிலே மூன்று பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக் கல்வெட்டு கள் 1910 ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 55, 56, 57 ஆம் எண்ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் படித்த அறிஞர்கள் வெவ்வேறு வகையாகப் படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவற்றைக் கூறுவோம். திரு. கிருட்டிணசாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.1

1. கு ட்டு கொ ட்டு பி நா வா னா ஊ பா சா அ னா (ஊ)

பா (ட்டு) வ

2. (கு) ட் (ஊ) கொ ட்டா லகு (ஈ) த தா வினா சே ட்டு

அ த (ஆ) னா லே னா

3. பா க னா ஊ ர பே த (ஆ) த (ஆ) னா பி ட்டா னா ஈத தா வெ

போ னா

குட்டு என்பது திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டில் வருகிற ‘குட்டு’ என்பதாகும். இது கொடு என்னுஞ் சொல்லின் திரிபு. பாகனூர் என்பது மதுரைக்கு வடக்கே உள்ள பாகனூர்க் கூற்றம். லேனா என்பது பாலிமொழிச் சொல். லேனா என்பதன் பொருள் குகை என்பது. திரு.கே.பி. சுப்பிரமணிய அய்யர் படித்து விளக்கங் கூறுவது வருமாறு:2

1. குட்டு கொட்டுபிதாவான் உபாசா அன் உபாருவான்

2. குட்டு கொட்டால கு இதா தாவின் சேட்டு அதான் லேன்

3. பாகனூர் போதாதான் பிட்டான் இதாதாவெ லேன்.

முதல் வாக்கியத்தில் உள்ள உபாருவன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். உபாசகனான (பக்தனான) உபாருவான் இந்தக் குகையை வெட்டுவித்தான் என்பது இந்த வாக்கியத்தின் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள ‘கொட்டு கொட்டாலகு' என்பது குகையை வெட்டி அமைக்கிறவன் என்னும் பொருள் உள்ளமு. இதாதாவின் சேட்டு அதான் என்பது ஓர் ஆளின் பெயர். கொத்திக் குகையை உண்டாக்குகிறவனாகிய இதாதாவின் என்பவனுடைய குகை என்பது இதன் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள பாகனூர் என்பது பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்தில் ஓர் ஊர். போதாதான் என்பதன் பொருள் தெரியவில்லை. பிட்டான் இதாதாவெ(ன்) என்பது ஓர் ஆளின் பெயர். பிட்டான் என்பது பட்டாரன் என்பதன் திரிபு. லேன் என்பதன் பொருள் குகை. பாகனூரில் இருக்கும் பிடான் இதாதாவெ என்பவனுடைய குகை என்பது இந்த வாக்கியத்தின் பொருள்.

பின் இரண்டு சொற்றொடர்களின் கடைசியில் இரண்டு குறிகள் உள்ளன. முதல் குறி சிறு வட்டமும் வட்டத்தின் மேலும் கீழும் இரண்டு கைகளும் உள்ளன. இஃது ஓம் என்பதைக் குறிக்கிறது. அதை அடுத்துச் சதுரமும் அதற்குள் குறுக்கு நெடுக்காக இரண்டு கோடுகளும் காணப்படுகின்றன. இவை சுவஸ்திகத்தின் அடையாளமாகும்.3

திரு. சி. நாராயணராவ் வழக்கப்படி இவற்றைப் பிராகிருதமாக்கிப் பிறகு சமற்கிருதப்படுத்தியும் பொருள் கூறுகிறார்.4

1. ‘குட்டு கொட்டு பிதா வானா உபாசா அவுவா ஊ பாட்டுவ’ (பிராகிருதம்)

உபாட்டு-அ குட்டு கொட்டாபிதவான் உபாத்யா யானாம்' (சமற்கிருதம்)

‘ஊபாட்டு’அ என்பவன் பொக்கிஷத்துக்காக இதை வெட்டினான் என்பது இதன் பொருள்.

2. ‘குட்டு கொடாலகு இதாதாவி நா சேட்ட அ தானா லேனா’ (பிராகிருதம்)

'கோஷ்ட்டம் கோஷ்ட்டாகா-க்ருதே ஹிதார்த்தாய;

ஞான ஸ்ரேஷ்ட்யஸ்ஸ தானம் லயனம்' (சமற்கிருதம்)

நூல் நிலையத்தின் ஆக்கத்துக்கான இடம்; ஞான சிரேஷ்டன் தானமாகக் கொடுத்த குகை என்பது பொருள்.

