உள்ளடக்கத்துக்குச் செல்

அலை ஓசை/எரிமலை/பால சந்நியாசி

விக்கிமூலம் இலிருந்து


நான்காம் அத்தியாயம் பால சந்நியாசி

இரவு மணி பத்து அடித்தது வானத்தைக் கருமேகங்கள் மூடிக்கொண்டிருந்தன. பொச பொசவென்று மழைத் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று அடித்துக் கொண்டிருந்தது. ஆத்மநாதய்யர் வீட்டுக்குள் சந்தடி இன்னும் அடங்கவில்லை. ஆனால் தாமோதரம்பிள்ளையின் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன. வீட்டில் இருளோடு நிசப்தம் குடிகொண்டிருந்தது. வீட்டுக்குப் பக்கத்துச் சந்திலிருந்து ஒரு மோட்டார் வண்டி வந்து தாமோதரம்பிள்ளை வீட்டு வாசலில் நின்றது. அடுத்த நிமிஷம் வீட்டுக் கதவு திறந்தது. இருளடைந்திருந்த வீட்டின் உட்புறத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. அந்த உருவத்தின் மீது மங்கலான வீதி விளக்கின் ஒளி விழுந்த போது, இடுப்பில் காஷாயம் தரித்துக் கையில் கமண்டலம் ஏந்திய பால சந்நியாசியின் உருவம் என்று தெரிய வந்தது. அந்தப் பால சந்நியாசி திண்ணை ஓரத்தில் நின்று வீதியின் இருபுறமும் எதிர்ப் பக்கமும் கவனித்துப் பார்த்தார். ஒருவரும் இல்லை என்று அறிந்ததும் மோட்டார் வண்டிக்குள் திறந்திருந்த கதவின் வழியாகப் பாய்ந்து ஏறினார். மறுகணம் வண்டி சத்தம் செய்யாமல் புறப்பட்டது. சிறிது நேரம் வரையில் வண்டிக்குள்ளேயும் நிசப்தம் நிலவியது. தேவபட்டணத்துத் தெருக்களைத் தாண்டி அப்பாலிருந்த சாலையில் வண்டி பிரவேசித்ததும், வண்டி ஓட்டிய அமரநாத், "அப்பா! பிழைத்தோம், இனிப் பயமில்லை!" என்றான். "எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் பயமாகத்தானிருக் கிறது. இந்த மோட்டாரில் இருக்கிற வரையில் எனக்குப் பயந்தான் இறங்கிவிட்டால் கவலையில்லை. எனக்காக நீ இவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட எண்ணியதை நினைத்தால்...?" "இந்த தேசத்திலேயே நீ ஒருவன் தான் எதற்கும் துணிந்த வீராதி வீரன் என்று எண்ணம் போலிருக்கிறது!" "அப்படியில்லை, அமரநாத், எந்த நிமிஷத்திலும் கைதியாவதற்குத் தயாராகவே நான் இருந்து வருகிறேன். என்றைக்காவது ஒரு நாள் கைதியாகியே தீரவேண்டும். உன் விஷயம் அப்படியல்ல எனக்காக நீ கஷ்டப்பட வேண்டி நேர்ந்தால்..." "உனக்காக நான் ஒன்றும் கஷ்டப்பட வில்லை. உனக்காக கஷ்டப்பட்டவர்கள் உன் தகப்பனார், தமையன், உன் தங்கையின் மாமனார் முதலியவர்கள். எல்லாரும் இன்றைக்குச் செம்மையாக அடி வாங்கினார்கள். உன் தங்கையும் அம்மாவும் பட்ட வேதனை கொஞ்சமல்ல. அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்குள்ளே எனக்குப் பிராணன் போய்விட்டது." "அதை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய முகத்தில் விழிக்க வேண்டி நேர்ந்தால், என்ன சமாதானம் சொல்வேன்? அவர்களை அடிபடும்படி விட்டுவிட்டு நான் தப்பித்துக் கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்...?" "ஒன்றும் நினைக்க மாட்டார்கள் எப்படியாவது நீ தப்பித்துக் கொண்டாயே என்று சந்தோஷப்படுவார்கள். இப்போதும் கூட உன் கதி என்ன ஆயிற்றோ என்று தான் அவர்களுக்குக் கவலை. நீ நிச்சயமாய்த் தப்பித்துக் கொண்டாய் என்று தெரிந்தால் அவர்களுடைய கவலை நீங்கிவிடும்." "என்ன தான் இருந்தாலும் நான் இன்று செய்தது ரொம்ப அவமானமான காரியந்தான். உன்னுடைய வற்புறுத்தலைக் கூட நான் பொருட்படுத்தி யிருக்க மாட்டேன். அவர்களை அடிபட விட்டு நான் ஒளிந்து கொண்டிருக்க என் மனம் இடம் கொடுத்திராது. டில்லியில் இருந்து என் அத்தங்கா சீதாவைப் பற்றிக் கடிதம் வரவில்லையென்றால் நானே போலீஸ் அதிகாரிகளிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்திருப் பேன்.""