அலை ஓசை/பிரளயம்/பாமா விஜயம்

விக்கிமூலம் இலிருந்து

நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் பாமா விஜயம்

ராஜம்பேட்டை கிராமச்சாலை முன்போலவே இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் படர்ந்து விளங்கியது. தபால் சாவடியும் பதினைந்து வருஷத்துக்கு முன்னால் அளித்த தோற்றத்துக்கு அதிக மாறுபாடில்லாமல் காட்சி அளித்தது. ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்துக்கொண்டு வந்தான். 'ஜிங் ஜிங்' என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது. ராஜம்பேட்டை அக்கிரகாரம் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருந்தது. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நம்முடைய கிராமங்களில் அவ்வளவாக மாறுதலைக் காண முடிவதில்லை. அப்படி மாறுதல் இருந்தால் முன்னே வீடாயிருந்த கட்டிடங்கள் இப்போது குட்டிச்சுவர்களாக மாறியிருக்கலாம். வேறு பிரமாத மாறுதலைப் பார்த்துவிட முடியாது. ராஜம்பேட்டை முன்னைப்போல அவ்வளவு கலகலப்பாயில்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில், இப்போது அங்கே பட்டாமணியம் கிட்டாவய்யர் இல்லை. அவர் பார்த்த பரம்பரைக் கிராம முனிசீப் உத்தியோகத்தைச் 'சுண்டு' என்கிற சியாமசுந்தர் பார்த்து வந்தான். சினிமா டைரக்டர் ஆகும் ஆசையையெல்லாம் அவன் விட்டு விட்டான். 'படம் எடுத்தால் சீதாவைக் கதாநாயகியாக வைத்து எடுக்க வேண்டும்; இல்லாவிடில் என்ன பிரயோஜனம்?' என்பது அவன் கருத்து. கொஞ்ச நாள் முன்பு வரையில்கூட அந்த ஆசை அவனுக்குச் சிறிது இருந்தது. சீதா இறந்த செய்தி வந்தபின் அடியோடு போய்விட்டது. பின்னர் நிம்மதியாகக் கிராம முனிசீப் வேலையைப் பார்த்து வந்தான். ஊரில் கலகலப்புக் குறைந்திருந்ததற்கு இன்னொரு காரணம் "என்ன ஓய்?" சீமாச்சுவய்யர் ஊரில் இல்லாதது. அவர் இப்போது சிறைச்சாலையில் இரண்டு வருஷம் கடுங்காவல் அநுபவித்துக் கொண்டிருந்தார். கள்ள மார்க்கெட் கேஸில் அசல் முதலாளி தப்பித்துக் கொண்டு சீமாச்சுவய்யரை மாட்டி வைத்துவிட்டான். அதைப் பற்றி ஊரில் யாரும் அனுதாபப்படவில்லை. நடுவில் பணம் அதிகமாக வந்தபோது சீமாச்சுவய்யர் யாரையும் இலட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் நடந்து கொண்டார். ஆகவே அவர் சிறைப்பட்டபோது கிராமத்தார், "என்ன ஓய்? சீமாச்சு உயிரோடு திரும்பி வருவானா?" என்று கேட்டுக் கொள்வதுடன் திருப்தியடைந்தார்கள்.

