மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/015
12. மேட்டுப்பட்டி (சித்தர்மலை)
மதுரை மாவட்டத்து நிலக்கோட்டையிலிருந்து தெற்கெ ஆறு கல் தொலைவில் அம்மைய நாயக்கனூரும் அவ்வூரைச் சார்ந்து மேட்டுப்பட்டிக் கிராமமும் உள்ளன. வைகையாறு பேரணைப் பக்கமாகத் திரும்புகிற இடத்தில் ஆற்றங்கரைக்கு அருகில் அழகான இயற்கைச் சூழ்நிலையில் சித்தர்மலை அமைந்திருக்கிறது. மலையின்மேலே சிவன்கோயில் இருக்கிறது. இம்மலையின் தெற்குப்புறத் தாழ்வரையில் பெரிய குகையும், குகைக்குள்ளேயே பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் உள்ளன. இவற்றை ஊரார் பஞ்சபாண்டவர் படுக்கை என்று கூறுகிறார்கள். இந்த நீண்ட குகைக்குள்ளே பக்கத்துக்கு ஐந்து படுக்கையாக இரண்டு வரிசையில் பத்துக் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலையணைப் பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் வாயிலை இப்போது கல்லும்மண்ணும் இட்டுச் சுவர்எழுப்பி அடைத்துள்ளனர். சுவரில் உள்ள சிறுவாயிலில் புகுந்து உள்ளேசென்றால் கற்படுக்கைகளைக் காணலாம். கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1908ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.1
இந்தப் பிராமி எழுத்துக்களின் நிழற்படங்களை 1912ஆம் ஆண்டு எபிகிராபி இலாகா அறிக்கையில் 57ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த எழுத்துக்கள் கற்படுக்கைகளை அமைத்தவர்களின் பெயர்களைக் கூறுகின்றன. பிராமி எழுத்துக்களின் வரிவடிவத்தையும் அவற்றின் பக்கத்தில் இப்போதைய எழுத்தையும் காட்டுகிறோம்.
(1) பதன ஊர் அதன்
2) குவிர அந்தைவேள் அதன்
3) திடி இள அதன்
4) அந்தை அரிய்(தி)
5) அந்தை இரைவதன்
6) மதிரை அந்தை விஸுவன்
7) அந்தை சந்த அதன்
8) சந்தந்தை சந்தன்
திரு. வெங்கையா அவர்கள், ‘அந்தை அரிய’ என்பதன் பொருள், ‘பௌத்த முனிவர்கள் வசிக்கும் இடம்’ என்று பொருள் கூறுகிறார்.2 திரு. எச். கிருட்டிண சாத்திரி இவற்றை இவ்வாறு படித்துள்ளார்: இவற்றை
1. போ தி னா (ஊ) ர தா (னா)
2. கு வி ரா அ (ந) தை வெ ய அதானா
3. கு வி ரா அ ந தை வெ (ய) அ தா னா
4. தி தோ ஈல அ தா னா
5. அ ந தை அரிய
6. தி அ ந தை (ஈர) வா த ன
7. ம தி ர (ஆ) அ ந தை (வி) ஜு வா னா
8. சா ந தா ந தை சா ந தா னா
9. அ ந தை வ (எ) ந தா அ தர் னாஇவ்வாறு படித்த இவர் இதில் ‘அதானா’ என்னுஞ் சொல் ஆறு இடங்களிலும் ‘அநதை’ என்னுஞ் சொல் ஏழு இடங்களிலும் வந்துள்ளன என்று கூறுகிறார்.
திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார் :
1. பொதின் ஊர-அ தான. (பொதினூரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தானம்)
2. குவீர அந்தை வேய தான (குவீரருடைய படுக்கை. வேய் கொடுத்த தானம்)
3. திடயில்-அ-தான (திட்டையூரில் இருந்தவர் கொடுத்த தானம்)
4.அந்தை அரை தி (அரை தி என்பவரின் படுக்கை)
5. அந்தை இரவாதான் (இரவாதானின் படுக்கை)
6. மதிர அந்தை (மதிரைக்கு உரிய படுக்கை)
7. விசுவ சானதா அந்தை (விசுவன் சானதானின் படுக்கை)
8. சானதான் அந்தை (சானதானின் படுக்கை)
9. வேன தா-அ-தான (வேனதானின் தானம்)
இவர் தான என்பது தானம் (கொடை) என்னும் சொல்லாகக் கொண்டார். அந்தை என்பதை அந்தை என்று கொண்டு, அது படுக்கை என்னும் பொருள் உள்ள சொல் என்று கூறுகிறார். அந்தை என்பது ‘எண்ட’ என்னும் சிங்கள மொழிச் சொல் என்று கூறுகிறார். அந்தை என்பதை ஆந்தை என்றும் கொள்ளலாம். எயின் ஆந்தை, பிசிர் ஆந்தை, அஞ்சில் ஆந்தை முதலான (அகப்பாட்டுப் பாடியவர்) பெயர்களைப்போல என்று கூறுகிறார். தன், தான், என்பதை கீரத்தன், விண்ணத்தார் என்பது போலவுங் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத பாஷையாகப் படித்துப் பிறகு அதைச் சமற்கிருதமாக்கிப் பொருள் கற்பிக்கிறார்.
