மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/022
பின்னிணைப்பு
1. [1]ஔவைக்கு நெல்லிக்கனி
ஈந்த அதியமான் கல்வெட்டு
தென்னார்காடு மாவட்டத்தில், திருக்கோயிலூரிலிருந்து 16 கல் தொலைவில் ஜம்பை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைத் திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ளது. பல குன்றுகளால் சூழப்பட்டிருப்பதால் இவ்வூர் பார்ப்பதற்கு இனிய காட்சி யளிக்கிறது. இவ்வூர் ‘வாணக்கோப் பாடி நாட்டில்’ இருந்தது எனப் பழைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டொன்றை அண்மையில் தமிழ்நாட்டரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கல்வெட்டியல் மாணவர் திரு. செல்வராஜ் கண்டு பிடித்துள்ளனர்.
இக் குன்றத்தில் “ஆள் ஏறாப் பாறை” “சன்யாசி மடம்” “தாசி மடம்” என்னும் பெயர்களுடைய பகுதிகள் உண்டு. தாசி மடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில் தான் இக் கல்வெட்டு இருக்கிறது. ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள இக் கல்வெட்டு பின் வருமாறு:
“ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி ஈத்த பாளி”
என்பதாகும். இவ்வெழுத்துக்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அதனைப் படித்த தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி கூறியுள்ளார்.
இக் கல்வெட்டின் சிறப்பு யாதெனின் இதிலுள்ள இரண்டு சொற்றொடர்கள் “ஸதிய புதோ” என்பதும் “அதியந் நெடுமாஞ் அஞ்சி” என்பதுமாகும்.
அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றி அறிந்திராத கற்றறிந்த தமிழர் இருக்க மாட்டார்கள். தமக்குக் கிடைத்த அரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டியான ஒளவையாருக்கு அளித்த வள்ளல் அன்றோ அதியமான் நெடுமான் அஞ்சி!
ஔவையார், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள் நாகையார் ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன. தகடூரை (இன்றைய தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர் அதியமான் மரபின் முன்னோர்கள் ஆவர்.
இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிடப் பெற்றான். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான்.
முதன்முதலில் புகளூர் ஆர் நாட்டார் மலைக் கல்வெட்டில் மூன்று சேரர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்துச் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில் குறிக்கப் பெறுவர். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் காலத்தைக் கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆவர். ஜம்பையில் இப்போது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும் தலைவர்களும் வாழ்ந்து - வீரம் விளைத்துக் குடிகளைக் காத்து – வரலாறு படைத்தவர்களே என ஐயம்திரிபற ஆணித்தரமாக ஆதாரச் சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக் கல்வெட்டு மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
இக் கல்வெட்டு அதியன் ஆட்சியில் வேறு யாரோ கொடுத்ததன்று. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அது மட்டுமன்று. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்கப் பாடலால் தெரிகிறது. ஔவையும் பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அந்தத் திருக் கோயிலூருக்கு மிக அண்மையிலேயே இந்தக் கல்வெட்டும் இருக்கிறது. எனவே, அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்திக் கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவாகிறது.
அதியமான் திருக்கோயிலூரை வென்றதும் உண்மை; அதனை ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு வேறு சான்று என்ன தேவை? அதியன் சிவனடியை வணங்கும் சென்னியான் ஆயினும் சமணர்க்குப் பாளி அமைத்துக் கொடுத்திருக்கிறான் என்பதைக் காணும் போது அவன் எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்ற உண்மையும் தெளிவாகின்றது. அது மட்டுமன்று; “அஞ்சி ஈத்த பாளி” என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது.
இக் கல்வெட்டு, தமிழக வரலாற்றுக்கு மட்டுமே அரிய செய்திகளை வழங்கியுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை வழங்கியுள்ளது, எனலாம். அதியனை இது “ஸதியபுதோ அதியந் நெடுமாஞ் அஞ்சி” என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மௌரியப் பேரரசனான அசோகன். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப் பெருமன்னன் தன் கல்வெட்டுக்களில் சோழர், பாண்டியர், கேரள புத்ரர், ஸத்திய புத்ரா ஆகியோரைக் குறித்துள்ளான். இவர்களின் நாடுகள் அவ் அசோகனின் ஆட்சிக்குட்பட்டவையல்ல. அவர்கள் தனியாட்சி நடத்தி வந்தனர். அங்கெல்லாம் அவன் பௌத்த அறங்கள் பரவும் வகை செய்தான். அசோகன் குறிக்கும் “ஸத்ய புத்ர்” யார் என்பது இதுகாறும் அறியக்கூடவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ‘வாய்மொழிக் கோசர்’ என்பவராய் இருக்கக்கூடும் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதினர். மகாராட்டிரத்தில் “சத்புதர்” என்போர் உண்டு. இஃது அவர்களாயிருக்கக் கூடும் என்போரும் உளர். சத்ய மங்கலம் இவர் பெயரால் வந்தது என்கின்றனர் சிலர். “ஸதிய புதோ” என்பவர் அதியமான்களாக இருக்கக் கூடும் என்பவர்களும் உண்டு.
இப்போது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் “ஸத்ய புத்ரர்கள்” அதியமான்கள் தாம் எனத் திட்ட வட்டமாகத் தெளிவாகி விட்டது. அதியனை “பொய்யா எழினி" (சத்யபுத்ரர்) எனப் புறநானூறு கூறுகிறது.
- ↑ அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற இக் கல்வெட்டினைப் பற்றித் தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், தினமணி 12-10-81 இதழில் எழுதிய கட்டுரையினின்று தொகுக்கப்பெற்றது.