சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/பயங்கரச் செய்தி

விக்கிமூலம் இலிருந்து
52. பயங்கரச் செய்தி

சக்கரவர்த்தியின் தூதன் சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது சபையில் நிசப்தம் நிலவியது.

வந்தவன் நெடிதுயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமளித்தான். போர்க்களத்திலிருந்து நேரடியாக வந்தவனாகக் காணப்பட்டான். அவனது தலையிலும் முகத்திலும் காயங்களுக்குக் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவன் உடுத்தியிருந்த துணிகள் இரத்தக் கரையினால் சிவந்திருந்தன.

என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறானோ என்ற ஆவலானது எல்லோருடைய மனத்திலும் குடிகொண்டு வேறு வகை எண்ணங்களுக்கே இடம் இல்லாமல் செய்தது. சபையிலிருந்த அத்தனைபேரின் கண்களும் இமை கொட்டாமல் அத்தூதனை நோக்கின.

அப்படிப் பார்த்தவர்களில் தளபதி பரஞ்சோதியும் ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. மற்றவர்களுடைய மனத்தில் குடிகொண்டிருந்த ஆவல் அவருடைய மனத்திலும் இருந்ததாயினும் அதோடு இன்னொரு வியப்பும் அவர் மனத்தில் ஊசலாடியது. அது இத்தூதனை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்ச்சிதான்.

தூதன், சபையில் உள்ளவர்களையெல்லாம் ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தான். கடைசியில் அவனுடைய கண்கள் குமார சக்கரவர்த்தியின் முகத்திற்கு வந்து அங்கேயே ஸ்திரமாக நின்றன. "பல்லவ குமாரா! தங்கள் தந்தையிடமிருந்து மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன், செய்தியை இந்தச் சபையிலேயே சொல்லலாமல்லவா?" என்று கேட்டான்.

மாமல்லர் முதன் மந்திரியின் முகத்தைப் பார்த்தார். அந்தக் குறிப்பையறிந்த சாரங்கதேவபட்டர், "சக்கரவர்த்தியின் செய்தியை இங்கேயுள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதுதான்! இங்கேயே தாராளமாகச் சொல்லலாம்" என்றார்.

"அப்படியானால் கேளுங்கள், நான் கொண்டு வந்திருக்கும் செய்தி மிகப் பயங்கரமானது. ஆயினும் சொல்லியே தீரவேண்டும்.. பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி சிறைப்பட்டார்!.."

களங்கமற்ற ஆகாசத்திலிருந்து திடீரென்று பேரிடி விழுந்தது போலிருந்தது அந்தச் சபையிலிருந்தவர்கள் அனைவருக்கும். சிலர் "என்ன? என்ன?" என்று அலறினார்கள். சிலர் ஆசனத்திலிருந்து குதித்து எழுந்தார்கள், சிலர் திறந்த வாய் மூடாமல் திகைத்த பார்வையுடன் தூதனைப் பார்த்தவண்ணமிருந்தார்கள்.

மாமல்லர் பயங்கரமான ஒரு சிரிப்புச் சிரித்தார். அது சபையிலிருந்த அனைவருக்கும் மயிர்க் கூச்சை உண்டாக்கிற்று.

"சக்கரவர்த்தி சிறைப்பட்டாரா? எப்படி? எப்போது? யார் சிறைப்படுத்தினார்கள்?" என்று மாமல்லர் கர்ஜித்தார். அவருடைய கரம் தன்னையறியாமல் உடைவாளை உருவியது.

"வாதாபி சைனியத்தின் முன்னணிப் படையினால் சக்கரவர்த்தி சிறைப்படுத்தப்பட்டார். நேற்று மாலையிலே தான்? தெற்கேயிருந்து திரும்பியவர் வாதாபி சைனியத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்காக நேரே வடதிசை சென்றார். போன இடத்தில் எதிர்பாராதவிதமாக வாதாபி வீரர்களால் சிறைப்படுத்தப்பட்டார். பல்லவ குமாரா? சக்கரவர்த்தி என்னிடம் தங்களுக்குச் சொல்லியனுப்பிய செய்தி இதுதான்: 'என் மகன் தன்னுடைய இணையில்லா வீரத்தைக் காட்டவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது; வாதாபி சைனியத்தை முறியடித்துப் புலிகேசியைக் கர்வபங்கம் செய்து என்னை விடுதலை செய்ய வேண்டிய பொறுப்பு என் வீரப் புதல்வனைச் சேர்ந்தது! மாமல்லனுக்கு இது அசாத்தியமான காரியமல்ல! இந்தச் செய்தியைத்தான் தங்கள் தந்தையிடமிருந்து கொண்டுவந்தேன்" என்று கூறி நிறுத்தினான் தூதன்.

