பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நாட்டிற்கு ஐந்து
அறிவியல் பதினான்கு

அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஒரறிஉயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது.

திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார். நலமும் வளமும் தரும் அறிவார்ந்த கருத்துக்களையும் வழங்கினார். அவற்றுள் அறிவியல் பாங்கான கருத்துக்கள் என்றும் துணைகளாக நின்று என்றும் நலனளிப்பவை.

எனவே, மாந்தரைக் கொண்ட நாட்டை வைத்து அவர் வழங்கிய கருத்துக்களில் அறிவியல் உயிரோட்டங்களைக் காணல் ஒரு வழியாகும்.

’’பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணியென்ப காட்டிற்கிவ் வைந்து’’ (738)