உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/026

விக்கிமூலம் இலிருந்து

5. இலக்கியத்தில் நடுகல்[1]

உலகத்திலே எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றினார்கள். எல்லா நாட்டிலும் வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழ் நாட்டிலே வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழர் போரைப் பற்றித் தனி இலக்கணம் எழுதினார்கள். போரைப் பற்றிய இலக்கியங்களும் இருந்தன. அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தார்கள். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல்களும், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழில் உண்டு. போர்முறையை ஏழு விதமாகப் பிரித்திருந்தார்கள். நிரை (பசு மந்தை) கொள்ளுதல் வெட்சி என்றும், நிரைமீட்டல் கரந்தை என்றும் பெயர் பெற்றன. நாட்டைப் பிடிக்க ஓர் அரசன் படையெடுத்துப் போருக்கு வரும்போது அவனை எதிர்த்துப் போர் செய்து தன் நாட்டைக் காப்பாற்றுவான் அந்த நாட்டரசன். இவ்விரு அரசருக்கும் நடக்கும் போருக்கு வஞ்சிப்போர் என்பது பெயர். ஓர் அரசன் பகை யரசனுடைய கோட்டைமேல் படையெடுத்துச் சென்று கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகையிடுவது உழிஞைப்போர் என்று பெயர் பெற்றது. முற்றுகையிடப்பட்ட மதிலுக்குள்ளிருக்கும் அரசன் கோட்டைக்குள்ளிருந்து போர் புரிவது நொச்சிப்போர் என்று பெயர் பெற்றது. இரண்டு அரசர்கள் தம்முடைய வீரத்தைக் காட்ட போர் செய்வது தும்பைப் போர் என்று பெயர் பெற்றது. இவற்றைத் தவிர வாகைப் போர் என்று ஒரு வகைப் போர் உண்டு. இது அரசர், போர் வீரர்களுக்கு மட்டு மல்லாமல் இசை பாடுதல், யாழ் வாசித்தல், நாட்டியம் ஆடுதல், சேவல் போர், காடைப் போர், தகர் (ஆடு) போர் முதலிய ஏனையோருக்கும் பொதுவானது. இவ்வாறு பலவகையான போர்முறைகள் பழந்தமிழ் நாட்டில் இருந்தன. போர்க்காலங்களிலே வீரப்போர் செய்து பின் வாங்காமல் உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு; அவ்வீரர்களுக்குச் சிறப்பு செய்தார்கள். வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலந் தொட்டு இருந்தது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நடுகற்கள் தமிழ் நாட்டிலே பல இடங்களிலே காணக்கிடக்கின்றன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் நடுகற்கள் பலவற்றைக் கண்டுபிடித்து அவற்றைப் படி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல நூற்றுக்கணக்கான நடுகற்கள் கண்டுபிடிக்கப்படாமலேயுள்ளன.

தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் போரில் மடிந்த வீரர்க்கு நடுகல் நடுவது பற்றி இவ்வாறு கூறப்படுகிறது.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
(சீர்த்த மரபில் பெரும்படை) வாழ்த்தலென்று
இருமூன்று மரபில் கல்.

போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை, மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு, அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி, அதை நட வேண்டிய இடத்தில் நட்டு, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பு செய்து வாழ்த்துவார்கள். இவை ஐந்தும் நடுகல் நடுவதற்குரிய ஐந்து துறைகளாகும்.

(மேற்சொன்ன தொல்காப்பியச் சூத்திரத்தில் ‘சீர்த்த மரபில் பெரும்படை’ என்று ஒரு தொடர் கூறப்படுகிறது. பெரும்படை என்பது போர்க்காலத்தில் மடிந்துபோன அரசனுக்கு எடுக்கப்படுகிற பள்ளிப்படை. இது பற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீர பத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்பு செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன் கட்டையேறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மாஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும். இந்த வகையான நடுகற்களைப் பற்றியும் இங்கு ஆராய்ச்சி இல்லை.

