உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/இருளில் ஒரு குரல்

விக்கிமூலம் இலிருந்து
26. இருளில் ஒரு குரல்


கணநேரம் ஜொலித்து உலகை ஜோதி வெள்ளத்தில் மூழ்குவித்த மின்னலின் ஒளியிலே, புத்த பிக்ஷு ஏரிக்கரையில் நின்று கைகளைத் தூக்கிப் பேய்ச் சிரிப்பு சிரித்த காட்சியைக் கண்டதும், சற்று நேரம் குண்டோதரன் பீதியினால் கைகால்களை அசைக்க முடியாதவனாய் மரத்தோடு மரமாக நின்றான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு சேற்றில் தட்டுத் தடுமாறிக் கரைமேல் நடந்தான். கரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் ஓடிய இடத்தை நோக்கி உத்தேசமாக அவன் நடந்தபோது மறுபடியும் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று மின்னியது. அதன் ஒளியில், வெட்டப்பட்டிருந்த கால்வாய், முன்னால் பார்த்ததைக் காட்டிலும் அகன்றிருப்பதையும், தண்ணீர் முன்னைவிட வேகமாய்க் கரையைப் பிளந்துகொண்டு போவதையும் பார்த்தான். புத்த பிக்ஷு நின்ற இடத்தில் அவரைக் காணவில்லை. ஆனால், மண் வெட்டி மட்டும் கிடந்த இடத்திலேயே கிடந்தது.

உடனே குண்டோதரனுடைய மனத்தில் சிறிது தைரியம் உண்டாயிற்று. கால்வாயை ஒரே தாண்டாகத் தாண்டி அப்பால் குதித்தான். அக்கரையில் கிடந்த மண்வெட்டியைக் கையினால் தடவி எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக மண்ணைச் சரித்து வாய்க்காலில் தள்ளத் தொடங்கினான். அப்படி தள்ளிக்கொண்டிருக்கும்போதே 'ஆஹா! இது வீண் பிரயத்தனம் போலிருக்கிறதே!' என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது.

அதே சமயத்தில் அவன் கழுத்தண்டை ஏதோ ஸ்பரிச உணர்ச்சி ஏற்படவே, சட்டென்று மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிமிர்ந்தான். அவன் எதிரே கும்மிருட்டில் ஆஜானுபாகுவான ஒரு கரிய உருவம் நின்றது. அது புத்த பிக்ஷுவின் உருவந்தான் என்பதையும், அவர் தமது இரும்புக் கைகளால் தன்னுடைய கழுத்தைப் பிடித்துநெறிக்க முயல்கிறார் என்பதையும் ஒரு கணத்தில் தெரிந்துகொண்டான். குண்டோதரனுடைய வஜ்ரக் கைகள் புத்த பிக்ஷுவின் கை மணிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டன. மறுகணத்தில் குண்டோதரனுடைய தலைக்கு மேலே நாகநந்தி பிக்ஷுவின் பேய்ச் சிரிப்பு மீண்டும் ஒலித்தது.

இடையிடையே வானத்தைக் கிழித்துக்கொண்டு தோன்றி மறைந்த மின்னல் வெளிச்சத்தினால் இன்னும் கன்னங்கரியதாகத் தோன்றிய காரிருளில், விளிம்பு வரை தண்ணீர் ததும்பி அலை மோதிக்கொண்டிருந்த ஏரிக்கரையில், கணத்துக்குக் கணம் அகன்று வந்த உடைப்புக்கு அருகில், குள்ள உருவமுடைய குண்டோதரனுக்கும் நெடிதுயர்ந்து நின்ற புத்த பிக்ஷுவுக்குமிடையே பிடிவாதமான மல்யுத்தம் ஆரம்பமாயிற்று. அந்த விசித்திரமான துவந்த யுத்தம் கால் நாழிகை நேரம் நடந்திருக்கலாம். அப்போது, கரையில் மோதிய ஏரி அலைகளின் 'ஓ' என்ற சத்தம், கரையைப் பிளந்துகொண்டு அப்பால் விழுந்த பிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தம், வரவர வலுத்துக் கொண்டிருந்த 'சோ' என்ற மழைச் சத்தம், 'விர்' என்று அடித்த புயற்காற்றில் மரங்கள் பிசாசுகளைப்போல் ஆடிய மர்மச் சத்தம் ஆகிய இந்த நானாவிதப் பேரொலிகளையும் அடக்கிக்கொண்டு, "குண்டோதரா! குண்டோதரா!" என்ற கம்பீரமான குரல் கேட்டது.

துவந்துவ யுத்தம் செய்த இருவரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்கள். ஆனால், அவர்களுடைய கைப்பிடி மட்டும் நழுவவில்லை. அது யாருடைய குரல் என்று குண்டோதரன் சிந்தித்தான். அசோகபுரத்திலிருந்து வரும்போது, தனக்குப் பின்னாலும் குதிரையடிச் சத்தம் கேட்டது அவனுக்கு நினைவு வந்தது. "குண்டோதரா! சண்டையை நிறுத்து! உடைப்பை அடக்க முயலாதே! வீண்வேலை! ஓடிப்போய் ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்று! நான் சொல்லுவது காதில் விழுகிறதா?" அந்தக் குரல் தன் எஜமானருக்கும் எஜமானரின் குரல் என்று குண்டோதரன் அறிந்துகொண்டான். "விழுந்தது, பிரபு! ஆக்ஞை!" என்று கூவினான்.

குண்டோதரன் மறு குரல் கொடுத்தானோ இல்லையோ, இன்னொரு பெரிய மின்னல் ஆயிரம் சூரியன் ஒளியை ஒத்துக் கண்களைக் குருடாக்கிய மின்னல் மின்னியது! அடுத்தாற்போல் ஒரு பேரிடி இடிக்கப் போகிறதென்பதைக் குண்டோதரன் உணர்ந்தான். "இடி முழக்கம் கேட்ட நாகம் போல்" என்னும் பழமொழி அச்சமயம் அவனுக்கு ஞாபகம் வந்தது. பிக்ஷுவின் கை மணிக்கட்டுகளை அவன் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோலவே இடி இடித்தது. அண்ட பகிரண்டங்கள் எல்லாம் இடித்து தடதடவென்று தலையிலே விழுவதுபோல இடித்தது. இடி இடித்து நின்றதும் குண்டோதரனுடைய காதில் அதற்கு முன்னால் கேட்டுக் கொண்டிருந்த அலைச் சத்தம், மழைச் சத்தம் எல்லாம் ஓய்ந்து 'ஙொய்' என்ற சப்தம் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. "ஐயோ! காது செவிடாகி விட்டதா, என்ன?' என்று குண்டோதரன் ஒரு கணம் எண்ணமிட்டான். ஆனால், அதே இடிச் சத்தம் காரணமாக நாகநந்தியின் பிடி தளர்ந்திருக்கிறது என்பதை அவன் தேக உணர்ச்சி சொல்லிற்று. அவ்வளவுதான்! தன்னுடைய வஜ்ர சரீரத்தின் முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பிக்ஷுவை ஒரு தள்ளு தள்ளினான்.

ஏரிக் கரையின் அப்புறத்தில் பிக்ஷு உருண்டு உருண்டு போய் கீழே உடைப்புத் தண்ணீர் பிய்த்துக் கொண்டிருந்த பள்ளத்தில் தொப்பென்று விழுந்ததைக் குண்டோதரன் கண்டான். உடனே, ஒரு பெரிய அதிசயம் அவனைப் பற்றிக் கொண்டது. மின்னல் இல்லாதபோது புத்த பிக்ஷு கரையிலிருந்து உருண்டு பள்ளத்திலே விழுந்தது அவனுக்கு எப்படி தெரிந்தது? ஆஹா! இதென்ன வெளிச்சம்? குண்டோதரன் சுற்று முற்றும் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு பனைமரம் உச்சியில் பற்றி எரிவதைக் கண்டான். ஆ! அந்த மரத்தின் மேல் இடி விழுந்து தீப்பிடித்துக் கொண்டிருக்கிறது வெளிச்சத்திற்குக் காரணம் அதுதான்!

பற்றி எரிந்த பனை மரத்தின் வெளிச்சத்தில் குண்டோதரன் இன்னும் சில காட்சிகளைக் கண்டான். அந்தப் பனைமரத்தைத் தாண்டி ஒரு குதிரை அதிவேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அந்தக் குதிரை மேலிருந்தவர்தான் சற்று முன்னால் தனக்குக் குரல் கொடுத்தவர் என்பதை உணர்ந்தான். ஏரியின் ஓரமாக இன்னொரு மரத்தில் நாகநந்தி பிக்ஷு வந்த குதிரை கட்டப்பட்டிருப்பதையும் கண்டான். அதற்கு மேல் வேறொன்றையும் பார்க்கக் குண்டோதரன் விரும்பவில்லை. அந்தக் குதிரை இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான். நடுவில் கால் சறுக்கிக் கீழே விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

மரத்திலிருந்து குதிரையை அவிழ்த்துவிட்டு, அதன்மேல் குண்டோதரன் ஏறினானோ இல்லையோ, பனைமரத்து வெளிச்சமும் அணைந்து விட்டது. அதுவரையில் சிறு தூறலாக இருந்தது அப்போது பெருமழையாக மாறியது. எத்தனையோ பெருமழையைக் குண்டோதரன் பார்த்ததுண்டு. ஆனால் அன்றைய இரவு பெய்த மழை மாதிரி அவன் பார்த்ததேயில்லை. வானம் பொத்துக் கொண்டு, அதற்கு மேலே தங்கியிருந்த தண்ணீர் தொடதொடவென்று கொட்டுவதுபோல் மழை கொட்டிற்று.

"ஆஹா! ஏரி உடைப்புக்கும் இந்தப் பெரு மழைக்கும் பொருத்தந்தான். நல்ல நாள் பார்த்துத்தான் நாகநந்தி திருப்பாற்கடலை வெட்டிவிட்டார்!" என்று குண்டோதரன் எண்ணிக் கொண்டான். "எப்படியும் இந்த ஏரி வெள்ளம் அசோகபுரம் போய்ச் சேர்வதற்கு முன்னால் நாம் போய்ச் சேரவேண்டும்" என்று தீர்மானித்தான். ஆனால், அந்தத் தீர்மானத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த இருளிலும், மழையிலும் குண்டோதரன் வழி கண்டுபிடித்துக் குதிரையை நடத்திக்கொண்டு அசோகபுரம் போய்ச் சேர்வதற்கு வெகுநேரம் முன்னாலேயே ஏரிக் கரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உடைத்துக் கொண்டு வெள்ளம் பிரளயமாக ஓடத் தொடங்கி அசோகபுரத்தையும் அடைந்துவிட்டது.