அலை ஓசை/எரிமலை/ராகவன் மனக் கவலை
பதினொன்றாம் அத்தியாயம் ராகவன் மனக் கவலை
ரஜினிபூர் மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் புதுடில்லியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்குச் சட்ட சம்பந்தமான யோசனை சொல்லும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த உத்தியோகத்தில் வேலை கொஞ்சம்; வருமானமும் செல்வாக்கும் அதிகம். எனினும் அவருடைய புதல்விகள் தாமாவுக்கும் பாமாவுக்கும் மட்டும் இன்னும் கலியாணம் ஆனபாடில்லை. புதுடில்லி சமூக வாழ்க்கையில் அவர்கள் மிக்க பிரபலம் அடைந்திருந்தார்கள். வைஸ்ராய் மாளிகையிலும் மற்றும் சுதேச மன்னர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் கொடுக்கும் பார்ட்டிகளிலும் தாமா பாமா சகோதரிகளைத் தவறாமல் காணலாம். இன்றைக்கும் அவர்கள் தந்தையுடன் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அதே பார்ட்டிக்குச் சென்றிருந்த சௌந்தரராகவனும் அவர்களுடன் வந்தான். அவர்கள் நாலு பேரும் சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் சிறிது நகர்ந்ததும் பாமா, "மிஸ்டர் ராகவன்! உங்கள் மனைவியை ஏன் பார்ட்டிக்கு அழைத்து வரவில்லை? இன்னும் உடம்பு சரியாகவில்லையா?" என்று கேட்டாள். "உடம்பு ஒரு மாதிரி சரியாகிவிட்டது ஆனால் சுரம் அடித்துக் கிடந்ததிலிருந்து அவளுடைய மனது பேதலித்துப் போயிருக்கிறது. வீட்டுக்குப் போனால் ஓயாத புகாரும் ஒழியாத அழுகையுந்தான்!" என்றான் ராகவன். "அவ்வளவு கடுமையாகச் சுரம் அடித்துக் கிடந்தவளுக்கு நீங்கள் கொஞ்ச நாள் இடமாறுதல் கொடுக்க வேண்டும் இங்கேயே வைத்துக் கொண்டிருப்பது தவறு!" என்றாள் தாமா.
"அது எனக்கு தெரியாமலா இருக்கிறது? ஆனமட்டும் நான் சொல்லிப் பார்த்தாகி விட்டது. மதராஸுக்குப் போய் என் அம்மாவுடன் சில நாள் இருந்துவிட்டு அவளுடைய பந்துக்களையும் பார்த்துவிட்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. அவள் சம்மதம் கொடுத்தால்தானே? என் பாடு ரொம்பவும் சங்கடமாயிருக்கிறது. ஆபீஸுக்குப் போனால் அங்கே ஒருவிதக் கஷ்டம்; வீட்டுக்குப் போனால் இன்னொருவிதக் கஷ்டம். என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒரு சமயம் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாமா என்று தோன்றுகிறது. இங்கே எப்போதாவது வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே இம்மாதிரி சந்தர்ப்பங்களிலேதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்படுகிறது." "வீட்டிலே உள்ள கஷ்டம் சரி; ஆபீஸில் உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று தாமா கேட்டாள். "உங்கள் தகப்பனாரைக் கேட்டுப் பாருங்கள், சொல்லுவார். திவான் சாகிப்! நான் முஸ்லிம் ஆகிவிடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ராகவன். ஆதிவராகாச்சாரியார் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். "இது என்ன கூத்து? நீர் எதற்காக முஸ்லிம் ஆக வேண்டும்?" என்று பாமா ஆச்சரியம் ததும்பக் கேட்டாள்.
"இப்போதெல்லாம் முஸ்லிமாயிருந்தால்தான் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்கிறது. எனக்கு நாலு வருஷத்துக்குப் பிறகு உத்தியோகத்தில் சேர்ந்தவனை எனக்கு மேலே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். போன வருஷம் எனக்குக் கீழே வேலை பார்த்தவனுக் கெல்லாம் 'எஸ் ஸார்!' சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியாவது அவன் மகா மேதாவியா? மூளை உள்ளவனா? ஒன்றும் இல்லை. 'மகா மூடன்' என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதியுள்ளவன். அவன் கீழே நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. திவான் சாகிப்! எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடட்டுமா? அல்லது இந்த உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடட்டுமா?" என்று ராகவன் கேட்டான். "இரண்டும் வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரும்!" என்று ஆதிவராகாச்சாரியார் முதல் முறையாகத் திருவாய் மலர்ந்தார். "பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த நிலைமையில் மாறுதல் ஏதாவது ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?" "ஏற்படலாம் என்றுதான் நினைக்கிறேன் இந்த காங்கிரஸ் தலைவர்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தால் நிலைமை கட்டாயம் மாறிவிடும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்காரர்களின் தவறு தான். யுத்தத்தில் ஒத்துழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜில்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் சிறைக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த யுத்த சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வைஸ்ராய் நிர்வாக சபையின் பாதிக்கு மேற்பட்ட ஸ்தானங்கள் கிடைத்திருக்கும். காங்கிரஸ்காரர்கள் செய்யும் தவறு முஸ்லிம் லீகர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிருக்கிறது. முக்கியமான உத்தியோகங்களில் எல்லாம் முஸ்லிம்கள் வந்து நன்றாக உட்கார்ந்து கொள்கிறார்கள்..."
"காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால்தான் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள், திவான் சாகிப்! அவர்களும் முஸ்லிம்களுக்குத் தான் சலுகை கொடுப்பார்கள். 'சிறுபான்மையோருக்கும் நியாயம்' வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு பெரும்பான்மையோர் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்! எனக்கு என்னமோ ஹிந்து மகாசபையின் கொள்கைகள் தான் பிடித்திருக்கிறது. இங்கிலீஷ்காரர்களோடு சண்டை போடுவது கூட அவ்வளவு முக்கியமில்லை. முதலில் முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவேண்டும். எட்டுக் கோடி முஸ்லீம்களை இந்தியாவில் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் வந்துதான் என்ன பிரயோஜனம்?" "என்ன மிஸ்டர் ராகவன்! சற்று முன்னால் முஸ்லிம் ஆகிவிடப் போவதாகச் சொன்னீர்; இப்போது முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறீரே?" என்று பாமா கேட்டாள். "பின்னே என்ன செய்கிறது? ஒன்று முஸ்லிம்களைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும்; அது முடியாவிட்டால் எல்லோரும் முஸ்லிம் ஆகிவிடுவதே நல்லது. அப்போது உத்தியோகங்களில் இந்தப் பாரபட்சம் காட்ட முடியாதல்லவா? எங்கேயாவது சுதேச சமஸ்தானத்தில் ஒரு உத்தியோகம் வாங்கிக் கொடுங்கள் என்று உங்கள் தகப்பனாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் கவனிக்கிற வழியாயில்லை. திவான் சாகிப் சொன்னால் உடனே இந்த தரித்திரம் பிடித்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்யத் தயாராயிருக்கிறேன்."
"அப்பா! ராகவனுடைய கோரிக்கையை நீங்கள் கொஞ்சம் கவனிக்கிறதுதானே?" என்றாள் பாமா. "எல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் ராகவன் ராஜினாமா செய்து விடக் கூடாது. ஒரு வேலையில் இருக்கும் போதே இன்னொரு வேலை கிடைத்தால் தான் கிடைத்தது; விட்டுவிட்டால் கிடைக்காது!" என்றார் மாஜி திவான். "இப்படித் தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பார்க்கிறேன்" என்றான் ராகவன். "அது கிடக்கட்டும், ராகவன்! நீர் முஸ்லிம் அல்ல - ஹிந்து என்பது ஒன்றைத் தவிர உத்தியோகத்தில் 'பிரமோஷன் கிடைக்காததற்கு வேறு காரணம் எதுவும் இல்லையா?" என்று தாமா கேட்டாள். "மதராஸி என்ற காரணமும் இருக்கத் தான் இருக்கிறது. என்னுடைய துரை வரவு செலவு மந்திரியாயிருந்த காலத்தில் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் மதராஸியைத் தேடிப் பொறுக்கிப் போடுவார். இப்போது மதராஸி என்றால் புது டில்லியில் வேப்பங்காயாக இருக்கிறது. இவர்களுக்கு முதலாவதாக யாராவது மகம்மதியர் வேண்டும். மகம்மதியர் இல்லாவிட்டால் மதியில்லாத மகாமூடனாயிருக்க வேண்டும். ஆனால் மதராஸி மட்டும் உதவாது. இந்தியாவைத் தற்சமயம் ஆளும் முகமது துக்ளக்குகள், அறிவுக்கு அமித லாப வரி போட்டாலும் போடுவார்கள்!"
இப்போது ஆதிவராகாச்சாரியார் சம்பாஷணையில் மீண்டும் கலந்துகொண்டு, "பாமா அதைச் சொல்லவில்லை ராகவன்! உம் பேரில் இன்னொரு புகார் இருப்பதாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறதே? உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார். "தெரியாதே! அது என்ன புகார்?" என்றான் சௌந்தரராகவன். "புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு மாதம் நீர் உம்முடைய வீட்டில் ஒளித்து வைத்திருந்தீராமே? அது உண்மையா?" "தாரிணியைப் பற்றிச் சொல்கிறீர்களாக்கும். அவள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது கட்டுக்கதை. அவளை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருக்கவும் இல்லை. சீதாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருந்தபோது, கிட்ட இருந்து பணிவிடை செய்து அவள் உயிரைக் காப்பாற்றினாள். தாரிணி எவ்வளவு சாது! எவ்வளவு புத்திசாலி! என்பதுதான் உங்கள் புதல்விகளுக்குத் தெரியுமே?" என்றான் ராகவன். "சாதுவாயும் புத்திசாலியாயும் இருக்கலாம் அதனால் புரட்சிக்காரியாயிருக்கக் கூடாது என்று ஏற்படாது?" என்றாள் பாமா. "அப்படியே வைத்துக்கொண்டாலும் அதற்கு நான் எப்படி பொறுப்பாளி? அவள் புரட்சிக்காரி என்பது எனக்கு எப்படித் தெரியும்? அது போகட்டும் இந்தப் புதுடில்லியில் அசல் புரட்சி இயக்கத் தலைவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் மறைந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கருணாவதிதேவி எங்கே ஒளிந்திருந்தாள்? சந்த்ரகாந்த் ஸின்னா யார் வீட்டில் மூன்று மாதம் ஒளிந்திருந்தான்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ன செய்து விட்டார்கள்? என் பேரில் மட்டும் புகார் சொல்லுவானேன்?"