பகைவருடைய (மாற்றாருடைய) ஊரில் போய் அங்குள்ள தொறுக்களைக் (எருமை, பசுமந்தைகளை) கவர்ந்து கொண்டு வருவது பழந்தமிழகத்தில் அடிக்கடி நடந்த சாதாரண நிகழ்ச்சி. இது களவுக் குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த வெட்சிப் போரைச் சிற்றரசர்களும், வீரத்தில் சிறந்த மறவர்களும், அரசர்களுங்கூட செய்தார்கள். முள்ளூர் மன்னன் (மலையமான் திருமுடிக்காரி) இரவில் குதிரை மேல் சென்று அயலூரிலிருந்து ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவது வழக்கம். இதைக் கபிலர் கூறுகிறார்.

மாயிரு முள்ளூர் மன்னர் மாவூர்ந்து
எல்லித் தரீஇய இனநிரை (நற்றிணை-291-7-8)

சேரன் செங்குட்டுவனுடைய தம்பியாக ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தண்டாரணிய நாட்டில் (விந்திய மலைப்பிரதேசத்தில்) சென்று பகைவருடைய பசுக்களைக் கவர்ந்து கொண்டு சேரநாட்டுத் தொண்டிப்பட்டினத்தில் கொண்டு வந்து பலருக்குக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் 6-ஆம் பத்தும் பதிகம் கூறுகிறது.

பகைவர் கொண்டு போன ஆனிரைகளை மீட்பதற்காக நடந்த கரந்தைப் போரில் ஒரு வீரன் போர் செய்து ஆனிரைகளை மீட்டான். ஆனால், அவன் வெற்றியடைந்த போதிலும் அவன் பகைவரின் அம்புகளினால் இறந்து போனான். இதை ஒக்கூர் மாசாத்தியார் கூறுகிறார்.

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாளுற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை யெறிந்து களத் தொழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டு பட்டனனே.
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம் 279)

வெட்சி வீரர் கவர்ந்து கொண்டுபோன ஆனிரைகளை மீட்பதற்காகக் கரந்தை வீரர் செய்யும் போர் கடுமையானது. ஆனிரைகளைக் கவர்ந்து கொண்ட வெட்சி வீரர் எளிதில் ஆனிரைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். கடுமையாகப் போர் செய்து கரந்தை வீரர்களைக் கொல்வார்கள். வெட்சி வீரரிடமிருந்து ஆனிரைகளை மீட்கும் கரந்தை வீரர், கடலுக்குள் புகுந்து மறைந்த மண்ணுலகத்தைப் பெருமுயற்சி செய்து மீட்டெடுத்தவராகப் பெருமாளுக்கு உவமை கூறப்படுகின்றனர்.

கடல் புக்கு மண்ணெடுத்து காரேனக் கோட்டின்
மிடல் பெரிதெய்தின மாதோ தொடலைக்
கரந்தை மறவர் கருதாதார் உள்ளத்
துரந்து நிரைமீட்ட தோள். (பெரும்பொருள் விளக்கம்)

கரந்தைப் போரில் வெற்றியோடு உயிர்விட்ட வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் ஏராளமாக உள்ளன. அவர்களைப் பற்றிய செய்யுட்களும் இலக்கியங்களில் பல உள்ளன. அச்செய்யுட்களையெல்லாம் இங்குக் காட்ட வேண்டுவது இல்லை. ஆனால், ஒரு செய்யுளை மட்டும் கூறி மேற் செல்லுவோம். வடமோதங்கிழார், கரந்தைப் போரில் ஒரு வீரன் ஆனிரைகளைப் பகைவரிடமிருந்து மீட்டின பின்பு அவனுடைய உடல் முழுவதும் பகைவருடைய அம்பு தைத்து அவன் இறந்து போனதைக் கூறுகிறார். சந்திர கிரகணத்தின் போது, முழு நிலாவைப் பாம்பு விழுங்கி விட, அதன் வாயிலிருந்து சந்திரன் மிக அரிதின் முயன்று வெளிப்பட்டது போல, அந்த வீரன் தன் ஊர் ஆனிரைகளைப் பகை வீரரிடமிருந்து கடும் போர் செய்து மீட்டுக் கொண்டான். ஆனால் அந்தோ! அவன் உடம்பு முழுவதும் பகை வீரர்கள் எய்த அம்புகள் தைத்துவிட்டன. அவன் உயிரானது பாம்பு தன் தோலை உரித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது போல, அவனுடைய உடம்பை விட்டுப் பிரிந்து வீரசுவர்க்கத்துக்குப் போய்விட்டது. உயிர் போய்விட்டபடியால், அவனுடைய உடம்பு, அம்புகள் தைத்த இலக்கு மரம்போலக் காணப்பட்டது. அவனுடைய பெயரும் புகழும் அவனுடைய நடுகல்லில் எழுதப்பட்டு விளங்கிற்று என்று அப்புலவர் அழகான ஒரு செய்யுளில் கூறுகிறார்.

