அலை ஓசை/பூகம்பம்/தாயின் உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

ராஜம்பேட்டை அக்கிரகாரத்து வீடுகளில் சரிபாதி வீடுகளுக்கு மேலே பாழடைந்து கிடந்தன. உருப்படியாக இருந்த வீடுகளில் பட்டாமணியம் கிட்டாவய்யரின் வீடு இரட்டைக் காமரா அறைகளுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. வீட்டின் முன்கட்டில் செங்கல் - சிமெண்ட் தளம் போட்ட கூடத்தில் உட்கார்ந்துகொண்டு சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்குச் சடை பின்னிவிட்டுக்கொண்டிருந்தாள். பின்னல் முடியும் சமயத்தில், தபால் ஆபீஸ் பங்காரு நாயுடுவும் பாலகிருஷ்ணனும் கேட்ட 'ஜிங் ஜிங் ஜிக ஜிங்' என்னும் சத்தம் அந்த வீட்டுக்குள்ளேயும் நுழைந்து லேசாகக் காதில் விழுந்தது. "எத்தனை நேரம், அம்மா! சீக்கிரம் பின்னி விடேன்!" என்றாள் லலிதா. "மெதுவாகத்தான் பின்னுவேன்; என்ன அப்படி அவசரமாம்? பதை பதைக்கிற வெய்யிலிலே தபாலாபீஸுக்கு ஓட வேண்டுமாக்கும்! தபால் வந்திருந்தால் எங்கே போய் விடும்? தானே பாலகிருஷ்ணன் கொண்டு வந்து தருகிறான்!"

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னல் முடிந்து விட்டது. அதைத் தூக்கிக் கட்ட போகும் சமயத்தில் லலிதா சடக்கென்று பிடுங்கிக்கொண்டு எழுந்தாள். "நான் கட்டிக்கொள்கிறேன், அம்மா!" என்று சொல்லிக் கொண்டே வாசற்பக்கம் ஓடினாள். "லலிதா! லலிதா! இங்கே வா! வா என்றால் வந்துவிடு. வராவிட்டால்...நீ.. மாத்திரம் போய்விடுவாயோ? அப்புறம் திரும்பி இந்த வீட்டில் அடி வைத்தால்..."

இவ்விதம் சரஸ்வதி அம்மாள் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும்போதே பட்டாமணியம் கிட்டாவய்யர் வீட்டுக்குள்ளே நுழைந்தார். அப்பாவைப் பார்த்ததும் குழந்தை லலிதா தயங்கி நின்றாள். அவளுடைய தேகம் பூங்கொடியைப்போலத் துவண்டது. கபடு சூது அறியாத அவளது குழந்தை முகத்தில் வெட்கமும் சலுகையும் போட்டியிட்டன. லலிதாவின் தாயார் கணவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவளைப் பார்த்துக் கிட்டாவய்யர், "என்ன தடபுடல், சரசு? எதற்காகச் சத்தம் போடுகிறாய்? எப்பொழுது பார்த்தாலும் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதானா உனக்கு வேலை?" என்று கடுமையான குரலில் கேட்டார்.

"ஆமாம்; உங்கள் செல்லக் குழந்தையைக் கோபித்துக் கொள்வதுதான் எனக்கு வேலை. இப்படி நீங்கள் இடம் கொடுத்துக் கொடுத்து..." "...இடம் கொடுத்துக் கொடுத்துச் சர்வ அசடாக ஆக்கி விட்டேன். போகட்டும்; உன் வயிற்றிலே பிறந்தபோது அவள் சமத்தாகப் பிறந்தாள் அல்லவா? அதுபோதும். இந்த கலாட்டாவெல்லாம் இப்போது எதற்காக என்று கேட்கிறேன். லலிதா என்ன செய்துவிட்டாள்?" "எத்தனையோ தடவை சொல்லியாச்சு! தபால் ஆபீஸுக்குத் தனியாக ஓடுவேன் என்கிறாள். வருகிற தபால் வழியிலா நின்றுவிடும்? தை பிறந்துவிட்டது; இந்த வருஷம் எப்படியாவது குழந்தைக்குக் கலியாணம் பண்ணியாக வேணும்...." "போதும், நிறுத்து! கலியாணத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" கலியாணம் பண்ணும் வயதான பெண்ணை யாராவது தனியாக அனுப்புவார்களா?" "அனுப்பினால் என்ன? பூகம்பமா வந்துவிடும்? தபால் ஆபீஸ் இரண்டு பர்லாங் தூரம்கூட இல்லை. வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கிற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது... லலிதா! நீ போய் வா! எனக்கு ஏதாவது தபால் வந்திருந்தால் அதையும் வாங்கிக்கொண்டுவா!"

