பாரதியாரின் தேசிய கீதங்கள்/34. தொண்டு செய்யும் அடிமை
Appearance
34. தொண்டு செய்யும் அடிமை
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது)
- நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு
- மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு
- தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு
- சுதந்திர நினைவோடா?
- பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு
- பாத்திர மாவாயோ? (தொண்டு)
- ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
- சமயச் சண்டை போச்சோ?
- நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
- நிற்கொ ணாது போடா! (தொண்டு)
- அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
- ஆண்மை தாங்கி னாயோ?
- பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
- பேணு தலொழித் தாயோ? (தொண்டு)
- கப்ப லேறு வாயோ? - அடிமை
- கடலைத் தாண்டு வாயோ?
- குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
- கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு)
- ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
- உடல்பில் வலிமை யுண்டோ ?
- வெற்று ரைபே சாதே! அடிமை!
- வீரியம் அறி வாயோ? (தொண்டு)
- சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
- சிறுமைக் குணங்கள் போச்சோ?
- சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
- சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு)
- வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
- வெருவலை ஒழித் தாயோ?
- உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்
- உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு)
- நாடு காப்ப தற்கே - உனக்கு
- ஞானம் சிறது முண்டோ ?
- வீடு காக்கப் போடா! - அடிமை
- வேலை செய்யப் போடா! (தொண்டு)
- சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
- செய்திட விரும்பு வாயோ?
- ஈன மான தொழிலே - உங்களுக்கு
- இசைவ தாகும் போடா! (தொண்டு)