"அவர்கள் எல்லோரும் ரொம்பப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள். ஆகையால் யாரும் புகார் செய்யத் துணியமாட்டார்கள். உம்முடைய விஷயம் அப்படியில்லையே, ராகவன்! நீ உத்தியோகத்தில் பிரமோஷனை எதிர்பார்க்கிறவராயிற்றே!" "அதுமட்டுமல்ல, அப்பா! இவர் ஒரு புரட்சிக் காரியை ஒளித்து வைத்திருந்தார் என்று புகார். இவருடைய மனைவி சீதா ஒரு புரட்சிக்காரனுக்கு உதவி செய்வதாகப் புகார். இந்த ஊரிலிருந்து சென்னை மாகாணத்திற்குப் போன ஒரு கடிதத்தில் இவர் மனைவி சீதாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாம். அந்தக் கடிதம் சூரியா என்பவருக்கு எழுதப்பட்டதாம். நேற்று ஒரு பார்ட்டியில் ஒரு சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் சீதாவையும் சூரியாவையும் பற்றி விசாரித்தார். அவர்களுக்குள் ஏதாவது உறவு உண்டா?" என்று பாமாதேவி கேட்டாள். "உறவு உண்டு, அவர்கள் அத்தங்காவும் அம்மாஞ்சியும் ஆகவேண்டும்" என்றான் ராகவன். "அப்படியானால் சரிதான்! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் கொஞ்சம் விரஸமாகக் கூடப் பேசினார்...." "அது என்ன?" என்று ராகவன் பரபரப்புடன் கேட்டான். "அவர்கள் இரண்டு பேரும் 'லவர்ஸ்' (காதலர்கள்) என்பதாக ஏதேனும் வதந்தி உண்டா என்று கேட்டார். எனக்குச் சீதாவை நன்றாகத் தெரியுமாதலால் 'அதெல்லாம் சுத்தப் பொய்; அவதூறு' என்று சொல்லி, அந்த சி.ஐ.டி.காரர் தமது வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்தேன்."
"நீங்கள் செய்தது ரொம்ப சரி ஆனாலும் அந்தச் சூரியா ஒரு காலிப் பயல் என்பது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்பு சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டு மதராஸில் என் தாயார் வீடு சென்று பார்த்தானாம். என்னென்னமோ அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்டானாம். அவன் மறுபடியும் என் கண்ணில் தென்பட்டால் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறுகாரியம் பார்ப்பேன். அவன் பேரில் ஏதாவது அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறதா, உங்களுக்குத் தெரியுமா?" "தெரியாமல் என்ன? மதராஸ், பம்பாய், மத்திய மாகாணம் ஆக மூன்று மாகாணங்களில் அவன் பேரில் வாரண்ட் இருக்கிறதாம்!" "நல்ல காரியம்! சூரியாவைப் போன்றவர்களைச் சிறையிலே தள்ளினால் தேசத்துக்கே க்ஷேமம். சுதந்திர இயக்கம் தூய்மை அடையும்!" என்று ராகவன் சொல்லிக்கொண்டே டெலிபோன் அருகில் சென்றான். "இந்த நேரத்தில் யாருடன் டெலிபோன் பேசப் போகிறீர்கள்?" என்று பாமா கேட்டாள். "வீட்டில் என் மனைவி தூங்கிவிட்டாளா என்று தெரிந்து கொண்டு தான் நான் செல்வது வழக்கம். அவள் விழித்துக் கொண்டிருக்கும்போது சென்றால் தேள் கொட்டுவதுபோல் கொட்டி விடுவாள். இராத்திரியெல்லாம் இரண்டு பேருக்கும் சிவராத்திரிதான்!" என்றான் ராகவன். "ஐயோ! பாவம்! உங்களுடைய நிலைமை பரிதபிக்கத்தக்கது தான்" என்று சொன்னாள் பாமா. சௌந்தர ராகவன் டெலிபோனில் தன்னுடைய வீட்டு நம்பரைக் கூப்பிட்டான். அதற்குப் பதில் உடனே வந்தது. டெலிபோனில் பேசிய குரலைக் கேட்டதும் ராகவனுடைய முகத்தில் ஆச்சரியமும் ஆத்திரமும் பொங்கி கோரத்தாண்டவம் புரிந்தன.