திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


"அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, 'இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?' என்று கேட்டேன். 'ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை' என்றேன்." - தோபித்து 2:13.

தோபித்து (The Book of Tobit) [1][தொகு]

முன்னுரை

யூதர்கள் கி.மு. 721இல் அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்ததைப் பின்னணியாகக் கொண்டு யூதக் குடும்ப வாழ்வை விளக்கும் இக்கதை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இது, யூத போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்கமுறையான "மித்ராஷ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பர் அறிஞர். ஞான இலக்கியத்தைச் சேர்ந்ததாகக் கருதுவாரும் உளர்.

இந்நூல் முதலில் அரமேய மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அது முழுமையாக நமக்குக் கிடைக்காததால், அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே மூலபாடமாக இன்று பயன்படுகிறது. அண்மைக் காலம்வரை, வத்திக்கான், அலக்சாந்திரியத் தோற்சுவடிகளினின்றே ஏறத்தாழ எல்லா மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டு வந்தன. இந்தச் சுவடிகளைவிடச் சீனாய்ச் சுவடி தொன்மை வாய்ந்ததால், இதுவே இம்மொழிபெயர்ப்புக்கு மூலபாடமாக அமைகிறது. சீனாய்ச் சுவடி முன்னையவற்றைவிடச் சற்று விரிவானது.

பல்வேறு துன்பங்களிடையிலும் தம்மீது பற்றுறுதி கொண்டு வாழ்வோர்க்குக் கடவுள் கைம்மாறு அளித்து அவர்களைக் காப்பார் என்பது இந்நூலின் மையச் செய்தியாகும்.

தோபித்து[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1-2 3
2. தோபித்துக்கு நேர்ந்த சோதனைகள் 1:3 - 3:17 3 - 9
3. தோபித்து பெற்ற கைம்மாறு 4:1 - 11:19 9 - 19
4. தோபித்தின் புகழ்ப்பாவும் அறிவுரையும் 12:1 - 14:11 19 - 23
5. முடிவுரை 14:12-15 23

தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

முகவுரை[தொகு]


1 இது தோபித்தின் கதை:
தோபித்து தொபியேலின் மகன்; தொபியேல் அனனியேலின் மகன்;
அனனியேல் அதுவேலின் மகன்; அதுவேல் கபேலின் மகன்;
கபேல் இரபேலின் மகன்; இரபேல் இரகுவேலின் மகன்;
இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.
2 தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் [1] காலத்தில்
திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே
தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே,
பெயேருக்கு வடக்கே உள்ளது.

தோபித்துக்கு நேர்ந்த சோதனைகள்; தோபித்தின் பற்றுறுதி[தொகு]


3 தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம்
உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்;
அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட
என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும்
தருமங்கள் பல செய்துவந்தேன்.


4 இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது
என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும்
என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பிரிந்து சென்றது;
இஸ்ரயேலின் குலங்களெல்லாம் பலியிடுவதற்காகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது;
எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில்
எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக்
கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.


5 இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த
கன்றுக்குட்டியின் சிலைக்குக்
கலிலேயாவின் மலைகளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும்,
என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.
6 நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும்
கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை
எருசலேமுக்குச் சென்றுவந்தேன்.
அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும்
கால்நடையில் பத்திலொரு பங்கையும்
முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு
நான் எருசலேமுக்கு விரைவது வழக்கம். [2]
7 அவற்றைக் காணிக்கையாக்குமாறு
ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்;
அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய்,
மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு
மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை
எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்;
மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று
ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று
பகிர்ந்து கொடுத்து வந்தேன்.


8 பத்தில் மூன்றாவது பங்கைக் [3] கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும்
இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்;
ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது,
மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும்,
என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும்
நாங்கள் விருந்துண்டுவந்தோம்.
என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.


9 நான் பெரியவனானபோது,
என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்;
அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்;
அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.
10 அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக்
கைதியாக நினிவேக்குச் சென்றபின்
என் உறவின் முறையார் அனைவரும்
என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.
11 ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.
12 நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.
13 எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து,
எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார்.
எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம்
வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.
14 அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று
அவருக்குத் தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிவந்தேன்.
அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த
கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம் [4] நாநூறு கிலோ [5]
வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.
15 எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று;
எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.