அதனால் யாருக்கும் எந்தவிதச் சந்தோஷமும் ஏற்பட்டிராது. உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மன வேதனைப் பட்டிருப்பார்கள், என் தகப்பனார் உள்படத்தான்!" "தாமோதரம்பிள்ளை என் விஷயத்தில் காட்டிய அனுதாபத்தை நினைத்தால் தான் எனக்குப் பரம ஆச்சரியமா யிருக்கிறது." "அதற்குக் காரணம் என்னவென்று உனக்குத் தோன்றுகிறது? ஊகித்துச் சொல், பார்க்கலாம்!" "காரணம் வேறு என்ன இருக்க முடியும்? நான் உன்னுடைய சிநேகிதன் என்ற காரணந்தான்." "அதெல்லாம் இல்லை; இங்கிலீஷ்காரன் சிங்கப்பூரில் அடிபட்டதி லிருந்து நம்மவர்கள் எல்லாருடைய மனமும் மாறிப் போயிருக்கிறது. இந்த இங்கிலீஷ் ராஜாங்கம் எப்படியும் இந்தியாவை விட்டுப் போய்விடப் போகிறது என்று சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரையில் எல்லாரும் நம்புகிறார்கள்..." "அதற்கும் உன்னுடைய தகப்பனார் எனக்குச் செய்த உதவிக்கும் என்ன சம்பந்தம்?" "சம்பந்தம் இருக்கிறது; நாளைக்கு இங்கிலீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், அடுத்தாற்போல் அதிகாரத்துக்கு யார் வருவார்கள்? உன்னைப் போன்ற காங்கிரஸ் புரட்சிக் காரர்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள். எல்லாவற்றுக்கும் 'கப்பலில் பாதிப் பாக்குப் போட்டு வைக்க லாம்' என்று கருதி தான் அப்பா உன்னைத் தப்புவிக்க முன் வந்தார்." "அது உண்மையானால், உன் தகப்பனாரின் பாதிப் பாக்கு நஷ்டந்தான். என்னைப் போன்ற ஓட்டைக் கப்பலில் பாக்குப் போட்டு என்ன பிரயோஜனம்? ஆனால், நீ சொல்லும் காரணத்தை நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னுடைய சிநேகிதன் என்ற காரணத்துக்காகவும் என் பேரில் உள்ள பிரியத்தினாலுந்தான் இந்தக் காரியம் செய்திருக்க வேண்டும்." "போனால் போகட்டும், நீ சொல்கிறபடி வைத்துக் கொள்ளலாம். உன் அத்தங்காளின் விஷயம் என்னவோ சொன்னாயே?" "என் தங்கை லலிதாவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தனக்குச் சீதாவைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைக் கலியாணம் செய்து கொண்டானல்லவா? அந்தக் காதல் கலியாணம் பற்றி அப்போது நாமெல்லோரும் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? உண்மையில் அந்தக் கலியாணம் பெரிய துரதிர்ஷ்டமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாது அமரநாத்! ஓயாமல் சண்டை தான்." "நீ வீணாக மிகைப்படுத்திக் கூறுகிறாய், சூரியா! நம்முடைய தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது தம்பதிகள் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தமா? நானும் சித்ராவும் தினம் டஜன் தடவை சண்டை போட்டுக் கொள்கிறோம்..." "உங்களுடைய விஷயம் வேறு, அமரநாத்! உங்களைப் போன்ற தம்பதிகள் உலகத்தில் வெகு அபூர்வம். உங்களுடைய சண்டையெல்லாம் காதலர்களின் சண்டை; வேடிக்கைச் சண்டை. சீதா - சௌந்தரராகவனுடைய விஷயம் அப்படியல்ல பூனையும் எலியும் போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து வருகிறது." "சௌந்தரராகவன் சீமைக்குப் போய் வந்தவன்; பெரிய சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். ஆகையால் தன் மனைவி ஆங்கில தோரணையில் நவநாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைக்கலாம். உன் அத்தங்காள் அதற்குச் சம்மதியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்; எத்தனையோ ஐ.