1. பொதின 'ஹ' அ தான (பிராகிருதம்) பொதின ஊரஸ்ய தானானி (சமற்கிருதம்) போதின ஊர என்னும் கிராமத்தாரின் தானம்.
2,3. குவிரா அன தை (பிராகிருதம்) குபேரானாம் தேயம் (சமற்கிருதம்) குபேரன் என்னும் பெயருள்ள இனத்தார் செய்த தானம்.
4,5. திடேரயிள அ தான (பௌத்த பிக்கு பிக்குணிகளுக்குக் கொடுக்கப்பட்ட தானம்)
5,6. அரிய தி அநதை (பிராகிருதம்) ஆர்ய ஸ்தீரிணாம் தேயம் (சமற்கிருதம்) கணவன் - மனைவி கொடுத்த தானம்.
6,7. இரவாதனா மதிரா அந்தை (பிராகிருதம்) இராவதானாம் மாத்ருனாம் தேயம் (சமற்கிருதம்) இரவாத என்னும் பிரிவினரின் தாய்மார் செய்த தானம்.
7,8. விஸுவானா சானதானா தை (பிராகிருதம்) விஸ்வானாம் ஜானபதானாம் தேயம் (சமற்கிருதம்) (எல்லா கிராமத்தாருடையவும் தானம்)
8,9. சான தானா அந தெ (பிராகிருதம்) ஜானபதானாம் அந்யத் தேயம் (சமற்கிருதம்) (கிராமத்தாருடைய இன்னொரு தானம்)
9. வென தாத் தானா (பிராகிருதம்) விநதாயா தானம் (சமற்கிருதம்) வினதாவினுடைய (அல்லது ஒரு பக்தருடைய) தானம்.
1. பொ தி ன (ஊ) ர அ த ன என்பது இதன் வாசகம். திராவிடில் இது ‘பொதின ஊர் அதன்’ என்றாகும். இதன் பொருள் ‘பொதின் ஊர் அதன்’ என்பது.
2,3. கூவிரா அந்தாய் வேய அதான, குவிர அந்தாய் வேள் அதன். இது திராவிடில் ‘குவிர அந்தாய் வேள் அதன்’ என்றாகும். இதன் பொருள், ‘(ஆசீவக மதத்தைச் சேர்ந்த) தூய தந்தையான குவிரனும் ஆதனும்’ அடிக்குறிப்பில், இதன் முழு வாசகம் ஒரே ஆளைக் குறிப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.
4. தீ டா இ ல அ த ன : இது திராவிடில் தி-ட-இல் அதன் என்றாகும். திடியில் அல்லது தீடியில் என்பது மதுரை மாவட்டம் திண்டுக்கல்லுக்கருகில் உள்ள திடியன் என்னும் ஊர். ‘திடியில் ஆதன்’ என்பது இதன்பொருள்.
5. அந்தை அரிய என்பது இதன் வாசகம். திராவிடியில் இது ‘அந்தை அரியி’ என்றாகும். இதன் பொருள் ‘தூய தந்தை அரி’ என்பது.
6. தி அ ந தை (இர) வா த ன. இது திராவிடில் ‘தி அந்தை இராவதன்’ என்றாகிறது. இராவதன் என்பது ஐராவதன் என்பதாகும். இந்திரனுடைய ஐராவதம் என்பது. ஐராவதன் என்பது ஓர் ஆளின் பெயர். இரவாதான் என்பது இராவதவன் (யாசிக்காதவன்) என்னும் பொருளுள்ளதாகவும் இருக்கலாம்.
7. மதிர அந்தை விஸுவன். இதன் பொருள், மதுரையில் உள்ள தூய தந்தை விசுவன் என்பது.
8. சா ந தா ந தை சா ந தான. திராவிடில் இது சந்தந்தை சந்தன் என்றாகிறது. சந்தன் என்பது இடை எழு வள்ளல்களில் ஒருவன். சந்தன் தந்தை சந்தந்தை.