கிட்டாவய்யர் வீட்டுக் கூடத்தில் லலிதா உட்கார்ந்து குழந்தை பட்டுவின் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். சரஸ்வதி அம்மாள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பாலசுப்பிரமணியன் ஏதோ வாரப் பத்திரிகையில் வந்திருந்த காந்தி மகான் கதையை எழுத்துக் கூட்டி இரைந்து படித்துக் கொண்டிருந்தான். தபால் ரன்னர் வரும் 'ஜிங் ஜிங்' சத்தம் கேட்டதும் லலிதாவுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாகிக் கண்கள் ஈரமாயின. "லலிதா! பட்டுவின் வயதில் நீ தபால் கட்டு வரும் சத்தம் கேட்டதும் எழுந்து தபாலாபீஸுக்கு ஓடுவாயே; ஞாபகமிருக்கிறதா?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "ஞாபகம் இல்லாமல் என்ன? நன்றாய் இருக்கிறது. இப்போது கூடத் தபாலாபீஸுக்குப் போய் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரத் தோன்றுகிறது!" என்றாள் லலிதா. "நீ அப்படிப் போனாலும் போவாய்! உன் நெஞ்சுத் தைரியம் யாருக்கு வரும்?" என்றாள் தாயார். அரை மணி நேரத்திற்குப் பிறகு வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்து ஓடினாள். ஒரு கணம் ஒருவேளை தபால்கார பாலகிருஷ்ணனாயிருக்குமோ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலேயே அந்தப் பழைய பாலகிருஷ்ணன்தான்! "நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, அம்மா! ரொம்ப சந்தோஷம், எனக்கும் டவுன் வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு வழியாக இங்கேயே வந்துவிட்டேன்" என்றான் பாலகிருஷ்ணன். "கொஞ்ச நாளாக உன்னை தேவபட்டணத்தில் காணோமே என்று பார்த்தேன்! குழந்தைகள் சௌக்கியமா?" என்றாள் லலிதா. "கடவுள் புண்ணியத்திலே சௌக்கியந்தான். ஆனால் என்ன சௌக்கியம் வேண்டிக் கிடந்தது? அப்பேர்ப்பட்ட காந்தி மகாத்மாவையே சுட்டுக்கொன்று விட்டார்கள். இனிமேல் யார் சௌக்கியமாயிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?" என்றான் பாலகிருஷ்ணன்.

பிறகு, "இந்தாருங்கள் தபால்!" என்று ஒரு கடிதத்தை லலிதாவிடம் கொடுத்துவிட்டுப் போனான். லலிதா கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். அவளுடைய கணவனிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர் குழந்தைகளின் ஷேம லாபங்களை விசாரித்த பிறகு எழுதியிருந்ததாவது:- "ஒரு அதிசயமான சமாசாரம் சொல்லப் போகிறேன். ஆச்சரியப்பட்டு மூர்ச்சையாகி விழுந்து விடாதே! உன் தமையன் சூரியா வந்திருக்கிறான். அவனுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனுடைய மனைவியைப் பார்த்ததும் உனக்கு ஒருவேளை ஏமாற்றம் உண்டாகலாம். விஷயம் என்னவென்று கடிதத்தில் எழுத விரும்பவில்லை. நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள் மூன்று பேரும் நாளை ரயிலில் புறப்பட்டு அங்கே வருகிறோம்." இதைப் படித்ததும் லலிதா மிக்க கலக்கம் அடைந்தாள். அவள் முக்கியமாக ராஜம்பேட்டைக்கு வந்தது தன் தாயாரிடம் சூரியாவின் கலியாணத்தைப் பற்றிச் சொல்வதற்காகத்தான். ஆனால் இன்றுவரை அவளுக்குத் தைரியம் வரவில்லை. இனிமேல், தள்ளிப்போட முடியாது. அவர்கள் நாளைக்கு வந்துவிடுவார்களே! சரஸ்வதி அம்மாளிடம் லலிதா மாப்பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது பற்றி முதலில் சொன்னாள். சூரியாவையும் அவர் அழைத்து வருவது பற்றிப் பிறகு சொன்னாள். சூரியா கலியாணம் செய்து கொண்டு மனைவியையும் தன்னுடன் அழைத்து வருவதைப் பற்றிக் கடைசியாகக் கூறினாள். சரஸ்வதி அம்மாள் வியப்படைந்தாள்; மகிழ்ச்சியடைந்தாள்; பிறகு திடுக்கிட்டுப் போனாள். "கலியாணமா? அது என்ன? நம் ஒருவருக்கும் சொல்லாமலா? இப்படியும் உண்டா? பெண் யாரோ, என்னமோ, தெரியவில்லையே?" என்று புலம்பி அங்கலாய்த்தாள். "அதென்னமோ, போ, அம்மா! நானும் முன்னாலேயே கேள்விப்பட்டேன், உண்மையிராது என்று நினைத்தேன். இப்போது வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது" என்றாள்.

