உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

36

அருள்நெறி முழக்கம்


கலையை வாழ்க்கையில் கண்ட தமிழினம் கடவுள் நெறியில் வாழ்ந்து கலையைக் காக்க வேண்டுமேயானால் பழம்பெரும் மன்னர்களால் எழுப்பப்பெற்ற திருக்கோயில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற சிற்பங்களையும் சித்திரங்களையும் காக்க வேண்டும்.

கலை இரண்டு விதம். கலையில் அழகை மட்டும் காண்பது ஒருவிதம், அழகுடன் இன்பமும் பயனும் பெறுவது ஒருவிதம். கலை பொழுது போக்கிற்கல்ல; வாழ்விற்குத்தான். அவர்கள் வாழ்த்தியதும் - வணங்கி வழிபட்டதும் கலையில் கண்ட கடவுளைத்தான். நாம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் மறந்தோம் - அவர்கள் வாழ்த்திய வணங்கிய கடவுளையும் மறக்கத் தலைப்பட்டோம் அதனால் வாழ்வும் இழந்தோம். இன்னும் எஞ்சி இருக்கின்ற பண்பாட்டையும் இழந்து கொண்டே வருகின்றோம். மொழி - கலை - எல்லை - நாகரிகம் - பண்பாடு - அனைத்திலும் பின்னேதான் நிற்கின்றோம். அத்தகு நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் நமது முன்னோர்கள் வாழ்ந்த நெறியில் நின்று கடவுளை வழிபட்டுக் கலையைக் காக்க வேண்டும்.

இந்த முயற்சியின் சின்னம்தான் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம், திருக்கூட்டத்தின் அருள் முழக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கேட்கிறது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் தம்மையும் தம் வாழ்வையும் மறந்து இத்திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம் இதயங்கலந்த வாழ்த்து. இது நன்முறையில் வளர்ந்து தமிழ்நாட்டின் நலங்கருதித் தொண்டாற்றும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டம் மேற்கொண்டிருக்கிற பெரும் பணிகளுக்கு, சமய வாழ்வு கருதித் தொண்டாற்றும் கழகங்களும் பக்கபலமாக இருந்து வருகின்றன. தொண்டர் குலம் அனைத்தும் ஒன்று என்ற உண்மையை அருள்நெறித் திருக்கூட்டமும், அதனுடன் இணைந்து நின்று தொண்டாற்றுகின்ற கழகங்களும் மெய்ப்பித்து வருகின்றன.