சி.எஸ். காரர்கள் இந்தக் காரணத்துக்காகவே மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்." "சீதா விஷயத்தில் அந்தக் காரணம் சொல்ல முடியாது அமரநாத்! முதலிலே ஒருவேளை கொஞ்சம் தயங்கியிருக்கலாம். பிற்பாடு சௌந்தரராகவன் நாகரிக ஏணியில் ஒரு படி ஏறினால் சீதா இரண்டு படி ஏறினாள். எனக்கு கூட, 'ஐயோ! அத்தங்கா இப்படி மாறிப்போய்விட்டாளே?' என்று வருத்தமாயிருந்தது. அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை சௌந்தரராகவனுடைய மூர்க்கத்தனம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது." "இப்போது தெரிகிறது, எனக்குக் காரணம். நம்மில் இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் கலியாணமான புதிதில் தங்களுடைய மனைவிமார் நவநாகரிகமடைந்து எல்லாருடனும் கூச்சமின்றிப் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு இது பிடிக்காமல் போய்விடுகிறது. ஹிந்து தர்மத்தின்படி பெண்கள் அடக்கமாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படி ஆண் பிள்ளைகள் நினைக்கும் போது பெண் பிள்ளைகளுக்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகப் பிடிப்பதில்லை... நான் சொல்கிறதைக் கேள், சூரியா! அந்தத் தம்பதிகள் விஷயத்தில் நீ ஒன்றும் தலையிடாமல் இருந்துவிடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்!" "அப்படி என்னால் இருக்க முடியவில்லை, அமரநாத்! வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்ட என் அத்தை இறப்பதற்கு முன்னால் தன்னுடைய அனாதைப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டாள் அதை என்னால் மறக்க முடியவில்லை!" என்றான் சூரியா. சாலையின் இருபுறத்திலும் கழனிகளில் தண்ணீர் ததும்பி அலை மோதிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் காவேரி நதியின் பிரவாகம். மேட்டார் வண்டி சாலை வளைவில் திரும்பும் போது நெடுந்தூரத்துக்கு மோட்டார் விளக்கின் வெளிச்சம் அடித்து நாலாபுறமும் பரவியிருந்த நீர்வளத்தைக் காட்டியது. கழனியிலும் காவேரியிலும் இலேசான மழைத் தூற்றல் விழுந்தபோது உண்டான சலசலசல சத்தம் மந்திர ஸ்தாயி சங்கீதத்தைப் போல் மனதுக்கு அமைதியை உண்டாக்கியது. நல்ல சங்கீதக்கச்சேரியின் நடுவில் அரசியல் சம்பாஷணை தொடங்கும் ரசிகர்களைப் போல் திடீர் திடீரென்று தவளைகள் உற்சாகமடைந்து வரட்டுக் கூச்சல் போட்டன. மோட்டார் வண்டியின் முன் கண்ணாடியில் விழும் மழைத் துளிகளைத் துடைக்கும் கருவிகள் டக் டக் என்ற சத்தத்தோடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. "அடாடா! நீர்வளம் என்றால் இது அல்லவா நீர்வளம்? வடநாட்டில் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் வறண்ட பிரதேசங்கள், இந்த மாதிரி நீர்வளம் எங்கேயும் கிடையாது" என்றான் சூரியா. "நீ வங்காளத் துக்கு