பெரிய மனுஷி
வள்ளியம்மைக்கு சதா தெருவாசல் படியில் நிற்பது தான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது.
வள்ளியம்மை என்ற பெயரைப் பார்த்ததும் நாகரிகம் இல்லாத பெரிய பெண்ணாக இருப்பாள் அவள் என்று எண்ணுகிறவர்கள் ஏமாறுவார்கள்.
நாகரிக விஷயம் எப்படியும் போகட்டும். அது இந்தக் கதைக்கு முக்கியமானது அல்ல. வயசு?
அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. ஆமாம். கட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய்க் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை.
அவளுக்கு ஆந்தப் பெயர் பிடித்திருந்தது. தனது பெயர் தனக்கே பிடிக்காத மனிதப் பிறவியும் உண்டோ இம் மாநிலத்தில்?
சில சமயங்களில் அவளுக்குத் தன் பெயர் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்படுவது உண்டு. அது எப் பொழுது என்றாலோ, இதர சிறுமிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு, ராகம் போட்டு-
‘வள்ளி அம்மே தெய்வானே,
உம் புருசன் வைவானேன்?
கச்சேரிக்குப் போவானேன்?
கையைக் கட்டி நிப்பானேன்?
என்று இழுக்கும் போதுதான்.
அவ்வேளையில் அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல ஒடாது. கண்கள் நீரைக் கொட்டத் தயாராகிவிடும்.
48