பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல் பட்டால், நீரலைகள் சலனம் அடைவது இயல்பு. ரஞ்சித் சலனம் அடைந்த மனத்தை அவருக்கே உரியதான் முனைப்புடன் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இல்லறத்துக் கூட்டாளியை நோக்கி, "ர...ஞ்! விருந்தாடிங்களை அழைச்சிட்டுப்போய் உள்ளே உட்கார வையேன்", என்றார்,

மகேஷ் தலையை உயர்த்தி, வசீகரமான புன்னகை ஒன்றையும் வெளியிட்டார்; பிறகு, ஆதரவானவருடைய நலத்தையும் குடும்பத்தினர் நலத்தையும் நேரிலும் விசாரித்தார்.

மகேஷின் நலன் பற்றிய விவரங்களை ரஞ்சித் நேரிடையாகவும் அறிந்து கொண்டார்.

"வாங்க, உள்ளே போகலாம். வாங்க மகேஷ்; நீங்களும் வாங்க வந்த காலோடு நின்னுக்கிட்டு இருக்கிறது விருந்தினர்களுக்கும் அழகில்லை; வந்தவங்களை நிற்க வைககிறது எங்களுக்கும் அழகில்லே; வாங்க, வாங்க!'க என்று சொல்லிக்கொண்டே, அவர்களுக்கு வழிகாட்டுவது மாதிரி, முன்னே நடக்கலானாள் ரஞ்சித்தின் ரஞ்சனி.

வரவேற்புக் கூடம்.

மகேஷ் நேர்கொண்ட பார்வைகொண்டு ரஞ்சித்தைப் பார்த்துவிட்டு, பிறகு, கண்களைத் தாழ்த்தியவாறு ரஞ்சனியைப் பார்த்துக்கொண்டே, ‘இவள்தான் ரதி: என்னோட கூட்டுக்காரியாக்கும்,’ என்று புன்னகையும் புது நிலாவுமாக, கேரளத்து மண்ணுக்கே உரித்தான செழிப்புடன் காட்சி தந்த ரதியை அறிமுகம் செய்து வைத்தார்; புன்னகை விளையாட்டில் வெட்கம் கூடுதல் ஆளவில் விளையாடிற்று.

அஞ்சலி முத்திரையை ரதி விலக்கிக்கொண்டாள்.

"ரொம்ப சந்தோஷம்!”

அ-5

69