வந்ததில்லை, சூரியா! தமிழ்நாட்டைக் காட்டிலும் நீர்வளம் நிறைந்தது வங்காளம். அதிலும் கீழ் வங்காளம் அதிக வளம் பொருந்தியது. மழைக் காலத்தில் எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயந்தான்!" என்று அமரநாத் கூறினான். "அப்படிப்பட்ட நீர்வளம் நிறைந்த தேசத்தில் இப்போது பஞ்சம் என்று சொல்கிறாயே?" என்றான் சூரியா. "அதுதானே வேடிக்கை! நான் சொல்லுவதை மட்டும் என்ன? பத்திரிகைகளில் நீ பார்க்கவில்லையா; வெளி ஜில்லாக்களிலிருந்து வரும் ஜனங்கள் சாலை ஓரங்களில் விழுந்து சாகிறார்கள்." "கல்கத்தா நிலைமை அப்படியிருக்கும்போது நீ மறுபடியும் அங்கே போகப் போவதாகச் சொல்கிறாயே." "போகாமல் என்ன செய்வது? உத்தியோகம் இருக்கிறதல்லவா? வங்காளத்தில் பஞ்சம் என்றால், கல்கத்தாவிலுள்ள நாற்பது லட்சம் பேரும் சாப்பாடு இல்லாமல் செத்துப் போய் விடுவார்கள் என்பதில்லை." "தெரியும், தெரியும் உண்மையில் அரிசிப் பஞ்சமே இல்லை; பணப் பஞ்சம் தான். பணம் இருந்தால் அரிசிக்குப் பஞ்சமில்லை . இருக்கிற அரிசியைச் சில சண்டாளர்கள் வாங்கிச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொள்ளை லாபத்துக்காக ஏழை எளியவர்கள் உயிர் பலி கொடுக்கப்படுகிறது அப்படித்தானே, அமரநாத்!" "ஆம்; அப்படித்தான் இத்தகைய பேராசை பிடித்த கிராதகர்கள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்குத் தான் நீ பூரண சுதந்திரம் வேண்டும் என்கிறாய்." "இங்கிலீஷ்காரன் எப்போது இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறானோ, அப்போது இப்படிப்பட்ட தீமைகள் ஒழிந்து போய்விடும். பிரிட்டிஷ் ஆட்சியினால் வந்த கேடுகள் தானே இவையெல்லாம்?" "ஆனால், இங்கிலீஷ்காரன் இந்தியாவைவிட்டுப் போய் விடுவான் என்று நீ நம்புகிறாயா? உண்மையாகச் சொல்!" என்றான் அமரநாத். "கட்டாயம் ஒருநாள் இங்கிலீஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் போகிறான். காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அமரநாத்! வங்காளத்துக்கு மட்டும் தான் வரவில்லை. நான் போன இடத்திலே யெல்லாம் ஜனங்களுடைய மனது கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டேன். இந்தியா தேசம் ஒரு பெரிய எரிமலையாகி யிருக்கிறது. எந்தச் சமயத்தில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்குமோ தெரியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வேண்டியது தான்; நாற்பது கோடி ஜனங்களும் சீறி எழுந்து புரட்சி செய்யப் போகிறார்கள். அந்தப் புரட்சி நெருப்பிலே பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பஸ்பமாகப் போகிறது. அது மட்டுமா? நாட்டைப் பிடித்த எல்லாப் பீடைகளும் எரிந்து பொசுங்கிச் சாம்பலாகப் போகின்றன." "போதும், சூரியா! போதும்! நம்மைச் சுற்றிலும் ஒரே குளிர்ச்சியாயிருக்கிறது. இருந்தாலும் உன்னுடைய பேச்சு இந்த மோட்டாருக்குள் டெம்பரேச்சரையே அதிகமாக்கிவிட்டது. எரிமலை வெடிக்கிறபோது வெடிக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம்... அதோ மயிலம்பட்டி ஸ்டேஷன் வந்துவிட்டது; இப்போது நாம் பிரியவேண்டும்!" என்றான் அமரநாத். சற்று தூரத்தில் விளக்குகள் மினுக்கின. ஒரு சின்னக் கட்டிடம், கைகாட்டி முதலிய ரயில்வே ஸ்டேஷன் சின்னங்கள் மங்கலாகத் தெரிந்தன. தேவபட்டணம் ஸ்டேஷனில் ரயில் ஏறுவது