உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

45


ஒருநேரத்தில் டொமினிகன் நாடு ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலன் ஆட்சியின் கீழ் அகப்பட்டுத் தத்தளித்து இருந்தது. அந்த நாட்டில் சுதந்திரம் என்ற பேச்சே இல்லை. பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு, மாடுகள் போல மக்கள் நடத்தப்பட்டார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை அந்த நாட்டில் கிடையாது ‘ம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம் என்ற நிலையில் மிருகங்களுக்கும் மக்களுக்குமிடையே வேற்றுமையே இல்லை. அந்த அளவிற்கு நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நீடித்துக் கொண்டிருந்தது.


ட்ருஜில்லோ கொடுங்கோலர்கள் ஜூவான் பாஷை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நாடு கடத்தினார்கள். புரட்சிக்காரரை நாட்டைவிட்டுத் துரத்திவிட்டால், நாட்டில் புரட்சியே அஸ்தமித்துவிடும் என்று அந்தக் கொடுங்கோலர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நாடு கடத்தப்பட்ட ஜூவான் பாஷ் தன்னைப் போல நாடு கடத்தப்பட்ட நாட்டு பற்றுள்ள வீரர்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்து புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்கினார். அங்கிருந்த படியே தாய்நாட்டின் கொடுங்கோலர்கள் மிரண்டு பீதி அடையுமாறு சுதந்திர இயக்கத்தை நடத்தினார். இவ்வாறு, கால் நூற்றாண்டு காலமாக சுதந்திரப் போரை ஜூவான் பாஷ் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றார். டொமினிகன் நாடு விடுதலை பெற்றது.