பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இவனுக்கு அருள் புரிவதாக இயம்பியுள்ளான். இதனையே பொய்கையாழ்வாரும் ‘தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்று அருளிச் செய்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட குணங்கள் யாவற்றையும் அர்ச்சை வடிவாதக எழுந்தருளியிருக்கும் எல்லா எம்பெருமான்களிடமும் காணலாம் என்பது மணவாள மாமுனிகள் போன்ற ஞானச் செல்வர்களின் திருவுள்ளம். இந்த எண்ண அலைகள் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் சென்னையிலிருந்த நிலையில் திருநீர்மலை என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் புறப்படுகின் றோம். இருப்பூர்தியில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுதே அத்தலத்து எம்பெருமான் நம் மனத்தில் அந்தர்யாமி யாக எழுந்தருளி விடுகின்றான்.

நீர்மலை நீல்வண்ணனை இரண்டு ஆழ்வார்கள் ‘சொல் மாலைகளால் மங்களாசாசனம் செய்துள்ளனர். பூதத்தாழ்வார்,

‘பயின்றது அரங்கம், திருக்கோட்டி, பல்நாள் பயின்றதுவும் வேங்கடமே; பல்நாள் பயின்றது அணிதிகழும் சோலை அணிநீர் மலையே மணிதிகழும் வண்தடக்கை மால்.”

(பயின்றது-பழகி வாழ்ந்தது; பல்நாள்-அநாதி காலம்; அணி-அழகு; திகழும் - விளங்கும்; மணி-நீலமணி, மால்-எம்பெருமான்) என்று போற்றியுரைப்பர். ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எம்பெருமான் கோயில்கொண்டுள்ள திவ்விய தேசங்களில் திருவரங்கம், திருக்கோட்டியூர், திருமலை என்னும் சிலவற்றைப் பேசி அநுபவிக்கும் போது அணி திகழும் சோலை அணி நீர்மலை’ என்று சிறப்பித்து இந்தத் திவ்விய தேசத்தைக் குறிப்பிடுகின்றார். ‘எழில் கொழிக்கும் சோலைகளையுடையதாய் இந்நிலவுலகினுக்கு ஆபரணம் போன்றதாய் இருப்பது திருநீர்மலை’ என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். மேலும் திருவரங்கம், திருவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய திவ்விய தேசங்களைப் போலவே, திருநீர்மலையும் மிகப் பழமையான திருப்பதி என்பதும் இந்த ஆழ்வார் வாக்கினால் தெளிவாகின்றது.

4. பகவத்கீதை 4 : 1.1. 5. முத. திருவந் 44, 6. முமுட்சு - 141 (அவர் உரைநோக்கி அறிக.) 7. இரண். திருவந் 46.