அபாயம் என்று அமரநாத் இந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனுக்குச் சூரியாவைக் கொண்டு விட்டான். வண்டி ஒரு மரத்தடியில் நின்றது, நல்லவேளையாகத் தூறல் குறைந்திருந்தது. சூரியா கதவைத் திறந்துகொண்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான். "சூரியா! உன்னை இப்போது பார்த்தால் சாக்ஷாத் விவேகானந்த சுவாமியைப் போலிருக்கிறது. பார்க்கிறவர்கள் 'யாரோ மகான்; பால சந்நியாசி' என்று நினைத்துக் கொள்வார்கள்!" என்றான் அமரநாத். "உண்மையில் நான் 'பால சந்நியாசி' அல்ல; போலி சந்நியாசி. இந்தப் புனிதமான வேஷத்தைப் பொய்யாகப் போட வேண்டியிருப்பது பற்றி எனக்கு மிக்க வருத்தமாயிருக்கிறது..." "ஆனால் இந்த வேஷம் போதும் என்று நினைக்கிறாயா? சி.ஐ.டி. புலிகள் இதற்கு ஏமாந்து போய்விடுவார்களா?" என்று அமரநாத் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான். "சொல்லுவதற்கில்லை, தென்னிந்தியர்கள் எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர் களா யிருப்பதுபோலவே சி.ஐ.டி. வேலையிலும் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். வட இந்தியாவில் சி.ஐ.டி. சுத்த மோசம். சம்பந்தமில்லாதவர்களைத் தான் பிடிப்பார்கள். இத்தனை தூரம் நான் பிரயாணம் செய்திருக்கிறேன்; தேவபட்டணத்தில் எப்படியோ கண்டு கொண்டு விட்டார்கள். பார்! எல்லாம் கடவுள் சித்தம்போல் நடக்கும். டில்லிக்கு ஒரு தடவை போய்விட்டேனா னால், அப்புறம் என்ன ஆனாலும் பாதகமில்லை! நான் போய் வரவா?" என்றான் சூரியா. அமரநாத் சூரியாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் "உன்னை இப்படி விட்டுப் போவது எனக்கு எவ்வளவோ கஷ்டமா யிருக்கிறது; ஆனாலும் வேறு வழியில்லை. சூரியா! இந்தியா தேசமெங்கும் பிரயாணம் செய்த நீ வங்காளத்துக்கு மட்டும் ஏன் வராதிருக்க வேண்டும்? டில்லியில் உன் காரியம் முடிந்ததும் கல்கத்தாவுக்கு வந்துவிடு. கல்கத்தா புரட்சிக்காரர் கூட உன்னைப் பிடிக்க மாட்டார்கள். வேறு யாரையாவது தேடிக்கொண்டு போவார்கள். கல்கத்தாவுக்கு வந்து என் வீட்டில் சில காலம் தங்கி இரு. என் கல்கத்தா விலாசம் ஞாபகம் இருக்கிறதல்லவா?" என்றான். "டில்லிக்குப் போய் என் காரியம் முடிகிறவரையில் நான் பிடிபடாதிருந்தால், கட்டாயம் கல்கத்தா வருகிறேன், அமரநாத்! விலாசம் ஞாபகம் இருக்கிறது!" என்று சூரியா கூறினான். அப்போது அடித்த மின்னல் ஒளியில் அவனுடைய கண்களில் துளித்திருந்த கண்ணீர்த் துளிகள் முத்துப் போலப் பிரகாசித்தன. அமரநாத் மேலே ஒன்றும் சொல்லாமல் மௌனமாக வண்டியைத் திருப்பிக்கொண்டு போனான். இருட்டிலே தன்னந்தனியே நடந்து சென்று சூரியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். அங்கேயிருந்த இரவு ஸ்டேஷன் மாஸ்டரும் குமாஸ்தாவும் இரண்டு போர்ட்டர்களும் அந்தப் பால சந்நியாசியின் முக தேஜஸைப் பார்த்துப் பிரமித்தார்கள். "சுவாமி எங்கேயிருந்து வருகிறது? எங்கே போகிறது?" என்று அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் சுவாமியிடமிருந்து "ஹர ஹர மகாதேவ" என்ற ஒரு பதில் தான் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தெற்கே போகும் ரயில் வரவே சந்நியாசி பிளாட்பாரத்துக்குள்ளே சென்றார். கேட்டில் நின்ற போர்ட்டர் அவரை நிறுத்தலாமா என்று