3. 'பாகானா - ஊரா பேத் (ஆ) தானா பிட்டானா இதாதாவே
போனா’ (பிராகிருதம்)

‘பாகானா’ ஊரா வ்ருத்தானாம் தானம் பிட்டாகானாம் ஹிதார் தாய போ (ப்ரோ) தானாம்' (சமற்கிருதம்)

முன்பின்னாக மாறிப்போன (பௌத்த மதத்தின்) பிடகப் புத்தகங்களை மாணவர் நன்மைக்காகப் பாகனூர்ப் பெரியவர்கள் கொடுத்த தானம் என்பது இதன் பொருள்:

திரு.ஐ. மகாதேவன் இவற்றை இவ்வாறு படிக்கிறார்.5

1. ‘குற கொடுபிதவன் உபாசன் ஊபறுவ்...’ உபாசகனாகிய
உ(ய்)ப றுவ(ன்) இந்தக் கூறையகை் கொடுப்பித்தான்.
(இவன் முதல் சொல்லைக் ‘குற' என்று படித்துக் கூறை என்று பொருள் கூறுகிறார்.)

2. ‘குற கொடல கு-ஈத்தவன் சேற அதன் என்? சேறு அதன்
(மேல்கட்டு) கூறையை வேய்ந்தான்.

3. ‘பாகன்-ஊர் பேதாதன் பிடன் ஈத்த வேபொன்' பா(க்)கனூர்
பேராதன் பி(ட்)டன் இந்தக் கூரையை வேய்ந்தான்.

திரு.தி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.6

1. ‘குறு கொடுபிதவன் உபசஅன் உபறுவ’

குறு என்பது கூறு என்னும் சொல். இங்கு இது கற்படுக்கைகளின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. கொடுபிதவன் என்பது சொல். உபசன் என்பது உபாசகன். குறுகோடுவைச் சேர்ந்த உபாசகனான உபறுவன் இதைக் கொடுப்பித்தான் என்பது இதன் பொருள். இதை வேறுவகையாக இப்படியும் படிக்கலாம்:

‘குறு கோடு பிதவான் ஊ பச-அன் ஊபறுவ’

குறுகோடு என்பதை ஓர் ஊர் அல்லது சிறு குன்று என்று பொருள் கொள்ளலாம். பிதவான் என்பது பிதா அல்லது பிதுர் என்னும் சொற்களுடன் சம்பந்தப்பட்ட சொல். இதன் பொருள் தந்தை என்பது. இது தூய்மையான துறவியைச் சுட்டுகிறது. உபசன் என்பது உபாசகன். உபறுவ என்பது ஓர் ஆளினுடைய பெயர். குறுபோட்டுத் தூய துறவியின் பக்தனான உபாசகன் உபாறுவன் என்பது இதன் திரண்ட பொருள்.

2. 'குறு கொடல்கு ஈத தூவின் செறு அதன் போன்’

குறு என்பது கூ. இங்குக் கற்படுக்கையின் ஒரு கூறைக் குறிக்கிறது. ஈத என்பதன் பொருள் இந்திரன். தூவின் என்பது மயில் இறகுக் கத்தை. செறு அதன் என்பது ஓர் ஆளின் பெயர்.

3. ‘பாகன் ஊர் பொத்தன் பிடன் ஈத தூ வே போன்’

பானூர் என்பது ஓர் ஊரின் பெயர். பிடன் என்பது ஓர் ஆளின் பெயர். தூ வெ என்பது மயில் இறகுக் கத்தை. போன் என்பது பொன். தூ பொன் என்பதன் பொருள் மலை (மேருமலை, பொன்மலை) மலைக்குகை என்பது.

இந்த மூன்று கல்வெட்டெழுத்துக்களை நாம் படிப்போம்.

1. குட்டு கொடுபிதவன் உபாசா அன் ஊபட்டூவ்

‘குட்டு கொடுப்பித்தவன் உபாசான் ஊபட்டுவ(ன்)’ என்பது இதன் வாசகம். குட்டு என்பது குன்று. கொடுபிதவன் என்பது கொச்சைச் சொல். இது கொடுப்பித்தவன் என்று இருக்க வேண்டும். உபாசாஅன் என்பதும் கொச்சைச் சொல். இஃது உபாசகன் என்றிருக்க வேண்டும். ஊபட்டுவன் என்பது உபாசனுடைய பெயர்.

2. குட்டு கொடாலகு ஈத்தவன் சொறு அதன் பொன்.

