பக்கம்:இருட்டு ராஜா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12இருட்டு ராஜா


ஏன் வரப்படாது? பேஷா வரலாம். தெக்கே ஒரேயடியாப் போகவும் போகலாம்” தனது பேச்சு சாதுரியத்தை மெச்சுகிறவன் போல் தானே சிரித்து க் கொண்டான் முத்துமாலை.

“அதுக்கு வேளையும் பொழுதும் வரணும். இருக்கட்டும் முத்துமாலை, நீ ஏன் இப்படி யானே?”

“எப்படி ஆனேன்! நான் எப்பவும் போல் தானே இருக்கேன்!”

“இல்லையே, முன்னே இப்படியா இருந்தே, நான் இங்கே இருந்தபோது? இடைக்காலத்திலே ஏன் இப்படி மாறியிருக்கே? ராத்திரி எல்லாம் தூங்காமெ, மத்தவங்களையும் தூங்கவிடாமக் கெடுத்துக் கிட்டு...”

“ஏ நான் தூங்கலேங்கிறது சரி. மத்தவங்களை தூங்க விடாமக் கெடுக்கிறேங்கிறது சரியில்லை. ஆந்தைக அலறுது. கூகை கத்துது. அதுமாதிரி ராப் பறவைகளின் ராசி நானும். ஊர்காரங்க அதுகளுக்குப் பழகிப்போகிற மாதிரி, என் விசயத்திலும் பழகிப் போவாங்க...”

தங்கராசு அவனையே பார்த்தபடி, “நீ ஏன் இப்படி மாறிப் போனேங்கிறதுதான் எனக்கு ஆச்சர்யமாயிருக்கு!” என்றான்.

“சரி. ஆச்சர்யப்பட்டுக்கிட்டே இரு.கொஞ்ச நாளைக்கு இந்த ஊரிலே தங்குவே இல்லே? அப்ப பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு முத்துமாலை நகர்ந்தான்.

அந்தத் தெரு திரும்புகிற வரையில் அவனுக்கு ‘சுரத்’ இல்லை.சந்து திரும்பி அடி வைத்ததும் தன்னை சுதாரித்துக்கொள்ள விரும்பியவனாய், “ஹ்விட்டோ ஹ்வீட்!” என்று சீட்டி அடித்தான். இரண்டு தடவை மூன்று தடவை அடித்தான். பிறகு அபூர்வமாக என்றாவது பாடுகிற ஒரு பாட்டைப் பாடலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/14&oldid=1138942" இலிருந்து மீள்விக்கப்பட்டது