அவ்வளவுதான்; அம்மாவைக் கடைக்கண்ணால் ஒரு தடவை பார்த்துவிட்டு லலிதா மானைப்போல் துள்ளி வாசலில் ஓட்டம் பிடித்தாள். "நானும் பார்த்தாலும் பார்த்தேன், பெண்ணுக்கு இப்படிச் செல்லம் கொடுக்கிறவர்களைப் பார்த்ததே யில்லை. பம்பாய்க்குப் போய்விட்டு வந்ததிலிருந்து அப்பாவும் பெண்ணும் இப்படியாகிவிட்டீர்கள். இதெல்லாம் என்னத்தில் போய் முடியப் போகிறதோ, என்னமோ?" என்று சரஸ்வதி அம்மாள் முணுமுணுத்தாள். "எல்லாம் சரியாகத்தான் முடியும்; நீ வாயை மூடிக்கொண்டிரு! மாப்பிள்ளை மட்டும் பெரிய படிப்புப் படித்தவனாய் வேண்டும் என்கிறாயே; அதற்குத் தகுந்தபடி பெண்ணைப் பழக்க வேண்டாமா? வீட்டுக்குள்ளே பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நாளைக்கு..." இதற்குள்ளே வாசலிலிருந்து யாரோ ஒருவர் வருகிற காலடி சத்தமும் கனைப்பும் கேட்டன.

சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் பின்னால் ஒதுங்கிச் சென்று தூண் ஓரத்தில் நின்றாள். வந்த மனிதர் கிட்டாவய்யரின் நெருங்கிய நண்பரும் உறவினருமான சீமாச்சு அய்யர். அந்த நண்பர்களுடைய பேச்சு ஒரு தனி ரகமாயிருந்தது. "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "என்ன ஓய்!" "தெரியுமா ஓய்?" "என்ன தெரியுமா?" ஓய்?" "காலையில் பட்டணத்திலிருந்து நம்முடைய அத்தான் கலியாணசுந்தரம் வந்தான். வரும்போது கையில் பத்திரிகை கொண்டு வந்தான். அதில் எல்லாம் சக்கைப் போடாகப் போட்டிருக்கிறது, ஓய்!" "என்ன போட்டிருக்கிறது, ஓய்?" "பீஹார் மாகாணத்தில் பூகம்பமாம்!" "என்ன? என்ன? என்ன?"

"பிரமாதமான பூகம்பமாம்! உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ரொம்ப இருக்கலாம் என்று பயப்படுகிறார்களாம்... பத்திரிகை பூராவும் இந்த ஒரு விஷயந்தான்! சக்கைப்போடு!" "சீமாச்சு! இது என்ன அதிசயம்?" "எது என்ன அதிசயம்?" "நீ வருகிறதற்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலேதான் பூகம்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்?" "என்ன பேசிக் கொண்டிருந்தீர்?" "சரசுவிடம் குழந்தை தபாலாபீஸுக்குப் போனால் பூகம்பமா வந்துவிடும்? என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி வாய் மூடுவதற்குள் நீ உள்ளே நுழைந்து 'பீகாரில் பூகம்பம்' என்கிறாய்!" "பிராமணர் வாக்கு உடனே பலித்துவிட்டதாக்கும்! நீர் என்ன சாமானியப் பட்டவரா! பெரிய வைதிக பரம்பரை. அதர்வண வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். ஓய்! உம்மைக் கூப்பிடுகிறாப்போல இருக்கிறது!"

தூண் மறைவிலே நின்று கொண்டிருந்த சரஸ்வதி அம்மாள் சற்று முன்புறமாக வந்து கிட்டாவய்யரைத் திரும்பிப் பார்க்கும்படி செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதை கவனித்து விட்டுத்தான் சீமாச்சுவய்யர் அவ்விதம் சொன்னார். "சரசு! இப்படி முன்னால் வந்து தைரியமாகச் சொல்லேன்! நம்ம சீமாச்சுவிடம் என்ன சங்கோஜம்?" சரஸ்வதி அம்மாள் ஈனசுவரத்தில், "அவர் என்னமோ பூகம்பம், கீகம்பம் என்று சொல்லுகிறாரே? குழந்தை தனியாகப் போயிருக்கிறாளே! உடனே நீங்களாவது போய் அழைத்து வாருங்கள்! இல்லாவிட்டால் ஆள் அனுப்புங்கள்" என்றாள்.