முன்னூர்ப் பூசலில் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழிஇய மீளியாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்று கோள்விடுத்து
(வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின்) மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரையன் ஆகி
உரிகளை அரவம் மானத் தானே
அரிது செல் உலகிற் சென்றனன் உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி ஆண்டொழிந் தன்றே
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை ஆணி மயிர் சூட்டி
இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே. (புறம். 260 : 12-28)

(குறிப்பு: இச்செய்யுளில், ‘கம்பமொடு துளங்கிய இலக்கம்’ என்பது இலக்கு மரத்தை, வீரர்கள் குறி தவறாமல் அம்பு எய்து பழகுவதற்காக, உயரமாக வளர்ந்த இலவம் பஞ்சுமரம், முருக்கமரம் போன்ற மரங்களைத் தேர்ந்தெடுத்து அந்த மரங்களின் கிளைகளை யெல்லாம் வெட்டிவிட்டு நடுமரத்தை மட்டும் விட்டுவைப்பார்கள். அந்த உயரமான மரத்தின் ஓரிடத்தைக் குறியாக வைத்துக்கொண்டு வில்லிலிருந்து அம்பு எய்து பழகுவார்கள். அம்மரத்தின் மேல் வேல் எரிந்தும் பழகுவார்கள். ‘வென் வேல், இளம்பல் கோசர் விளங்கு படை கன்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெரு மரக் கம்பம்’ என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறம் 169இல் இதனைக் கூறுவது காண்க. இந்த இலக்குக் கம்பத்தில் பல அம்புகள் தைத்துக் கொண்டிருப்பதுபோல, ஆனிரைகளை மீட்ட வீரன் உடம்பில் பகைவீரர் எய்த அம்புகள் தைத்திருந்தன. வட மோதங்கிழார், இலக்குக் கம்பத்தில் அம்புகள் தைத்துக் கொண் டிருப்பது போல, வீரனுடைய உடம்பில் அம்புகள் தைத்துக் கொண் டிருந்தன என்று கூறுவது வெறுங் கற்பனை அன்று. வடஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலைத் தாலுகாவைச் சேர்ந்த செங்கம் என்னும் ஊரில் உள்ள நடுகற்கள் இரண்டில், தொறு மீட்டு இறந்து போனவர் உடம்பில் அம்புகள் தைத்திருப்பது போன்று சிற்ப உருவம் காணப்படுகின்றன.

மகாபாரதத்தில் விராடபர்வத்தில் தொறு கவர்தலும், தொறுமீட்டலும் கூறப்படுகிறது. துரியோதனனுடைய வீரர்கள் விராட தேசத்துக்கு வந்து அந்த தேசத்தின் பசுமந்தைகளை ஓட்டிச் கொண்டு போனார்கள். அப்போது அங்குப் பேடியின் உருவத்தோடு அஞ்ஞாத வாசஞ்செய்திருந்த அர்ச்சுனன், உத்தரகுமரனைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய்ப் போர் செய்து ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தான் என்று மகாபாரதம் கூறுகிறது.

கரந்தைப் போரில் தொறு மீட்கச் சென்றவருடைய பகைவருடைய அம்புக்கு அஞ்சித் திரும்பி வருவதும் உண்டு. ஆனால் அவர்களை நாட்டு மக்கள் மதிக்கமாட்டார்கள். தொறுவை மீட்காமல் பகைவருடைய அம்புக்கு அஞ்சிப் புறங்காட்டி ஓடிவந்த ‘வீரர்களை’த் திருத்தக்க தேவர் புகழ்வது போல இகழ்ந்து நகைக்கிறார். இராசமாபுரத்திலிருந்து பசு மந்தைகளை அயல் நாட்டு மறவர்கள் வந்து கவர்ந்து கொண்டு போனார்கள். இதை அறிந்த அரசன் கட்டியங்காரன், ‘’தன்னுடைய பிள்ளைகளை அழைத்து மறவர்கள் கவர்ந்து கொண்டு போன ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வருமாறு ஏவினான். அவர்கள் சென்று மறவர்களுடன் போர் செய்தார்கள். ஆனால் மறவர்கள் எய்த அம்புக்கு ஆற்றாமல் போர்க்களத்திலிருந்து ஓடி வந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைச் சிலர் அரசனிடம் சென்று தெரிவித்தார்கள். அரசனுடைய மக்கள் தோற்று ஓடிவந்துவிட்டதை வெகு நயமாகக் கூறினார்கள்.