மாமல்லர் அப்போது சபையிலிருந்தவர்கள் அனைவரையும் ஒரு தடவை கண்களில் அக்னிஜுவாலை எழும்படி பார்த்துவிட்டு, "சேனாதிபதி! இப்போதாவது நமது படைகளைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோகச் சம்மதிப்பீரா? மந்திரிகளும் அமைச்சர்களும் என்ன சொல்கிறீர்கள்? கோட்டத் தலைவர்களின் அபிப்பிராயம் என்ன?" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கேட்டுவிட்டு, தமக்குப் பின்னால் நின்ற தளபதி பரஞ்சோதியைத் திரும்பிப் பார்த்து, "தளபதி! நீர்கூட ஏன் இப்படி ஸ்தம்பித்து நிற்கிறீர்? எல்லாரும் அசையாத ஜடப் பொருள்கள் ஆகிவிட்டீர்களா?" என்றார்.

அப்போது முதல் அமைச்சர் எழுந்து, "இந்தத் தூதன் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று வினவினார்.

தூதன் உடனே கையிலிருந்த சிங்க இலச்சினையைக் காட்டி "இதுதான் ஆதாரம்; என் முகத்திலும் உடம்பிலும் உள்ள காயங்கள்தான் அத்தாட்சி!" என்றான்.

"ஆஹா! மகேந்திர சக்கரவர்த்தி பகைவர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஆதாரம் கேட்டுக்கொண்டு காலம் கடத்துகிறீர்கள் அல்லவா! தளபதி வாரும், நாம் போகலாம்!" என்று மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார்.

ஆனால், தளபதி பரஞ்சோதி ஏதோ ஒரு மனக் குழப்பத்தில் ஆழ்ந்தவராய்க் காயக் கட்டுக்களுடன் நெடிதுயர்ந்து நின்ற தூதரின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

முதன் மந்திரி சாரங்கதேவபட்டர், "இந்தத் தூதனை இதற்கு முன்னால் நம்மில் யாராவது பார்த்ததுண்டோ?"

"தூதா! நீ யார்?" என்று கேட்க, தூதன் கூறினான்.

"நான் யாரா? பல்லவ சக்கரவர்த்தியின் அந்தரங்க ஒற்றன். பல்லவ ஒற்றர் படையில் சத்ருக்னருக்கு அடுத்த பதவி வகிப்பவன். தளபதி பரஞ்சோதி என்னை அடிக்கடி பார்த்திருக்கிறார்! தளபதி! என்னைத் தெரியவில்லையா? இந்தக் காஞ்சி நகருக்கு உம்மை அழைத்து வந்த நாகநந்தி நான்தான் என்று தெரியவில்லையா? ஆயனரும் அவர் மகளும் தெரிந்தோ தெரியாமலோ வாதாபி அரசனுக்கு ஒற்று வேலை செய்வதாகச் சந்தேகித்துச் சக்கரவர்த்தி என்னை அவர்களுக்குக் காவலாகப் போட்டார். ஆயனர் புலிகேசிக்குக் கொடுத்த இரகசிய ஓலையை எடுத்துக்கொண்டு நாகார்ஜுன மலைக்கு நீர் கிளம்பிச் சென்றீர். சக்கரவர்த்திக்கு அதை நான் தெரியப்படுத்தியதின் பேரில், அந்த ஓலையைச் சக்கரவர்த்தி உம்மிடமிருந்து பறித்துக்கொண்டார். தளபதி! இதெல்லாம் உண்மையா, இல்லையா?" என்று தூதன் கம்பீரமாகக் கேட்டான்.

தளபதி பரஞ்சோதியின் தலை சுழன்றது. சில சில விஷயங்களை எண்ணிப் பார்க்கும்போது, ஒருவேளை அத்தூதன் கூறியது உண்மையாயிருக்கலாமென்று தோன்றியது. தூதன் மேலும் சொன்னான்: "ஆயனருடன் குண்டோ தரன் என்ற பெயருடன் வாதாபி ஒற்றன் ஒருவன் இருந்து வந்தான். அவன் நேற்று ஆயனருடைய செய்தியுடன் வாதாபி சைனியத்தைச் சந்திப்பதற்காகச் சென்றான். அவனைத் தடுப்பதற்காகச் சக்கரவர்த்தியும் நானும் தொடர்ந்து போனபோது எதிர்பாராதவிதமாகச் சளுக்க வீரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். கடவுள் அருளால் நான் தப்பி வந்தேன். அவ்வளவுதான் விஷயம். சக்கரவர்த்தி இன்னும் சில பணிகளை எனக்கு இட்டிருக்கிறார். அவற்றை நிறைவேற்றுவதற்கு நான் சத்ருக்னரைத் தேடிப் போக வேண்டும். விடை கொடுங்கள்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். நன்கு ஆலோசித்து எது உசிதமோ அவ்விதம் செய்யுங்கள்!"

இவ்வாறு கூறிவிட்டு, தூதன் சபா மண்டபத்தை விட்டு வெளியே சென்றான். மேலும் அவனை ஏதேனும் கேட்கவோ அவனைத் தடுத்து நிறுத்தவோ, யாருக்கும் தோன்றவில்லை. சபையிலிருந்த அனைவரும் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்.

மாமல்லரின் நெஞ்சில் ஆயிரம் தேள்கள் கொட்டிக் கொண்டிருந்தன. ஆகா! ஆயனரும் அவர் மகளும் வாதாபிக்கு ஒற்று வேலை செய்கிறார்களா? அப்படிப்பட்டவர்களையா நாம் வெள்ளத்திலிருந்து காப்பாற்றினோம்? அந்தச் சிவகாமியிடமா நாம் எல்லையில்லாக் காதல் வைத்தோம்? அவர்களாலேயா இப்பொழுது மகேந்திர பல்லவர் பகைவர்களிடம் சிறைப்பட்டிருக்கிறார்?....

அந்தச் சபையில் இருந்தவர்களில் அப்போது மாமல்லரின் மன வேதனையை அறிந்துகொள்ளக் கூடியவர் தளபதி பரஞ்சோதி ஒருவர்தான் இருந்தார். அவர் மாமல்லரின் கரத்தைப் பற்றிக் கொண்டு, "இன்னும் என்ன யோசனை! வாருங்கள், போர்க்களத்துக்குப் புறப்படலாம்! அந்த வாதாபி ராட்சதர்களை முறியடித்து நிர்மூலம் செய்துவிட்டுச் சக்கரவர்த்தியை மீட்டுக்கொண்டு வரலாம்! மாமல்லரே! புள்ளலூர்ச் சண்டையை நினைவு கூருங்கள்!" என்றார்.

இதைக்கேட்ட சேனாதிபதி கலிப்பகையாரும் பிரமையிலிருந்து விடுபட்டவராய், "ஆம்; தளபதி கூறுவது நியாயந்தான் இனி யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. படைகள் புறப்பட கட்டளையிடுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.

சபையிலிருந்த அத்தனை பேரும் ஏக காலத்தில் எழுந்து நின்று, "மகேந்திர பல்லவர் வாழ்க!" "அரக்கன் புலிகேசி அழிக!" என்று பலவகையான வீர கோஷங்களைச் செய்தார்கள்.

இந்த கோஷங்களுக்கிடையில் சபாமண்டபத்தின் வாசலிலும் ஏதோ குழப்பமான சத்தங்கள் எழுந்தன. குதிரையின் காலடிச் சத்தம், வேல்களும் வாள்களும் உராயும் சத்தம், அதிகாரக் குரலில் யாரோ கட்டளையிடும் சத்தம், தடதடவென்று பலர் ஓடுகிற சத்தம் - இவை எல்லாம் கலந்து வந்தன.

ஆம், அச்சமயத்தில் சபாமண்டபத்தின் வாசலில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்துகொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தி சிறைப்பட்ட செய்தியைக் கொண்டு வந்த தூதன் மண்டபத்தின் வாசலுக்கு வந்தபோது, அவ்விடம் குதிரைமீது ஆரோகணித்தவராய்ச் சாக்ஷாத் மகேந்திர பல்லவரே வந்து சேர்ந்தார். மண்டபத்தின் வாசலில் காவல் செய்த வீரர்களைப் பார்த்து அந்தத் தூதனைப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி சக்கரவர்த்தி கட்டளையிட, வீரர்கள் அக்கணமே அவனை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டார்கள்!