பக்கம்:பறவைகளைப் பார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VIII. வலசை வருதலும் வளையமிடலும்

பறவைகள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொன்றிற்குச் செல்வதும், பிறகு திரும்புவதும் ஒரு புதிராகும். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் வடக்கு பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகள், ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர் காலத்திலும், குளிர் காலத் துவக்கத்திலும் தெற்கத்திய வெப்பத்தை நாடி தொலை தூரம் வலசை வருகின்றன. பிறகு இள வேனிற் காலத்திலும், கோடைத் துவக்கத்திலும் பழைய இடத்திற்குத் திரும்புகின்றன.

காலநிலைமை மோசமாக இருந்தாலொழிய குறித்த காலந் தவறாமல் அவை இப்படி வலசை வருகின்றன. அவை வரும் நாளைக்கூடத் திட்டமாகச் சொல்லி விடலாம்.

சில பறவையினங்கள் நெடுந்தூரம் செல்லாமல் பக்கத்திலேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதுண்டு. உணவு நிலைமை மாறு பாட்டாலும், வாழ்க்கை அமைதிக் குறைவாலும் எல்லாப் பறவைகளும் ஓரளவு அக்கம்பக்கங்களுக் குச்செல்லுவதுண்டு.

கோடை காலத்தில் மலை உச்சிப் பகுதியில் வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மலையடிவாரப் பகுதிக்கோ, சமவெளிப் பகுதிக்கோ வருவதுண்டு. இந்தியாவில் சித்து கங்கை சமவெளியின் அருகிலுள்ள மிக உயர்ந்த இமயமலைப் பகுதிகளிலே இவ்வாறு நடைபெறுகின்றது.

நெடுந்தூரம் வலசை செல்லுகின்ற பறவைகள் எத்தனையோ துன்பங்களையும் ஆபத்துக்களையும் துணிச்சலோடு தாங்குகின்றன. மலை, காடு சமவெளி முதலியவற்றின் மேலே வானிலே பறப்பதோடு மிகப் பெரிய நீர்ப்பரப்புக்களையும் அவை