பார்த்தான். அதற்குள் இரவு ஸ்டேஷன் மாஸ்டர், "வேண்டாம், அப்பா! சாமியாரை நிறுத்தாதே!" என்று சொன்னார். பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயில் ஓரமாகப் பால சந்நியாசி விடுவிடு என்று நடந்து சென்றார். தேவபட்டிணம் ஸ்டேஷனில் அமரநாத் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இரண்டாம் வகுப்பு டிக்கட் சந்நியாசியிடம் இருந்தது. ஆனால் அவர் மூன்றாம் வகுப்பு வண்டிகளைப் பார்த்துக்கொண்டே போனார். மழையை முன்னிட்டு அநேக வண்டிகளில் ஜன்னல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஒரு வண்டியில் சில ஜன்னல்கள் திறந்திருந்தன. சாமியார் அந்த வண்டியில் ஏறினார். ஒவ்வொரு அரை பெஞ்சியிலும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அல்லது ஒருவர் காலை மடக்கிக் கொண்டு படுத்திருந்தார். ஒரே ஒரு அரை பெஞ்சியில் மட்டும் ஒரு மனிதன் சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு டைரியும் பென்சிலும் இருந்தன. பால சந்நியாசி நேரே அந்தப் பெஞ்சியண்டை போய் நின்று, "ஹரஹர மகாதேவா" என்றார். அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "உட்காருங்கோ, சாமி!" என்றான். சாமியார் உட்கார்ந்து மடியில் செருகியிருந்த சிறு பட்டுப் பையை எடுத்து, அதிலிருந்து கொஞ்சம் விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, "திருச்செந்தூர் முருகா!" என்றார். "சாமி எவ்விடத்துப் பிரயாணமோ?" என்று அந்த மனிதன் கேட்டான். "இந்தக் கட்டை காசிக்குப் போய்த் திரும்பி வருகிறது. இராமேசுவரம் போக ஆசை! முருகன் அருள் எப்படியோ?" என்றார் பால சந்நியாசி. "சாமியிடம் டிக்கட் இருக்கிறதா?" என்று அந்த மனிதன் கேட்டான். "மதுரை வரையில் இருக்கிறது; ஒரு பக்தர் வாங்கிக் கொடுத்தார். அதற்கப்பால் முருகனுடைய சித்தம்!" என்று சொல்லிக் கொண்டே சந்நியாசி இடுப்பில் செருகியிருந்த டிக்கட்டை எடுத்துக் காட்டினார். "இது இரண்டாம் வகுப்பு டிக்கட் அல்லவா? சாமி தவறி மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறிவிட்டதே!" "இல்லை; இல்லை தெரிந்து தான் ஏறினேன். பக்தன் வாங்கிக்கொடுத்தாலும் இந்தக் கட்டைக்கு இரண்டாம் வகுப்பில் போக விருப்பமில்லை. ஆகையால் ரயில் இங்கே நின்றதும் இரண்டாம் வகுப்பிலிருந்து இறங்கி மூன்றாம் வகுப்பில் ஏறலாயிற்று!" அந்த மனிதனுக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது. "சாமியார் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் எங்கே பார்த்தாலும் போலிச் சாமியார்கள் தான் அதிகமாய்ப் போயிருக்கிறார்கள்!" என்றான். "முருகன் செயல்!" என்றார் பால சந்நியாசி. ரயில் போய்க்கொண்டிருந்தது; வெளியே மழைத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது; உள்ளே பிரயாணிகள் தூங்கி வழிந்தார்கள். சாமியாருக்கும் அவருடைய புதிய பரமானந்த சீடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. "அப்பனே! உன் மனதிலே கவலை குடிகொண்டிருக்கிறது!" என்றார் சந்நியாசி. "ஆமாம் சாமி! வீட்டிலே சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லை. ஒரு மாதமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வருகிறேன். ஒன்றும் குணம் தெரியவில்லை அதற்குள் இந்த 'டியூடி' வந்துவிட்டது." சாமியார் விபூதிப் பையை எடுத்து, "இந்தா! காசி விசுவநாதர் கோயில் விபூதி. இதைக் கொண்டுபோய் பக்தியுடன் உன் சம்சாரத்தின் நெற்றியில் இடு குணமாகிவிடும்!" என்றார். பயபக்தியுடன் அந்த மனிதன் விபூதியை வாங்கிக்கொண்டு டைரியிலிருந்து ஒரு ஏட்டைக் கிழித்து அதில் பொட்டணம் கட்டினான். "அந்த ஒரு கவலைதானா? இன்னும் ஏதாவது உண்டா?" "வேறு ஒன்றும் பெரிய கவலையில்லை. இன்றைக்கு போகிற காரியம் ஜயமானால் நல்லது. 