பக்கம்:இருட்டு ராஜா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14இருட்டு ராஜா


முகத்தில் இயல்பான ஒரு வசீகரம் மின்னும். அவனது உள்ளம் கடுகடுத்திருக்கிற நேரங்களில் அவன் குடித்து விட்டுக் கத்துகிற சமயங்களில், அந்த முகத்தில் ஒரு கருமையும் கடுமையும் சேர்ந்துவிடும். அப்போது அந்த முகம் அநேகருக்கு பயம் எழுப்புவதாயும், சிலருக்கு வெறுப்பு உண்டாக்குவதாகவும் காட்சி தரும்.

முத்துமாலை நெடிது வளர்ந்த கம்பீரத் தோற்றம் கொண்டவனுமல்லன். சராசரி உயரம்தான். பூசி மெழுகி விட்டது போன்ற மினுமினுப்பான புஷ்டியான உடல். சகஜ வேளைகளில் அவனைப் பார்த்துப் பயப்படுவதற்கு எதுவும் இருப்பதாகவே தோன்றாது. ஆனாலும் பெரும் பான்மையினர் அவனை நினைத்துப் பயப்பட்டார்கள். அவனை விட்டு விலகியே சென்றார்கள். அவன் வழிக்குப் போகாமலிருப்பதே தங்களுக்கு நல்லது என்று எண்ணினார்கள்.

ஊராரின் போக்கை எண்ணுகிறபோதெல்லாம் முத்து மாலைக்கு அவனுடைய இளம்பிராயத் தோழன் காசி அடிக்கடி கூறியதே ஞாபகம் வரும்.

“பெரும்பாலான மனிதர்கள் பயந்தாங்கொள்ளிகள் தான். நெஞ்சுத் தைரியம் இல்லாதவர்கள். ‘அஞ்சி அஞ்சிச் சாவாரிவர். அஞ்சாத பொருள் அவனியில் எதுவுமில்லை’ என்று நெஞ்சு பொறுக்காமல் ஒரு கவி பாடி வச்சானே, அது ரொம்பவும் சொக்குத் தங்கமான உண்மை. அதட்டிப் பேசுகிறவன், அடாவடி பண்ணுகிறவன் கையிலே கம்போ கத்தியோ துாக்குகிறவன் தனி ஒருவனாக இருந்தாலும். அவனைப் பார்த்து பயப்படுறவங்க ரொம்பப் பேரு இருப்பாங்க. நீ எவனையும் வெட்டவும் வேணாம், குத்தவும் வேணாம், கையிலே பெரிய அரிவாளை வச்சுக்கிட்டு. ஆ—ஊன்னு கத்திக்கிட்டுத் திரி. நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/16&oldid=1138945" இலிருந்து மீள்விக்கப்பட்டது