பக்கம்:இருட்டு ராஜா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6இருட்டு ராஜா

 இப்படியும், இன்னும் பலவாறாகவும், அங்குமிங்கும் ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டார்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள்தான்.

அப்போது இரவு ஆறரை அல்லது ஏழு மணி தான் இருக்கும். “பகல் பொழுது குறை; ராத்திரிப் பொழுது அதிகம்” என்று மக்கள் சகஜமாகக் சொல்லிக் கொள்ளக் கூடிய பருவகாலம். இருட்டு ‘கரும்கும்’ என்று கவிந்து கிடந்தது.

ஊர் அப்பொழுதே முக்கால்வாசி அடங்கியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் சென்றால், உயிருள்ளவர்களை உள்ளடக்கிய சமாதிகள் மாதிரி வீடுகள் அனைத்தும் மாறி நிற்கும். எவனோ மாயாஜாலக்காரனின் மந்திரத்துக்குக் கட்டுண்டு உயிர்ப்பற்று இயக்கமற்றுப்போன இடம்போல அந்த ஊர் மோனநிலையில் காட்சி தரும். ஆந்தைகள் அங்கங்கே அலறும். எங்காவது ஒரு நாய் குரைக்கும். அதற்கு எதிரொலிபோல் இன்னொரு நாய் குரல் கொடுக்கும். அதை எதிரேற்று அடுத்த தெரு நாய் தொடரும். மற்றப்படி அமைதி கனத்துக் கவித்து தொங்கும்.

இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காகவே வந்தவன் போல முத்துமாலை கிளம்புவான் அவனது சீட்டி ஒலி அமைதியைக் கொன்று, இருட்டைக் கிழித்து எவ்வும். தெற்குத் தெருவில் எழும். பிறகு தெருத் தெருவாகத் திரியும். பாட்டு என்ற பேரில் கத்துவது வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடப்பவர்களுக்கு எரிச்சல் தரும்; பயம் உண்டாகும்; குழப்பம் எழுப்பும்; என்னென்னவோ செய்யும்.

முத்துமாலைக்குப் பிடித்தது ஒரே பாட்டு எப்பவோ ஒரு நாடகத்தில் கேட்டது. எவனோ கள்ளபார்ட் நடிகன் அமர்க்களமாக ஆடிக்குதித்து அட்டகாசமாய் பாடியது—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/8&oldid=1138641" இலிருந்து மீள்விக்கப்பட்டது