9. அ ந தை வெ ந த அ தா ன. இதை ‘அந்தை வேந்த அதன்’ என்று படிக்கலாம். வேந்த(ன்) என்பது அரசன் அல்லது இந்திரன் என்பது பொருள். மேலே கூறப்பட்ட எல்லாப் பெயர்களும் ஒரு சமயப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. இவர்கள் ஆசீவக மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும்.திரு. ஐ. மகாதேவன் இவ்வெழுத்துக்களைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள்கூறுகிறார்.4
1. அந்தை அரிதி (ஓர் ஆண்மகன் பெயர்)
2. அந்தை இரவாதான் (ஓர் ஆண்மகனின் பெயர்)
3. மதிர அந்தை விஸுவன் (மதுரை அந்தை விஸுவன்)
4. அந்தை சேந்த அ தான (சேந்தன் அந்தையினுடைய தானம்)
5. சந்தந்தை சந்தன் (ஓர் ஆண்மகனுடைய பெயர்)
6. பதின் (ஊ)ர் அதை (பதினூர் அந்தை)
7. குவிர அ(ந்)தை செய் அ தான (குவிர அந்தை செய்த தானம்)
8. குவிர அந்தை வேன்-அ- தான (ஒரு வேள் ஆகிய குவிர அந்தை செய்த தானம்)
9. திடி இல் அ தான (திடியில் கிராமத்தவர் செய்த தானம்)
இந்தப் பிராமி எழுத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறோம்: இங்குள்ள பத்துக் கற்படுக்கைகளையும் பத்துப்பேர் ஒவ்வொரு படுக்கையை அமைத்தனர். படுக்கைகளை அமைக்கக் கற்றச்சருக்குப் பொருள் கொடுக்க வேண்டும். பத்துப் பேர் சேர்ந்து ஒவ்வொருவரும் பொருள் செலவுசெய்து படுக்கைகளையமைத்துக் கொடுத்தார்கள். அவர்களுடைய பெயர் படுக்கையில் எழுதப்பட்டுள்ளது. ஆதன் என்ற சொல்லைக் கற்றச்சன் அதன் என்று எழுதியுள்ளான். பிராமி அகர எழுத்தின் நடுவில் வலப்பக்கமாக இடவேண்டிய சிறுகோட்டை இடாதபடியால் அதன் என்று படிக்கவேண்டியுள்ளது. பட்டிப்ரோலு (திராவிடி) வாய்பாட்டின்படி இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன.
1. பதன ஊர் அதன் (பதனூர் ஆதன்)
2. குவிர அந்தை வேள் அதன் (குவிர ஆந்தை வேள் ஆதன்)
3. திடி இ ள அதன் (திட்டி இள ஆதன். திட்டி, ஊர்ப்பெயர்)
4. அந்தை அரிய் (தி) (ஆந்தை அரிதி. அரிதி என்பதில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. அரிதி என்பதில் தி என்பது அடுத்த பெயரோடு சேர்ந்துள்ளது. பிரித்துப் படிக்க வேண்டும்)
5. (தி) அந்தை இரைவதன் (ஆந்தை இரைவதன்)
6. மதிரை அந்தை விஸுவன் (மதுரை ஆந்தை விஸுவன்)
7. சந்தந்தை சந்தன் (சந்தந்தை சந்தன்)
8. அந்தை சந்த அதன் (ஆந்தை சந்த(ன்) ஆதன்)
இரண்டாவது எண்ணிலுள்ள ‘குவிர ஆந்தை வேள் ஆதன்’ என்பதைக் குவிர ஆந்தை என்னும் வேள் ஆதன் என்றும் இரண்டு பெயர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆறாவது எண்ணில் உள்ள ‘மதிரை ஆந்தை விஸுவன்’ என்பதை மதிரை ஆந்தை என்றும் விசுவன் என்றும் இரண்டு ஆட்களாகக் கொள்ள வேண்டும். இந்தப் பெயருள்ள பத்து ஆட்களும் பத்துப் படுக்கைகளைச் செய்து கொடுத்தார்கள்.
குவீர ஆந்தை என்னும் பெயரில் உள்ள குவீரன் என்னும் பெயர் விக்கிரம மங்கலப் பிராமிக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. அங்குப் பொதலை குவீரன், செங்குவீரன் என்று குவீகன் என்னும் பெயர் காணப்படுகிறது. நான்காவதிலுள்ள ஆந்தை அரிதி என்னும் பெயரில் உள்ள அரிதி என்னும் பெயர் கருங்காலக்குடி பிராமி எழுத்தில் எட்டியூர் அரிதி என்று காணப்படுகிறது. இதனால், குவீரன் அரிதி என்னும் பெயர்கள் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பது தெரிகிறது.
ஆந்தை, ஆதன் என்னும் பெயர்கள் பிராமிக் கல்வெட்டில் அந்தை, அதன் என்று விக்கிரமமங்கலத்திலும், அழகர்மலையிலும் இந்த மேட்டுப்பட்டிக் கல்வெட்டில் எழுதப்பட்டிருப்பது போலவே எழுதப்பட்டுள்ளன.
அடிக்குறிப்புகள்
1. Madras Epigraphy Report 1908, Part II, Para 5, 6.
2. Madras Epigraphy Report, 1908, Para. 59.
3. Early South Indian Palaeography, 1967, pp. 262-266.
4. Seminar on Inscriptions 1966 Edited by R. Nagaswamy, p. 62.