'பிரமோஷன்' கிடைக்கும் இல்லாவிட்டால் 'பிளாக் மார்க்' கிடைக்கும்." "யாரோ ஒரு ஆளைத் தேடிக்கொண்டு நீ போகிறாய் இல்லையா, அப்பனே?" "உண்மை! உண்மை! சாமியாருக்கு ஞான திருஷ்டி கூட உண்டு போல் இருக்கிறது." "திருச்செந்தூர் முருகன் செயல்!" என்றார் சாமியார். "நான் தேடிப் போகிற ஆசாமி அகப்படுவான்களா, சாமி!" "இந்தக் கட்டைக்கு என்ன தெரியும், அப்பா? அந்த ஆசாமி இந்த ரயிலிலே தான் இருக்கிறதாக இவ்விடத்தில் உதயமாகிறது!" என்று சாமியார் தம் நெற்றியை விரல்களால் தட்டிக் கொண்டார். "இந்த ரயிலிலே ஐந்நூறு பேர் இருக்கிறார்கள். அங்க அடையாளம் ஒன்றும் இல்லாமல் ஆளைக் கண்டுபிடி என்று சொன்னால், என்னத்தைச் செய்வது, சாமி! சர்க்கார் வேலையைப் போல் அதிலும் இந்த சி.ஐ.டி. உத்தியோகத்தைப் போல், தொல்லை பிடித்த வேலை வேறொன்றுமில்லை?" என்றான் சீடன். "உண்மை அப்பனே, உண்மை! இந்தத் தரித்திரம் பிடித்த வேலையை நீ விட்டுவிடு! திருச்செந்தூர் முருகன் அருளால் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்!" என்றார் சாமியார். ரயில் திண்டுக்கல் ஜங்ஷனை அடைந்தது; சி.ஐ.டி. கேசவன் பால சந்நியாசியைப் பார்த்து, "சாமி! நான் இவ்விடத்தில் இறங்கி இன்னும் இரண்டு வண்டி தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள் இங்கேயே இருந்து என் இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டிக்கட்டைப் பற்றிச் சாமி கவலைப்பட வேண்டாம். மதுரையில் நான் டிக்கட் வாங்கித் தருகிறேன்" என்றான். "இந்தக் கட்டைக்கு டிக்கட் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். முருகன் ரயிலில் ஏறச் சொன்னால் ஏறும்; இறங்கச் சொன்னால் இறங்கும்" என்றார் பால சந்நியாசி. பத்து நிமிஷத்துக் கெல்லாம் அந்த சி.ஐ.டி. கேசவன் ஒரு ரயில்வே போலீஸ் உத்தியோகஸ்தரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். தான் உட்கார்ந்திருந்த பெஞ்சு காலியாயிருந்ததைப் பார்த்துத் திகைத்தான். ஒருவேளை வேறு வண்டியாயிருக்கும் என்று அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பார்த்தான்; பயனில்லை. பிறகு அதே வண்டிக்கு வந்து உள்ளே தூங்கி வழிந்த பிரயாணிகள் சிலரைப் பார்த்து, "இங்கேயிருந்த சாமியார் எங்கே?" என்று கேட்டான். யாரைக் கேட்டாலும், "தெரியாது; நாங்கள் பார்க்கவில்லை!" என்றார்கள். இதற்குள் வண்டி புறப்படும் நேரமாகி, விசில் ஊதிவிட்டது. போலீஸ் உத்தியோகஸ்தர் அவனை இரண்டு திட்டுத் திட்டிவிட்டுத் திரும்பிப் போனார். சி.ஐ.டி. கேசவன் ரயிலில் ஏறிப் பழைய இடத்திலேயே போய் உட்கார்ந்து கொண்டான். "எல்லாம் முருகன் செயல்!" என்று சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து விபூதிப் பொட்டணத்தை எடுத்துப் பிரித்துக் காசி விசுவநாதர் விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டான்.