16 எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த
உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.
17 பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன்.
என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது
நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால்,
அதை அடக்கம் செய்துவந்தேன்.
18 சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்;
கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர்
அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது
அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்;
அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார்.
நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன்.
சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.
19 ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று
நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான்.
எனவே நான் தலைமறைவானேன்.
பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு
என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.
20 என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு,
அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன;
என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர
எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.


21 நாற்பது நாள்களுக்குள் சனகெரிபின் மைந்தர்கள் இருவர்
அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர்.
அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார்.
என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை
அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார்.
இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது. [6]
22 பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால்
நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன்.
அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும்
ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும்
நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான்.
சக்கர்தோனும் அவனை அதே பதவியில் அமர்த்தினார்.
அகிக்கார் என் நெருங்கிய உறவினன்; என் சகோதரனின் மகன்.


குறிப்புகள்

[1] 1:2 - "சல்மனேசர்" என்னும் பெயர் கிரேக்கத்தில் "எனமேசர்" என வழங்குகிறது.
[2] 1:6 = இச 16:16.
[3] 1:8 - "பத்தில் மூன்றாவது பங்கை" என்னும் பாடம்
சில தொன்மைவாய்ந்த சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
[4] 1:14 - கபிரியின் மகன் "கபேல்" (காண் 4:20)
[5] 1:14 - "பத்துத் தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தினாரியத்துக்குச் சமம்.
ஒரு தினாரியம் ஒரு நாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.
[6] 1:21 = 2 குறி 32:21.


அதிகாரம் 2[தொகு]

தோபித்து பார்வை இழத்தல்[தொகு]


1 சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன்.
என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும்
என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது
எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது.
நான் உணவு அருந்த அமர்ந்தேன்.
2 விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது.
அப்பொழுது என் மகன் தோபியாவிடம்,
"பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள்
கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால்,
அவரை அழைத்துவா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும்.
நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே" என்று கூறினேன்.


3 தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான்.
அவன் திரும்பி வந்து, "அப்பா" என்று அழைத்தான்.
நான், "என்ன மகனே?" என்றேன்.
அவன் மறுமொழியாக, "அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது" என்றான்.
4 உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித்
தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கிவந்தேன்;
கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று
அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன்.
5 வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். [1]
6 "உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும்
பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்" என்று
பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ்
கூறிய சொற்களை நினைத்து அழுதேன். [2]


7 கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று,
குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன்.
8 என் அண்டை வீட்டார்,
"இவனுக்கு அச்சமே இல்லையா?
இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே
ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள்.
இவனும் தப்பியோடினான்.
இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே"
என்று இழித்துரைத்தனர்.


9 அன்று இரவு குளித்துவிட்டு
என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன்.
வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.
10 என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது.
அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது.
உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின.
நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன்.
அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும்
வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது.
இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன்.
நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன்.
என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர்.
எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக
அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.


11 அக்காலத்தில் என் மனைவி அன்னா
பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
12 தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க,
அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள்.
திசித்தர் மாதம் ஏழாம் நாள்
தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள்.
அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன்,
விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.
13 அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது.
உடனே நான் அவளை அழைத்து,
"இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?" என்று கேட்டேன்.
"ஒருவேளை இது திருடப்பட்டதோ?
அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு;
ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை" என்றேன்.
14 அதற்கு அவள் என்னிடம்,
"கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது" என்றாள்.
இருப்பினும் நான் அவளை நம்பவில்லை.
உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன்.
அவளது செயலைக் குறித்து நான் நாணினேன்.
அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம்,
"உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே?
உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!" என்றாள்.


குறிப்புகள்

[1] 2:5 = எண் 19:11=13.
[2] 2:6 = ஆமோ 8:10


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை