பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

பிரவகித்துக் குதித்து கரைகளிடையே வெறியாட்டயர்ந்து அகப்பட்டவைகளேயெல்லாம் சுருட்டிச் சுழன்றோடும். வெள்ளத்தின் வேகம் தணிந்து தண்ணீர் வற்றிய பிறகு மணல் படுகையில் பலாகமான பொருள்களும் தட்டுப் படுவது சகஜம். எங்கிருந்தாவது எதையேனும் இழுத்து வரும் நீர்ப்பெருக்கு எங்காவது அதைப் போட்டுவிட்டு மறைந்து விடும், விளையாட்டுத்தனச் சிறுபிள்ளை போல.

இருளடைந்த பங்களா பற்றிய செய்தியின் சூடு ஆறிப்போய்க் கொண்டிருந்த சமயம் ‘அச்சு அசல் பிக்சர்’ பியூட்டியைப் பற்றி எல்லோரும் பேசிப்பேசி அலுப்படைத்து விட்ட வேளை, வேறொரு பரபரப்பான சேதி ஆடிக் காற்றின் வேகத்திலே பரவியது எங்கும்.

மணலாற்றிலே திடீரென வெள்ளம் கரைபுரண்டோடியது. அதன் மூலஸ்தான மலையிலே பெய்த பெருமழையின் விளைவானது. ஆகவே, இரண்டே நாட்களில் நீர்ப் பெருக்கு வந்தது போல் வடிந்து விட்டது. அது செய்த வேலை தான் மிகப் பெரியது!

ஜனங்கள் அதிகம் இறங்கி ஏறும் ஒரு பாதையினருகிலே அரசமரம் ஒன்று நின்றது. கரையோரத்தில் நின்ற மரத்தின் வேர்கள் சில ஆற்றினுள்ளும் பரவியிருந்தன. அவற்றினூடே பாய்ந்து புகுந்து வெள்ளம் மணலை அரித்துச் சென்று விட்டது. அதற்கு ஈடாக அளித்தது போல் மனித உடல் ஒன்றை அங்கு திருகல் முறுகலாகத் திணித்து வைத்திருந்தது.

அந்தப் பிரேதத்தை முதன் முதலில் பார்த்த பெருமை யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ தெரியாது. அதைப் பற்றி எவரும் கவலை கொள்ளவுமில்லை. ‘அது யார்? அந்தப் பிணம் எங்கிருந்து வந்திருக்கும்? கொலையா, தற்கொலையா, விபத்துதானா? இப்படி எவ்வளவோ புதிர்கள் கிளைத்துப் படர்த்தன. அந்த ஊராரைத் திண்ற வைக்கும் விதத்திலே.