நெஞ்சு விடு தூது
நெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும்.
இறைவனியல்பு
[தொகு]பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்
பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினா - னன்றியும்
இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு
மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்
வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினா - னோத
வரியா னெளியா நளவிறந்து நின்ற
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
வருவா னுருவா னருவுருவு மில்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்
உயிரியல்பு
[தொகு]என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று
தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்
சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலா ரகந்தைக்கு - மேனி
யயர வயர வழிய வழியும்
உயிரின் றுயர முரையேன் - வயிரமே
தளையினியல்பு
[தொகு]கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத
வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா
வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி
வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது
தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு
மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல்
பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்
குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும்
சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
இறைவனது நிலை
[தொகு]வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
யாதி யமல நிமலனருட் - போத
அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி
லளியி லளியி லளிய னளியில்
அளவி லளவி லளவன் - அளவிறந்து
நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா
விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற்
றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்
கல்லாது தோன்றா வமல னகிலமெலா
நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு
மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
தசாங்கம்
[தொகு]மலை
[தொகு]பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே
ஆறு
[தொகு]செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்
களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்
கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய
பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு
மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ
மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்
காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப்
புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்
சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்
ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்
மீதான பத்து மிகப்பரந்து - காதிப்
பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய
வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா
நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த
தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு
மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்
தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா
வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா
வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு
மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்
நாடு
[தொகு]பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்
ஊர்
[தொகு]கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்
தார்
[தொகு]தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்
துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும்
புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்
உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்
மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத
குதிரை
[தொகு]வானம் புவன மலைகடலேழ் பாதாள
முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா
யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள்
நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்
யானை
[தொகு]பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு
மாதார மாகி யகண்டநிறைந் - தோத
அரிதா யெளிதா யருமறையா றங்கத்
துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்
காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்
தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த
மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா
லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா
லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான்
மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்
கொடி
[தொகு]சமையங் கடந்து தனக்கொப் பிலாத
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
முரசு
[தொகு]தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே
என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே
நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்
ஆணை
[தொகு]மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை
யுலகு முலகா லுணரவொண்ணா வூரு
மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த
இறைவன் பெருமை
[தொகு]காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்
ஞானாசாரியார்
[தொகு]வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்
போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ
நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்
வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா
நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்
குரூபதேசம்
[தொகு]வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே
னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்
நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய
தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை
நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை
யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு
வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்
சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி
னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச
மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்
கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத
வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா
மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க
ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்
பாடலா ராடலார் பண்பலார் நண்பலா
ராடலா ராட லகன்பதியாங் - கூடலார்
காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா
நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன
மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த
மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு
மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா
னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்
அடையும் இடம்
[தொகு]சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற
நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென்
றிகலா விருளலகை போலிகலே பேசு
முலகா யதன்பா லுறாதே - பலகாலுந்
தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே
நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்
தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு
மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும்
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா
வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே
லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்
செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
வழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ
னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்
வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி
யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்ப
மருவி மயங்கி வருவரோ - விருபொழுது
நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்
கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா
டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும்
பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
யீங்கொன்றை வாரா யினி.
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.
முற்றும்.