"என்னடி உண்மை? நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்றாள். "சூரியா கலியாணம் செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏதோ அங்கஹீனம் என்று கேள்வி. சிலர் 'ஒரு கண்ணில்லை' என்கிறார்கள். சிலர் 'ஒரு கையில்லை' என்கிறார்கள். சூரியாவின் காரியமே இப்படித்தான். என்னமோ, போ, அம்மா! ரொம்ப விசாரமாயிருக்கிறது!" "இதென்னடி அநியாயம்? இப்படியும் ஒரு பிள்ளை செய்வானா? அது நிஜமாயிருக்குமாடி? நிஜமாயிருந்தால் நாலு பேர் முகத்தில் எப்படி விழிப்பேன்!" என்று சரஸ்வதி அம்மாள் புலம்பினாள். பட்டாபிராமனும், சூரியாவும், சூரியாவின் மனைவியும் ஜல்ஜல் என்று சதங்கை சப்தித்த மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். லலிதா பரபரப்புடன் ரேழிக்குப் போனாள். தாரிணியைப் பார்ப்பதற்கு அவள் மனது துடிதுடித்தது. எவ்வளவுதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் சமயத்தில் கேட்கவில்லை. நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது. தாரிணியைப் பார்த்ததும் அம்மா என்ன ரகளை செய்யப் போகிறாளோ என்ற பீதி வேறு இருந்தது. முதலில் பட்டாபியும் சூரியாவும் இறங்கினார்கள், பிறகு ஒரு ஸ்திரீ இறங்கினாள். இது என்ன விந்தை? எதிர்பார்த்தபடி இல்லையே! இரண்டு கையிலும் இரண்டு கைப் பெட்டியுடன் இறங்குகிறாளே? கண்களிலும் ஊனம் இல்லையே? கொஞ்சம் நவநாகரிகத்தில் அதிகம் மூழ்கினவளாகக் காணப்பட்டாள். மற்றபடி அங்கஹீனம் ஒன்றும் தெரியவில்லை. பின்னால் ஒருவேளை தாரிணி இறங்குகிறாளோ என்று பார்த்தாள். அப்புறம் யாரும் இறங்கவில்லை. வந்தவர்களை முகமன் கூறி க்ஷேமம் விசாரித்து உள்ளே அழைத்துப் போனாள். "சூரியா இந்த லேடி யார்? நீ எழுதியிருந்தாயே?...." "நான் எழுதியிருந்தது வேறு, இந்தப் பெண்ணரசிதான் என்னை மணக்க முன்வந்த என் மனைவி திவான் ஆதிவராகாச்சாரியார் மகள்; இவள் பெயர் பாமா. எங்களுக்குக் கலியாணம் ஆகி இரண்டு வாரம் ஆகிறது. 'ஹனிமூன்' வந்திருக்கிறோம்" என்றான் சூரியா. லலிதாவின் மனம் நிம்மதி அடைந்தது. லலிதாவின் தாயாரும் தன் மாட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒரு மாதிரி பரட்டைத் தலைப் பிசாசு மாதிரி இருந்தாலும் லலிதா சொன்னதுபோல் அங்கஹீனமாயில்லை என்பது குறித்து மனதிற்குள்ளே திருப்தி அடைந்தாள்.

பிறகு லலிதா சூரியாவை தனியாக சந்தித்துப் பேசியபோது அவன் கூறியதாவது:- "உனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தானிருக்கும். எனக்கோ அதைவிட ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஏமாற்றியவள் அத்தங்கா தாரிணி அல்ல! சௌந்தரராகவன்தான். அவனுடைய சுபாவத்தை அறிந்திருந்த அனைவரையும் ஏமாற்றிவிட்டான். தாரிணியைத் தான் கலியாணம் செய்து கொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லை என்றும் சத்தியம் செய்தான். மேலும் சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும் தன்னிடமும் அதே விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள் என்றும் வற்புறுத்தினான். தாரிணி அநேக ஆட்சேபங்களைச் சொல்லியும் கேட்கவில்லை. 'டில்லியில் உங்களுடைய உத்தியோக வாழ்க்கைக்கு இடைஞ்சலாயிருக்கும்' என்று தாரிணி சொன்னபோது, உத்தியோகத்தை விட்டுவிட முன்னமே தீர்மானித்து விட்டதாகப் பதில் சொன்னான்! லலிதா! உண்மையில் தாரிணிக்கும் ராகவன் பேரில் இருதய பூர்வமான அன்பு என்று தெரிந்து கொண்டேன். ஆகவே நான் விட்டுக் கொடுத்து அவர்களுடைய திருமணத்தையும் கூட இருந்து நடத்தி வைத்தேன். சௌந்தரராகவன் உண்மையாகவே உத்தியோகத்தை விட்டுவிட்டான். இருவரும் வஸந்தியை அழைத்துக்கொண்டு ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். ரஜினிபூர் ராஜ்யம் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட்டாலும், ரஜினிபூர் ராணியம்மாளுக்கு ஏராளமான சொந்த சொத்து இருக்கிறது. தாரிணியின் பேரில் அவளுக்கு மிக்க பிரியம். இரண்டு பேரும் ரஜினிபூருக்கு வந்து பஞ்சாப் அகதிகளுக்கு உதவி செய்து குடியும் குடித்தனமுமாக்க முயலவேண்டும் என்றும், அதற்காகத் தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைப்பதாகவும் ரஜினிபூர் ராணியம்மாள் சொன்னாள். அதனால் இருவரும் ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். குழந்தை வஸந்தியையாவது நான் என்னுடன் ராஜம்பேட்டைக்கு அழைத்துப் போவதாகச் சொன்னேன். அந்தக் குழந்தையும் கண்டிப்பாக வர மறுத்துவிட்டாள்!"