இந்த வாக்கியத்திலும் குட்டு என்னும் சொல் வருகிறது. குட்டு என்பதற்குக் குன்று என்று பொருள் கூறினோம். குன்று என்பதைப் பேச்சு வழக்கில் குட்டு என்று கூறுகிறார்கள். மதுரை வட்டத்து மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவிலுள்ள கருங்காலக் குடியில் இருக்கிற குன்றுகளை அவ்வூரார் குட்டு என்று கூறுகின்றார்கள். அவர்கள் அந்தக் குன்றுகளைப் ‘பஞ்ச பாண்டவர் குட்டு' என்று கூறுகிறார்கள். இது 1911ஆம் ஆண்டு எபிகிராபி அறிக்கை 57ஆம் பக்கத்தில் கூறப்படுகிறது. குன்று என்னுஞ் சொல் குற்று என்றாகிப் பிறகு குட்டு என்றாயிற்று.

இரண்டாவது சொல் ‘கொடாலகு‘ என்று இருக்கிறது. இதன் பொருள் தெரியவில்லை. ’குட்டு கொடாலகு‘ என்று இருப்பதைக் கொண்டு, இது, பொடவு ஆக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. குடங்கு என்பதைத் தவறாகக் கொடலகு என்று எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. ஈத்தவன்-கொடுத்தவன். மூன்றாவது சொல் சொறு. சிறு என்று எழுதப்பட வேண்டியதைச் ’சொறு‘ என்று பிழையாக எழுதியிருக்கின்றான் கற்றச்சன். ஆதன் என்பதை அதன் என்று எழுதியிருக்கிறான். சிறு ஆதன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். ’சொறு அதன் பொன்' என்பது சிறு ஆதன் கொடுத்த பொன். அவன் குகையின் கற்படுக்கையை அமைக்கப் பொன் கொடுத்தான். அதன் மதிப்பு இரண்டு குறியீடுகளில் காட்டப்பட்டுள்ளது.

3. பாகன் ஊர் பேத்தன் பிடான் ஈத்தவெ பொன்

பாகனூர் என்பது ‘பாகன் ஊர்‘ என்று பிரித்து எழுதப்பட்டுள்ளது. பாகனூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு வடக்கே இருந்த ஓர் ஊரின் பெயர். இது பாகனூர்க் கூற்றத்தின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேட்டில் பாகனூர்க் கூற்றம் கூறப்படுகிறது. ‘பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர்நாடு’7வேள்விக்குடி என்னும் ஊர் பாகனூர்க் கூற்றத்தில் இருந்தது என்று வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வதானை ஆடல் வேந்தேய்! வேள்விக்குடி என்னும் பெயர் உடையது. ஒங்காத வேற்றானையோ டோதவேல உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது.8

பேத்தன் பிடான் என்பதும் தவறாக எழுதப்பட்டிருக்கின்றது. போத்தன் பிட்டன் என்று இஃது எழுதப்படவேண்டும். பேத்தன் என்றும் பிடான் என்றும் பெயர் இல்லை. போத்தன், பிட்டன் என்னும் பெயர்கள் சங்ககாலத்தில் வழங்கி வந்தன. நாகன் போத்தனார், மதுரைப் போத்தனார், மதுரை மருதங்கிழார் மகனார் இளம் போத்தனார் என்று போத்தன் என்னும் பெயரைச் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன், பிட்டங்கொற்றன் என்னும் பெயர்களையும் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன் கொற்றனைய பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் உள்ளன.9 இந்தச் சான்றுகளைக் கொண்டு இந்தப் பிராமிக் கல்வெட்டில் 'பேத்தன் பிடான்' என்றிருப்பது தவறு என்றும் அது போத்தன் பிட்டன் என்றிருக்க வேண்டும் என்பதும் உறுதியாகத் தெரிகின்றது.

‘ஈத்தவெ’ என்றிருப்பதும் கொச்சைச் சொல். இஃது ஈத்தவை என்று இருக்கவேண்டும். ஈத்தவை என்பது ஈந்தவை என்பதன் வலித்தல் விகாரம். ஈந்தவை ஈத்தவை கொடுத்தவை. பொன் என்பதன் பக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவை பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன. அந்த அளவு இன்னதென்பது தெரியவில்லை.

பாகனூரில் இருந்த போத்தன் பிட்டன் என்பவர் இந்தக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகச் செலவிட்ட பொன் இவ்வளவு என்பதை இந்தக் கல்வெட்டு மொழிகள் கூறுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. 1st Oriental Conference.

2. Third Oriental Conference.

3. Third Oriental Conference.

4. New Indian Antiquary.

5. p.61. Seminar on Inscriptions 1966.

6. p.228 - 231 Early South Indian Palaeography.

7. வேள்விக்குடிச் செப்பேடு, மூன்றாம் ஏடு, பின் பக்கம் 33-34ம் வரி.

8. வேள்விக்குடிச் செப்பேடு, ஏழாம் ஏடு, பின்புறம் வரி 107-110.

9. புறநா. 120, 168, 169, 172.