சுயநலம்
சுயநலம்
1
[தொகு]கள்ளுக்கடை மூடுவதா? கூடவே கூடாது. ஏழு கள்ளுக்கடை குத்தகை எடுத்திருக்கிறேன். வருஷத்தில் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. சர்க்காருக்கு அதைப்போல் மூன்று பங்கு கந்தாயம் கட்டுகிறேன். கள்ளுக்கடை ஏன் மூடவேண்டும்?
2
[தொகு]நான் எப்படி சிறைக்கு வந்து சேர்ந்தேன் என்றா கேட்கிறீர்கள்? கள்ளுக்கடை வழியாகத்தான். சிறைச்சாலையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு கள்ளுக்கடையைப்போல் குறுக்கு வழி வேறு கிடையாது.
3
[தொகு]முன்னோர் அரும்பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கள் இறக்கப் பயனாகி நாசமாய்ப் போகின்றன. ஆனால் கைமேல் வரும் ரொக்கப் பணத்தை வேண்டாமென்று சொல்ல முடியுமா? கள்ளுக்கடை போய்விட்டால் நமக்குப் பிழைப்புப் போய்விடுமே! பாவம், பழியென்று பார்த்தால் இந்தக் காலத்தில் முடியாது.
4
[தொகு]என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுகிறார்கள். முட்டாள் ஜனங்கள். பைத்தியத்தின் ஆனந்தம் அவர்களுக்கு என்ன தெரியும்? அந்த ஆனந்தத்தை அநுபவிக்க வேண்டுமானால் முதலில் கள்ளுக் குடித்துப் பயிலுங்கள். அதன் மூலம் கொஞ்சங்கொஞ்சமாகப் புத்தியைக் கடந்து நின்று பழகி வந்தால், கடைசியில் என்னைப் போன்ற நிரந்தர ஆனந்த நிலைக்கு வந்து சேரலாம்.
5
[தொகு]பிரிட்டிஷ் சர்க்காரின் பெருமையே பெருமை! அந்த சர்க்கரைத் தாங்கி நிற்கும் இந்தக் கள்ளுப் பீப்பாயின் மகிமையே மகிமை! சென்னை சர்க்காரின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கள்ளுக்கடை கொடுக்கிறது. இதில் பெரும் பகுதியை ஏழை எளியவர்கள், அன்றையக் கஞ்சிக்கில்லாதவர்களிடமிருந்து வசூல் செய்கிறோம்! வேறு எந்த இலாகாவேனும் இவ்வளவு அரிய ஊழியம் செய்கிறதா? கள்ளுக்கடையை மூடினால் இவ்வளவு பணமும் அல்லவா நஷ்டமாகும்? அத்துடன் எங்களுடைய உத்தியோகமும் போய்விடும். கூடவே கூடாது.
6
[தொகு]என் புருஷன் இன்னும் கள்ளுக் கடையிலிருந்து வரவில்லை. குழந்தைகள் பசி தாங்காமல் அழுகின்றன. ஏதாவது மீத்துக்கொண்டு வருவானோ, வெறுங்கையுடன் வருவானோ, தெரியாது. கள்ளுக்கடைகளில் இடி விழாதா?
7
[தொகு]கள்ளுக்கடை மூடிவிட்டால் என்னைப் போன்ற போலீஸாருக்கு பாதிவேலை மீதியாகும். ஆனால் ஒருவேளை உத்தியோகமே போய்விட்டால்? ஆமாம்! போதிய வேலையில்லையென்று பாதிப் பேரைத் தள்ளி விடுவார்கள். கூடாது, கூடாது. கள்ளுக்கடை மூடக்கூடாது.
8
[தொகு]நான் சாக்கடையில் விழுந்து கிடக்கிறேனென்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நல்லது; உங்கள் பிள்ளைகள் அல்லது பேரர்களுக்கு இந்தக் கதி நேரிடாதென்று யார் கண்டது? கடவுள் புண்ணியத்தில் கள்ளுக் கடைகளை மட்டும் மூடாதிருக்க வேண்டும்!