இந்தக் கடைசி வாக்கியங்களை மட்டும் கேட்டுக் கொண்டு வந்த சரஸ்வதி அம்மாள், "ரொம்ப நல்லதாய் போயிற்று. அவளுடைய தாயார் இங்கே படுத்திய பாடெல்லாம் போதாதா பெண் வேறே வந்து கலகம் பண்ண வேண்டுமா?" என்றாள். அம்மாவின் சுபாவம் தெரிந்தவர்களானதால் மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டார்கள். பிறகு லலிதா, "இந்தப் பெண்ணை எப்படிப் பிடித்துக் கலியாணமும் செய்து கொண்டாய்?" என்று கேட்டாள். "முதலில் இவள் பேரில் எனக்கு மிக்க வெறுப்பு இருந்தது. இவளுடைய குணாதிசயங்களைப் பற்றி மிகவும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். தாரிணிதான் இவளைப்பற்றி எனக்குச் சொன்னாள். முதன் முதலில் என்னைப் பார்த்ததிலிருந்து இவளுக்கு என் பேரில் பிரியம் என்றும் சொன்னாள். அது மட்டுமல்ல; 1942 - இயக்கத்தின் போது இவள் சர்க்கார் உத்தியோக கோஷ்டியுடன் வெளிப்படையாகப் பழகிக் கொண்டே உள்ளுக்குள் இயக்கத்துக்கு மிக்க உதவி செய்தாளாம். தாரிணியைப் போலீஸார் கைது செய்யாமல் இவள்தான் ரொம்ப நாள் பாதுகாத்து வந்தாளாம். என்னைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்கும் இவள்தான் உதவி புரிந்தாளாம். இவ்வளவுக்கும் மேலே, இவள் பஞ்சாபுக்கு முன்னதாகவே போய்ச் சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வர முயன்றாளாம். இதையெல்லாம் கேட்டதும் என் மனம் அடியோடு மாறிவிட்டது. பேசிப் பார்த்ததில் என்னுடைய இலட்சியமும் இவளுடைய இலட்சியமும் ஏறக்குறைய ஒன்று என்று தெரிந்தது. இவளுடைய வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒன்றும் முடிவு செய்யாதே, லலிதா! உன் மன்னியுடன் பழகிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லு!" வெளியே சென்றிருந்த சியாமசுந்தர் திரும்பிவந்து அண்ணாவையும் மன்னியையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சூரியாவின் கலியாணம் ஆகிவிட்டதால், தன்னுடைய கலியாணத்துக்குத் தடை நீங்கி விட்டதல்லவா? "அண்ணா! ரிடர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தாயா அல்லது கொஞ்சநாள் இங்கே இருப்பதாக உத்தேசமா?" என்று கேட்டான். "நீ எங்களை விரட்டியடித்தாலொழிய ரொம்ப நாள் இங்கே இருப்பதாக உத்தேசம்.

தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. காந்தி மகாத்மா இறுதியாக ஆத்மத் தியாகம் செய்து நாட்டில் அமைதியையும் ஢லைநாட்டிவிட்டார். இனிமேல் தேசத்தில் செய்யவேண்டியதெல்லாம் பொருள் உற்பத்தியும் உணவு உற்பத்தியும்தான். முதலில் நம்முடைய சொந்த கிராமத்திலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்திருக்கிறேன். உழுது பாடுபடுகிறவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்..." "இப்போது இங்கேயெல்லாம் அவ்வளவு கிஸான் தொந்தரவு இல்லை. கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவன் கிஸான் சங்கத்தின் பணம் ஐயாயிரத்தைச் சூறையிட்டுக் கொண்டுபோய் விட்டான். அதிலிருந்து இயக்கம் படுத்துவிட்டது. இனிமேல், நீ ஆரம்பித்தால்தான் உண்டு!" "கிஸான் இயக்கம் இல்லை என்று திருப்திப்படுவதில் பயனில்லை, சுண்டு! உழவர்கள் மனத்திருப்தியும் உற்சாகமும் அடைய வேண்டும், தாங்கள் உற்பத்தி செய்வதில் தங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறது என்று அவர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் என்றைக்கிருந்தாலும் கலகமும் குழப்பமும்தான். உணவு உற்பத்தியும் தடைப்படும். ஆகையால் முதலில் உழைப்பாளிகளைச் சரிக்கட்டிக்கொள்ளப் போகிறேன். பிறகு விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு காட்டப் போகிறேன். என்னுடைய மனைவி பாமாவும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்லுகிறாய், சுண்டு?" "சொல்லுவதென்ன அண்ணா? நம்முடைய நிலம் முழுவதையும் பிரித்து, உழவர்களுக்குக் கொடுத்துவிட்டாலும் எனக்குச் சம்மதந்தான். நீ ஊர் ஊராக அலையாமல் இந்த ஊரிலேயே இருந்தால் போதும்! நான் எங்கேயாவது போய் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்!" என்றான் சுண்டு. "அப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய காலமும் வரும். அதற்கும் நாம் தயாராகத்தானிருக்கவேண்டும். வேறு வேறு தொழில்கள் செய்து பிழைக்க இப்போதிருந்தே நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்!" என்றான் சூரியா. சுண்டு, 'சினிமா டைரக்ஷன் வேலை இருக்கவே இருக்கிறது' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

அவர்களுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் அங்கு வந்து, "நான் கண் மூடும் வரையில் பொறுத்திருங்கள்; அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள்" என்றாள். "நாங்கள் காத்திருக்கலாம், அம்மா! ஆனால் பூகம்பமும் புயலும் எரிமலையும் பிரளயமும் காத்திருக்குமா?" என்றான் சூரியா. லலிதா, "பூகம்பம், பிரளயம் என்றெல்லாம் நீ சொல்லும் போது, அத்தையும் சீதாவும் அடிக்கடி 'காதில் அலை ஓசை கேட்கிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. அவர்களுக்கு என்ன சித்தப் பிரமையா அல்லது அவர்களுடைய காதில் ஏதாவது கோளாறா?" என்று கேட்டாள். "பிரமையா, காதில் ஏதேனும் கோளாறா என்று எனக்குத் தெரியாது; அல்லது ஏதேனும் ஒரு தெய்வீகச் சக்தியினால், வரப்போகும் பயங்கர விபத்துக்களின் அறிகுறி அவர்களுடைய மனசில் தோன்றியதா என்றும் தெரியாது. பஞ்சாபிலிருந்து தப்பி ஓடிவந்து நதியில் முழுகியபோது சீதாவின் காது அடியோடு செவிடாகி ஒன்றுமே கேட்காமல் போய்விட்டது. உரத்த பயங்கரமான அலை ஓசை போன்ற சத்தம் மட்டும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்ததாம். ஆனால் காந்திஜியின் புனித உடல் தகனமான அன்று சீதாவின் காது கேட்கத் தொடங்கியது. 'ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக' என்ற மகாத்மாவின் மனதுக்கு உகந்த கீதந்தான் முதலில் அவள் காதில் கேட்டதாம். இது ஒரு சுப சூசகம் என்று எனக்குத் தோன்றுகிறது. மகாத்மாவின் மகா தியாகத்துக்குப் பிறகு இந்தப் பெரிய தேசத்துக்குப் பெரும் விபத்து ஒன்றும் கிடையாது! இனிமேல் சுபிட்சமும் முன்னேற்றமுந்தான்!" என்றான் சூரியா. அந்தத் தேசபக்தத் தியாகியின் விருப்பம் நிறைவேறுமாக!


கல்கியின் அலை ஒசை முற்றிற்று