உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
சேபா நாட்டு அரசி சாலமோன் அரசரை சந்தித்தல். ஓவியர்: ஜொவான்னி டேமின், 19ஆம் நூற்றாண்டு.

1 அரசர்கள் (The First Book of Kings)

[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9

[தொகு]

கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்

[தொகு]

(2 குறி 5:2 - 6:2)

1 சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,
2 ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல, மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார். [1]
3 ஆண்டவர் அவரிடம் சொன்னது: "என் முன்னிலையில் நீ செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும்.
4 உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில்,
5 'இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்' என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன். [2]
6 ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,


7 நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது 'இஸ்ரயேல்' மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும்.
8 இக்கோவில் இடிந்த கற்குவியல் [3] ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி 'ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?' என்று கேட்பான். [4]
9 அதற்கு மற்றவர்கள், 'இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார்' என்பார்கள்."

சாலமோன் ஈராமுடன் செய்த உடன்படிக்கை

[தொகு]

(2 குறி 8:1-2)


10 ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.
11 இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்குக் கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார்.
12 தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார்.
13 அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், "சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது?" என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல் [5] என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.


14 ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ [6] பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.

சாலமோனின் ஏனைய பல அரிய செயல்கள்

[தொகு]

(2 குறி 8:3-18)


15 அரசர் சாலமோன் கட்டாய வேலைத் திட்டத்தின்மூலம் ஆண்டவரின் இல்லம், தம் மாளிகை, கீழைத் தாங்குதளம், [7] எருசலேமின் மதில், மெகிதோ, கெசேர் ஆகியவற்றைக் கட்டினார்.
16 இந்தக் கெசேர் எகிப்திய மன்னன் பார்வோனால் சாலமோனுக்குக் கொடுக்கப்பட்ட நகர். முன்பு அம்மன்னன் படையெடுத்து வந்து அந்நகரைப் பிடித்து, அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றிருந்தான். அவன் தன் மகளைச் சாலமோனுக்கு மண முடித்துக் கொடுத்துபோது, அந்த இடத்தைச் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தான்.
17 சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும் கீழைப் பெத்கோரோனையும்,
18 பாலாத்து, பாலை நிலத்தில் உள்ள தாமார் ஆகிய நகர்களையும் கட்டினார்.
19 பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும் எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார்.
20 இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர் -
21 அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள் - சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.
22 ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை; அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.


23 சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும், கண்காணிப்பதற்கென்று ஐந்நூற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர்.
24 தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.
25 சாலமோன் கோவிலைக் கட்டி முடித்த பின், ஆண்டவருக்காகக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டுக்கு மும்முறை எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவர் முன்னிலையில் தூபம் காட்டி வந்தார். [8]
26 அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார்.
27 அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார்.
28 இவர்கள் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

குறிப்புகள்

[1] 9:2 = 1 அர 3:5; 2 குறி 1:7.
[2] 9:5 = 1 அர 2:4.
[3] 9:8 'உன்னதமாய் இருக்கும்' என்பது எபிரேய பாடம்.
[4] 9:8 = 2 அர 25:9; 2 குறி 36:19.
[5] 9:13 எபிரேயத்தில் 'பொட்டல் நிலம்' என்பது பொருள்.
[6] 9:14 'நூற்றிருபது தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[7] 9:15 'மில்லோ' என்பது எபிரேய பாடம்.
[8] 9:25 = விப 23:17; 34:23; இச 16:16.

அதிகாரம் 10

[தொகு]

சேபா நாட்டு அரசியின் வருகை

[தொகு]

(2 குறி 9:1-12)

1 ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார்.
2 அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.
3 சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை.
4 சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை,
5 அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.


6 அவர் அரசரை நோக்கிக் கூறியது: "உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது.
7 நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.
8 உம்முடைய மனைவியர் [1] நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே!
9 உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்."
10 அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ [2] பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை. [3]


11 ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன.
12 அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை; இன்றுவரை காணப்படவுமில்லை.


13 அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.

சாலமோனின் செல்வச் சிறப்பு

[தொகு]

(2 குறி 9:13-28)


14 சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ.
15 அதைத் தவிர அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.
16 அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ [4] பொன் பயன்படுத்தப்பட்டது.
17 மேலும் அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ [5] பொன் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் 'லெபனோனின் வனம்' எனப்பட்ட மாளிகையில் வைத்தார்.
18 அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.
19 அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்களின் வடிவங்கள் நின்றன.
20 ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.
21 சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் 'லெபனோனின் வனம்' எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை; சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.
22 அரசரின் [6] வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன.


23 உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார்.
24 சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர்.
25 அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர்.
26 சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்படை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறுத்தி வைத்தார். [7]
27 அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன.
28 சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர். [8]
29 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.

குறிப்புகள்

[1] 10:8 'ஆடவர்' என்பது எபிரேய பாடம்.
[2] 10:10 'நூற்றிருபது தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[3] 10:1-10 = மத் 12:42; லூக் 11:31.
[4] 10:16 'அறுநூறு செக்கேல்' என்பது எபிரேய பாடம்.
[5] 10:17 = 'மூன்று மினாக்கள்' என்பது எபிரேய பாடம்.
[6] 10:22 'தர்சீசு' என்பது எபிரேய பாடம்.
[7] 10:26 = 1 அர 4:26.
[8] 10:28 = இச 17:16.


(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை