பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னாருக்கு எனது கருத்தினைக் குறித்துக் கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை. ஆனால், “அந்தாதி” வந்து சேர்ந்தது. ஒரே நாளில் உபவாசம் இருந்து எழுதிய அந்தாதி இது. எந்தை பாலமுருகப் பெருமானே வேல் தாங்கிய கோலமுடன், அன்னார் நூல் தாங்கிய திருநாவில் நடம்புரிந்த விந்தையை என்னென்பேன் !

அன்று அபிராமிக்கு அந்தாதி பாடிப் புகழுடம்பு எய்தினார் அபிராமபட்டர். மறுபிறவி கொண்டது போல அமைந்திருக்கிறது, இந்த இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.

தொட்ட இடமெல்லாம் தோகைமயில் முருகனின் சங்கத்தமிழ்ச் சிரிப்பு நம்மை அவனோடு சங்கமிக்கச் செய்கிறது.

விட்ட குறையோ ? தொட்ட குறையோ ? எனது இந்த எளிமையான பணிக்கு இந்நூல் கிரீட கீதம் இசைக்கிறது. சுட்ட பசும் பொன்னாய்த் திகழும் ஆத்மாக்களுக்கு இது ஓர் அருமருந்து. நெஞ்சுக்கு அறிவுறுத்தலும், முறையீடும், வேண்டுகோளும், கழிந்ததற்கு இரங்கலுமாகவும், அகத்துறையிலும் அமைந்துள்ள இப்பாமலர்கள் மணம் கமழ்ந்து மனத்தை நெகிழச் செய்பவை.

“இந்த நூல் ஓதுவார் இன்புறுக” என்கிறார் நம் கி. வா. ஜ. ஆம்! இந்த நூலை இயன்றால் தினமும் ஓதுங்கள். இயலவில்லையானால் ஒவ்வொரு மாதமும் வளர்பிறைச் சஷ்டியில் ஓதுங்கள். எவ்லா நலன்களையும் இனிதே பெறுவீர்கள்.

நமது சமகாலத்தில் இப்படி ஓர் அற்புதச் சொற் சிற்பியைக் கண்டதில் நாம் பெருமை அடைகிறோம்.

இரத்தினகிரி வாழ் பாலமுருகன், வாகீச கலாநிதிக்கு எல்லா நலன்களையும் அருளப் பிரார்த்திக்கிறேன்.

இறை நலம் நிரம்பிட வாழ்த்தும்
பாலமுருகனடிமை