வம்புகொண் டிருந்த மாதர்
வனமுலை மாலைத் தேன் சோர்
கொம்புகொண் டன்ன நல்லார்
கொழுங் கயல் தடங்கண்போலும்
அம்பு கொண்டரசர் மீண்டார்
ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டன்ன இஞ்சித்
திருநகர்ச் செல்வ! என்றார். (கோவிந்தையார் இலம்பாம் 31)

இதில், ‘அம்பு கொண்டரசர் மீண்டார் ஆக்கொண்டு மறவர் போனார்’ என்பது படித்துப் படித்து இன்புறத்தக்கது.

போரிலே பின் வாங்காமல் வீரப்போர் செய்து உயிர் விட்டவர்களின் உயிர் விண்ணுலகஞ்சென்று வீரசுவர்க்கத்தைச் சேர்கிறது என்றும், அந்த வீரசுவர்க்கத்தில் அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் என்றும் அக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளியும் ‘போர்’ என்னும் ஊரில் போர் செய்தார்கள். அந்தப் போரில் இரண்டு பேரும் உயிர் விட்டார்கள். இறந்துபோன அவர்கள் ‘அரும்பெறல் உலகத்தை’ யடைந்தார்கள் என்று கழாத்தலையார் என்னும் புலவர் (புறம் 62) கூறுகிறார்.

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால். (புறம் 62 : 16-19)

சீவகசிந்தாமணி மண்மகள் இலம்பகத்தில், வீரப்போர் செய்து மாண்டவர் வீரசுவர்க்கம் அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது. விபுலனும் வேறு ஒரு வீரனும் போர்செய்தபோது அந்த வீரன் வீரமரணம் அடைந்தான். அப்போது அரமங்கையர் அவன்மேல் மலர்மாரி சொரிந்து தொழுது வீரசுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்கள் என்று சிந்தாமணிக் காவியம் கூறுகிறது

எரிந்தார் அயில் இடைபோழ்ந்தமை உணராதவன் நின்றான்
சொரிந்தார் மலர் அரமங்கையர் தொழுதார் விசும்படைந்தான்

(சீவகசிந்தாமணி மண்மகள் 164)

என்னும் செய்யுளும்,

தற்புரந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தால்
கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர் தோய்வர்
பொற்ற சொன்மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல்மேல்
நிற்பர் தம் வீரந்தோன்ற நெடும்புகழ் பரப்பி என்றான்.

(சீவகசிந்தாமணி மண்மகன் 201)

என்னும் செய்யுளும் போரில் மடிந்த வீரர், வீரசுவர்க்கம் போகிறார் என்பதைக் கூறுகின்றன.

சில நடுகற்களிலே கீழ்ப்பகுதி, மேல்பகுதிகளாக இரண்டு சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதி சிற்பம், போர் வீரன் போர் செய்வது போன்று காணப்படுகிறது. அந்த சிற்பத்துக்கு மேலேயுள்ள சிற்பம், அந்த வீரன் போரில் இறந்த பிறகு வீரசுவர்க்கம் சென்று, அங்கு அரமங்கையரோடு இருப்பதைக் குறிக்கின்றன. இவை, வீரமரணம் அடைந்த வீரன், வீரசுவர்க்கம் சென்று இன்பம் அனுபவிக்கிறான் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன.

முன்பு சொன்னது போல நடுகற்களைப் பற்றித் தமிழ் இலக்கியங்களிலே பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஏட்டிலே கூறப்படுகிற நடுகற்களைப் போலவே, நாட்டிலும் நடுகற்கள் காட்சியளிக்கின்றன.

அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருவாரூர் மும்மணிக் கோவையில், “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டக்கல்லும்” என்று நடுகல்லைக் கூறுகிறார்.

  1. Seminar on Hero -stones, தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு 1974.